தனுஷ் - செல்வராகவன் -யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவான ‘நானே வருவேன்’ திரைப்படம் 4 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், முதல்நாளிலேயே நல்ல வசூலை ஈட்டியது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ அடுத்தநாள் வெளியானநிலையில், இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்குமா என சந்தேகத்தை எழுப்பியது. எனினும் ‘நானே வருவேன்’ திரைப்படம் 4 நாட்களிலேயே 30 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
ஒருபுறம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளநிலையில், அத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான் என்றாலும், ‘நானே வருவேன்’ படத்திற்கு ஓரளவு திரையரங்கு நிறைந்தே காணப்படுவதாக கூறப்படுகிறது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை தினம் என்பதால் கூடுதலான வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.
நானே வருவே திரைப்படத்தை பொறுத்தவரை முதல் பாதியை மிகவும் அருமையாக எடுத்துள்ளார்கள். இரண்டாம் பாதியை வலுவான காட்சிகள் இல்லாமல் மேலோட்டமாக கொண்டு சென்றதால் கொஞ்சம் எதிர்மறையாக விமர்சனங்களுக்கு வழிவகுத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு பீல் குட் படமாகவே நானே வருவேன் வந்துள்ளதால் திரையரங்கள் ஓரளவு வரவேற்பு உள்ளது. அத்துடன், பொன்னியின் செல்வன் படத்திற்கு சில இடங்களில் டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருந்தால் அவர்கள் அப்படியே நானே வருவேன் படத்திற்கு திரும்பி இருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பொன்னியின் செல்வன் படமும் மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு பெரிய சுவாரஸ்யமான படமாக உருவாக வில்லை. படம் நன்றாக இருக்கிறது என்ற அளவிலேயே விமர்சனங்கள் வருகிறது. அதனால் விடுமுறை தினங்களில் இரண்டு படங்களையும் எல்லோரும் பார்க்க வாய்ப்புள்ளது.
தயாரிப்பாளர் தாணு சொன்னபடி விடுமுறை தினங்கள் என்பது நானே வருவேன் படத்தின் வசூலுக்கு நல்ல தருணமாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். குடும்பங்களுக்கு திரையரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இரண்டு படங்களே சாய்ஸ் உள்ளது. அதனால், நானே வருவேன் நிச்சயம் சராசரியான வசூல் உண்டு.