நடிகர் நானா படேகர் மீதான தனது பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்திருப்பதை அடுத்து ஆவேசமாக கருத்துத் தெரிவித்துள்ளார் தனுஸ்ரீ தத்தா.
பிரபல இந்தி நடிகர் நானா படேகர். இவர் தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். ‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார் என்று மும்பை ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் தனுஸ்ரீ.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை நேற்று தாக்கல் செய்தனர். அதில், நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் இதனால் அவர் மீதான வழக்கை தொடர்ந் து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தனுஸ்ரீ தத்தா கூறும்போது, ‘’இது வெறுப்பாக இருக்கிறது. நானா படேகர், தான் தவறேதும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார். எங்கள் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் போலீசாரிடம் வாக்குமூலங்கள் கொடுக்காதபடி அழுத்தம் கொடுக்கப் படுகிறார்கள் என்றும் ஏற்கனவே சில பேட்டிகளில் தெரிவித்திருந்தேன். சம்பவம் நடந்தபோது பலர் பார்த்தனர். 10 சாட்சிகள் இருந்தனர். ஆனால், ஒன்றரை அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் மிரட்டப்பட்டதால் வாக்குமூலம் அளிக்க முன் வரவில்லை.
போலீசார் பெற்ற வாக்குமூலங்கள் அனைத்தும் அவரது நண்பர்களிடம். அவர்கள் எப்படி நடந்ததை சொல்வார்கள்? எனது தோழி ஒருத்தியும் அதில் இருந்தார். அவர் மிரட்டப்பட்டதை அடுத்து, எனக்கு ஞாபகம் இல்லை என்று முடித்துக்கொண்டாள். இப்போது கடவுளின் தீர்ப்பை தான் நம்பி கொண்டிருக்கிறேன். நானா படேகருக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.