ரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று!

ரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று!
ரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று!
Published on

'சரியான நம்பியார் நீ' என்று வில்லத்தனத்திற்கு உவமை சொல்லும் அளவிற்கு புகழ்பெற்ற வில்லன் நம்பியார். காமெடி என்றால் கவுண்டமணி-செந்தில் என்று நாம் ஒரு கூட்டணியை சொல்லிவிடுவோம். அதுபோலவான கூட்டணிதான், எம்ஜிஆர்-நம்பியார். ஹீரோ - வில்லன் கூட்டணி. எம்ஜிஆர் ஹீரோவாக வெற்றிபெற்றார் என்றால் அவரைத் தூக்கிவிட்ட ஒரு வில்லனாகவே நம்பியார் இருந்தார். 'எப்போதுமே வில்லன் வேடம்தான் கொடுக்கிறார்கள்' என்று நொந்துகொண்ட தன் மனைவியிடம் ’'வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பு இல்லை’’ என்று அசத்தலாக சொல்லிய ரீல் வில்லன், ரியல் ஹீரோ நம்பியாரின் நினைவுதினம் இன்று.

நடிப்புத்திறமை, இசை ஞானம், ஆன்மிகம் என அனைத்திலும் ஹீரோ தான் இந்த நம்பியார். 1919ம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் நம்பியார். பிறந்தது அங்கு என்றாலும் ஊட்டியில் தான் வளர்ந்தது. தன்னுடைய 13வயதில் நாடக்குழுவால் ஈர்க்கப்பட்டார். பின்னர் நாடகக்குழுவில் சேர்ந்தார். ஆனால், நடிகராக இல்லை. சமையல் உதவியாளராக. நாடகக்குழுவோடு பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டார் நம்பியார். மெல்ல மெல்ல நாடகக்குழுவில் நடிக்கத் தொடங்கினார். அது ஒரு நடிப்பு சாம்ராஜ்யமே உருவாக தொடங்கிய காலம்.

15வயது முதல் பெண் வேடம், நகைச்சுவை வேடம் என நாடகங்களில் தன்னுடைய திறமையை காட்டிய நம்பியார் 23வது வயதில் வில்லனாக நாடகத்தில் நடித்தார். அதுவே பின் நாட்களில் அவரது ஆஸ்தான வேடமாகவும் அமைந்தது. வித்யாபதி, ராஜகுமாரி என தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்தாலும் வேலைக்காரி, திகம்பர சாமியார் படங்களுக்கு பிறகே நம்பியார் அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாரானார். குறிப்பாக சர்வாதிகாரி படத்தில் சர்வாதிகாரியாவே வாழ்ந்தார் நம்பியார். அதன் பின்னர் அவர் கொடூர வில்லனாக மக்கள் மனதில் பதிந்தார்.

முன்னதே சொன்னதுபோல, எம்ஜிஆர் ஹீரோவாக மக்கள் மனதில் பதிய முக்கிய காரணம் நம்பியாரின் வில்லத்தனம் தான். ரீலில் எதிரிகள் என்றாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக எம்ஜிஆரும்-நம்பியாரும் இருந்தனர். நம்பியார் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார் எம்ஜிஆர். அவர் முதலமைச்சராக ஆன பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. எனக்கும் சேர்த்தே நம்பியார் வாய்ப்பு தேடினார் என்று பெருமையாக சொல்லிய எம்ஜிஆர், நம்பியாரை சில பதவிகளில் அமர்த்தவும் ஆசைப்பட்டார். ஆனால் அதனை அன்பாக மறுத்துவிட்டார் நம்பியார். 

எம்ஜிஆரில் கால்ஷுட் கிடைத்துவிட்டாலும் நம்பியாரில் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர் இயக்குநர்கள். வில்லன் என்று மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர வேடங்களிலும் அசர வைத்தார் நம்பியார். எம்.என்.ராஜத்துடன் இணைந்து ‘மக்களைப் பெற்ற மகராசி’யில் டூயட் பாடினார் நம்பியார். அதைப்பார்த்த சிவாஜி, ’நீ ஏன் கதாநாயகனாக நடிக்கவில்லை?’ என்று கேட்டாராம்.

தீவிர சைவ பிரியரான நம்பியார் அசைவம் சாப்பிட வேண்டி வரும் என்பதால் 19 வயதில் தனக்கு கிடைத்த ராணுவ வேலையை மறுத்தவர். நடிப்பைப்போல ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட நம்பியார் தீவிர ஐயப்ப பக்தர். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் சபரிமலை சென்று வந்த அவர் குருசாமியாக இருந்தார். ’கார்த்திகை மாதம் என்றால் ஐயப்ப சீசன்’ என்று சொன்னவர்களிடம், ’ஐயப்பனுக்கு ஏதுப்பா சீசன்?’ என்று கொட்டுவைத்தவர் நம்பியார். நம்பியாரை குருசாமியாகக் கொண்டு ரஜினி, இளையராஜா,சிவாஜி என பல நடிகர்களும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்றுள்ளனர். சர்வாதிகாரத் திமிரை நம்பியாரைப்போல ஒருவர் துல்லியமாக நடித்ததில்லை என்று பெயர்பெற்ற இந்த ரீல் வில்லன் நிஜத்தில் குழந்தை மனம் படைத்தவராகவே இருந்தார்.

’கிராமங்களுக்குச் சென்றால் பெண்கள் எல்லாம் என்னை வசைபாடுகிறார்கள். பயந்து ஓடுகிறார்கள். அது தான் என் நடிப்புக்கு விருது’ என்று சொல்லிய நம்பியாருக்கு  எல்லாமே அவரது மனைவி ருக்மணி தான். எந்த முடிவாக இருந்தாலும் மனைவியின் சொல்லைக் கேட்டே தொடங்கும் சிறந்த கணவனாகவும், 3 குழந்தைகளுக்கு நல்ல அப்பாகவும் இருந்தார் அவர்.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் கோடைக்காலத்தில் ஊட்டிக்கு சென்று தங்கிவிடுவதும், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதையும் தவறாமல் கடைபிடித்து வந்தவர் நம்பியார். திரையில் வெறுப்புகளை சம்பாதித்தாலும் நிஜத்தில் நம்பியாரைப்போல இருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு தனக்கான வாழ்க்கையை சரியாக வாழ்ந்தவர் இந்த ரீல் வில்லன் நம்பியார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com