இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் ‘நீயோ ஒளி’ இசைநிகழ்ச்சி வரும் 10ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், ஆன்லைன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இசை நிகழ்ச்சி நடைபெற இன்னும் 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் சந்தோஷ் நாராயணன்.
அப்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைக்கச்சேரியில் நடந்தது போன்ற பிரச்சனைகளை எப்படி தடுப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், "இப்போதெல்லாம் அசல் டிக்கெட்டை விட, போலி டிக்கெட்டை சிறப்பாக அச்சடிக்கிறார்கள். எனவே இந்த கச்சேரியில் அச்சடித்த நுழைவுச் சீட்டு கிடையாது. எல்லாமே ஆன்லைன் QR code தான். அதை போலியாக உருவாக்க முடியாது. அதை வாங்கியவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடாதவரை பிரச்சனை இல்லை. சரியான திட்டமிடலால், இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்று இருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "விஜய் சாரின் முடிவு எனக்கு சந்தோஷம். அவரை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவரிடம் உள்ள தனிப்பட்ட நேர்மை, அரசியலிலும் பிரதிபலித்தால், நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மற்ற கட்சியினருக்கும் பரவும். அவரின் கொள்கைகள் பொறுத்து, அவருக்கான ஓட்டு தீர்மானமாகும்.
ஒருவேளை அவர் கட்சி சார்ந்த பாடலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தால், வெறும் விளம்பரத்துக்காக ஒரு பாடலாக செய்ய மாட்டேன். அவரது பணிகள், கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு பார்வையில் உடன்பாடு இருந்தால் முழு மனதுடன் அதை செய்வேன்" என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.