இந்தியாவின் இரு முக்கிய தியேட்டர் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைய இருக்கின்றன. இதற்கான ஒப்புதலை இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் இணைந்து வழங்கியுள்ளன. புதிய நிறுவனத்தின் பிராண்ட் `பிவிஆர் ஐநாக்ஸ்’ என்று இருக்கும். ஆனாலும் தற்போது ஏற்கெனவே இருக்கும் திரைகளின் பெயர்கள் அப்படியே (பிவிஆர் என்றும் ஐநாக்ஸ் என்றும்) தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இணைப்புக்கு ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி தேவைப்படும். பங்குச்சந்தை நிறுவனங்கள் மற்றும் செபி உள்ளிட்ட அனுமதிகள் தேவைப்படும். ஆனால் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (சிசிஐ) அனுமதி தேவையில்லை. வருமானம் 1000 கோடிக்குள் இருப்பதால் அனுமதி தேவையில்லை என வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான முழு விவரங்களை, இந்தக் கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த ஒருங்கிணைப்பின் வழியாக 10 ஐநாக்ஸ் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு, மூன்று பிவிஆர் பங்குகள் கிடைக்கும். ஒருங்கிணைந்த நிறுவனத்தில் ஐநாக்ஸ் நிறுவனர்களின் பங்கு 16.66 சதவீதமாக இருக்கும். பிவிஆர் குழும நிறுவனர்களின் பங்கு 10.62 சதவீதமாக இருக்கும். ஒருங்கிணைந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16000 கோடி என்னும் அளவில் இருக்கும். ஒருங்கிணைந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு எண்ணிக்கை 10 ஆக இருக்கும். பிவிஆர் குழுமத்தின் அஜய் பிஜிலி நிர்வாக இயக்குநராக இருப்பார். ஐநாக்ஸ் தலைவர் பிரவீன் குமார் ஜெயின் தலைவராக இருப்பார்.
பிவிஆர் நிறுவனத்தின் வசம் 871 திரைகள் உள்ளன. ஐநாக்ஸ் வசம் 675 திரைகள் உள்ளன. மொத்தம் 1546 திரைகள் உள்ளன. மெக்ஸிகோவை தலைமையாக கொண்டு செயல்படும் சினிபோலிஸ் நிறுவனம் வசம் 417 திரைகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு பிவிஆர் மற்றும் சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இருந்தன. ஆனால் தற்போது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மற்றொரு முக்கியமான நிறுவனமான கார்னிவெல் சினிமாஸ் வசம் சுமார் 450 திரைகள் அளவுக்கு உள்ளன.
கோவிட் காரணமாக ஓடிடி அபரிவிதமன வளர்ச்சி அடைந்தது. அதனால் திரையரங்குகள் வெற்றியடைய வேண்டும் என்றால் இதுபோன்ற இணைப்புகள் அவசியம். இதன் மூலம் வாடகை, திரைப்படங்களின் உரிமம், உணவு, மார்கெட்டிங் உள்ளிட்ட பல வகைகளில் நிறுவனங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் திறன் உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோவிட் விதிமுறைகள் முடிந்து விமானபோக்குவரத்து துறையில் ஏற்றம் இருப்பதுபோலவே திரையரங்கங்களும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்தை எடுத்துவைத்திருக்கின்றன.