கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியிருந்த இந்தப் படம், கடந்த 2001-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. கமலின் ‘நம்மவர்’, ‘குருதிப்புனல்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த மகேஷ் மகாதேவன் பின்னணி இசையமைத்திருந்தார். பாடகர் ஷங்கர் மகாதேவனின் ட்ரியோ குழுவான Shankar–Ehsaan–Loy பாடல்களை அமைத்திருந்தது.
தயாரிப்பாளர் தாணு மீண்டும் ஆளவந்தான் குறித்து பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எழிலோடும் பொழிலோடும் ஆளவந்தான்.. விரைவில் வெள்ளித்திரையில்” என பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்திருந்த திரைப்படத்தின் போஸ்டரில், “எழிலோடும் பொழிலோடும் விரைவில்... உலகமெங்கும் 1000 திரையரங்குகளில்.. இன்று 22 ஆம் ஆண்டில்” குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்குப் பின் ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் மீண்டும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படமும் ஆளவந்தானுடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் முத்து. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகை மீனா, சரத்பாபு, செந்தில் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
கவிதாலயா நிறுவனம் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தது. 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போதும் தொலைக்காட்சிகளில் இத்திரைப்படத்தை போடும் போது கிடைக்கும் வரவேற்பே அதற்கு சான்று.
இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன் கவிதாலயா நிறுவனம் முத்து திரைப்படம் டிசம்பர் மாதம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவித்திருந்தது. டிசம்பர் 8 ஆம் தேதி கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருப்பதால் முத்து திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1995 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் குருதிப்புனல் திரைப்படமும் ரஜினியின் முத்து திரைப்படமும் நேரடியாக மோதின. ஆனால் முத்து திரைப்படத்தின் வெற்றிக்கு முன் குருதிப்புனலால் நீடிக்க முடியவில்லை. இதனை அடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும் நேரடியாக மோதின. சந்திரமுகி திரைப்படமோ 800 நாட்கள் ஓடி திரையுலகை பிரம்மிக்க வைத்தது. இந்த முறையும் ரஜினியே வெற்றி பெற்றவரானார்.
இந்நிலையில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக கமல் ரஜினி திரைப்படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளவந்தான் திரைப்படமும் முத்து திரைப்படமும் டிசம்பர் 8 ஆம் தேதி மோத இருப்பதாக கூறப்படுகிறது. இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் தனித்தனியாக ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.