தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 28 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். தியேட்டர்களைத் திறங்கப்பா என மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் இயக்குநர் வெங்கட் பிரபு, தன் தியேட்டர் அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
"நான் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், புதிய படங்களுக்கான பிரிவியூ ஷோக்களுக்கு அழைப்பு வரும். ஒவ்வொரு வாரமும் புதிய படங்களைப் பார்த்துவிடுவோம். தி. நகரில் உள்ள நாகேஷ் தியேட்டரில் ஆண் பாவம் படம் பார்த்தது அழியாத ஞாபகமாக இருக்கிறது. இப்போது அந்த தியேட்டர் மண்டபமாக மாற்றப்பட்டுவிட்டது.
ஆண் பாவம்
அந்தப் படத்தை வயிறு வலிக்க சிரித்துப் பார்த்து ரசித்தேன். பெரும்பாலான படங்களுக்கு பெரியப்பா (இளையராஜா) இசையமைத்திருப்பார். எனவே எல்லா படங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு வந்துவிடும். ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு அருகில் இருந்த மேனா பிரிவியூ தியேட்டரில்தான் அதிக படங்களைப் பார்த்திருக்கிறோம். இங்குதான் நாயகன், உழவன் மகன் போன்ற படங்களைப் பார்த்தேன். இரு படங்களும் வேறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலித்தவை.
பள்ளியில் படிக்கும்போது வகுப்புகளை கட் அடித்துவிட்டு தலைவர் (ரஜினிகாந்த்) படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். நான் இலண்டனில் இருந்தபோதும் தியேட்டர் மீதான காதல் வளர்ந்தது. 15 வயதிலேயே இலண்டன் சென்றுவிட்டேன். அங்கு தியேட்டர் அனுபவம் அற்புதமானது, ஆனால் செலவுமிக்கது. மாணவர் பாஸை வைத்துக்கொண்டு வாரத்தில் ஒரு நாள் படம் பார்த்துவிடுவோம். அப்படி நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன்.
ட்ரூ லைஸ்
பின்னர், தியேட்டரில் பணிபுரிந்த சிலரும் எனக்கு நண்பர்களாக மாறினார்கள். அவர்கள் மூலம் இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டும் படங்கள் பார்ப்பேன். ஒருகட்டத்தில் அதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை. நான் மாணவனாக இருந்ததால், படங்களுக்காக பணம் செலவழிக்கமுடியாது. எனவே படங்கள் பார்ப்பதற்காக தியேட்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் அங்கு இருக்கைக்கு வழிகாட்டுவது, டிக்கெட் கிழிப்பது போன்ற பல பணிகளைச் செய்தேன்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை: பொது சுகாதாரத்துறை
அதாவது 90களின் தொடக்கத்தில் நிறைய இந்தியப் படங்களைப் பார்க்கமுடிந்தது. தளபதி படத்தை அங்குதான் பார்த்த நினைவு இருக்கிறது. ஸ்பீட் படத்தை ஏழு முறை பார்த்தேன். இலண்டனில் தியேட்டரில் படம் பார்ப்பது வித்தியாசமானது. தியேட்டரில் இரண்டு பேர் இருந்தாலும் கூட் படத்தைப் போடுவார்கள். 700 இருக்கைகள் கொண்ட தியேட்டரில் ஆறு பேருடன் அமர்ந்து ட்ரூ லைஸ் படத்தைப் பார்த்திருக்கிறேன்.
தளபதி
தியேட்டர் மீதான என் நேசத்தை விவரிக்கமுடியாது. படங்களைப் பார்த்ததன் மூலமே இயக்குநராக மாறினேன். யாரிடமும் நான் உதவி இயக்குநராக இல்லை. என் படங்களை சத்யம் தியேட்டரில் பார்ப்பதைத்தான் நான் விரும்புகிறேன். ஆனால் சென்னை 600028 படத்தை அங்கே ரிலீஸ் செய்யமுடியவில்லை. படம் வெளியாகி மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் திரையிட முடிந்தது. இது எனக்குப் பெரிய விஷயம். இன்றும் என் படங்களின் ரிலீஸ் என்பது எனக்கு நடுக்கமாக இருக்கிறது.
ரசிகர்களின் பல்ஸ் பார்ப்பதற்காக தியேட்டர்களைச் சுற்றிவருவேன். தியேட்டர் ஒரு வித்தியாசமான இடம். உங்களை யாரென்றே தெரியாமல், உங்கள் படத்தை கொண்டாடுவார்கள். இயல்புநிலை திரும்பும்வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. மீண்டும் தியேட்டரில் படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று உற்சாகம் குறையாமல் பகிர்ந்துள்ளார் வெங்கட்பிரபு.