”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...!

”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...!
”ஆனந்த யாழ்க்கு இன்று பிறந்தநாள்...!
Published on

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 43வது பிறந்த தினம் இன்று.இயக்குநர் கனவோடு திரைத்துறைக்குள் வந்து பின்னர் பாடல் எழுதும் வேட்கையோடு திரிந்த நா.முத்துக்குமாருக்கு, முதல் வாய்ப்புக் கொடுத்தவர் இயக்குநர் சீமான். 2000-மாவது ஆண்டில் வந்த 'வீரநடை' மூலம் வெள்ளித்திரையில் பாடலாசிரியரானார். 41 வயதுக்குள் தமிழில் நயமான பாடல்கள் தந்து மறைந்த, இந்த கவிதைக்காரனின் நினைவுகளை பார்க்கலாம்.

நா.முத்துக்குமாரின் பாடல்கள் காதலின் வலியை, தோல்வியின் ஆற்றாமையை, ஆழ்மனத்தில் படிந்த காதலின் துயரத்தை இசையுடன் இயைந்த வரிகள் மூலம் பாடல்களாக்குவதில் வல்லவர். அதனாலேயே அவரது பாடல்கள், காலம் கடந்தும் காதலின் ரகசியம் பேசுகிறது. 1975-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார் 'வீரநடை' படம் மூலம் பாடலாசிரியரானார். முதல் பாடல் வெளிவருவதற்குள் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முடித்திருந்தார் முத்துக்குமார். பாடலாசிரியன் என்பவனின் மனநிலை இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர், பாடகர் என பலரோடு பொருந்திப்போனதாக இருக்க வேண்டும். அந்த தனித்துவ குணம்தான் முத்துக்குமாருக்கான வெற்றி. கவிதைகளின் மூலம் அடுக்கடுக்காக பாடல்களை எழுதியவர். விரைந்து பாடல் எழுதுவதில் வல்லவர் முத்துக்குமார் தான். முத்துக்குமாரின் காதல் வலி பேசும் பாடல்கள் மிக பிரபலம்.

எந்த மாதிரியான பாணியையும் தனதாக்கிக் கொள்ளாமல், எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து வெளியேறும் மாயவித்தையைக் கற்றவர் நா.முத்துக்குமார். அதனால்தான், கமர்ஷியல் பாடல்களிலும் கவிதை புனைய அவரால் முடிந்தது. ரஜினிகாந்துக்கு அறிமுகப் பாடல் எழுதிய அதே நேரம் இயக்குநர் ராம் படத்துக்கும் பாடல்கள் எழுத முடிந்தது. ஆண்டுதோறும் அதிக பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர் என்ற பெருமை அவரை சாரும். அப்பா-மகள் உறவின் உன்னதம் பேசி முதல் தேசிய விருது பெற்ற முத்துக்குமார், மழையையும், வெயிலையும் ஒரு சேர ரசிக்க வேண்டும் என இயற்கையின் மகத்துவம் பேசியதற்காய் இரண்டாம் தேசிய விருது பெற்றார். 

ஆண்டுதோறும் அதிக பாடல் எழுதிய பாடலாசிரியர் என கொண்டாடப்பட்ட முத்துக்குமார் கடைசியாக எழுதியது தரமணி படத்திற்காக. ஆனால், அது அவரது கடைசிப் பாடல் அல்ல, காதலும் காலமும் உள்ள வரை என்றென்றும் காற்றோடு கலந்திருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com