எம்.எஸ்.வி, கண்ணதாசன் பிறந்த தினம் | இசையும் - தமிழும் ஒரே தினத்தில் பிறந்த அபூர்வ நாள் இன்று...!

மெல்லிசை மன்னரும், கவியரசரும் என்றென்றைக்குமான ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அவ்விரு திரை ஜாம்பவான்களில் பிறந்தநாள் இன்று...!
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன்
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன்முகநூல்
Published on

செய்தியாளர் - புனிதா பாலாஜி

எத்தனையோ வெற்றிக் கூட்டணிகளைக் கண்ட சரித்திரப் புகழ்பெற்றது, தமிழ் சினிமா. அதில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே தங்களின் மறைவுக்குப் பிறகும், மக்களின் மனதில் மறையாமல் நிலைத்திருப்பார்கள்... அப்பட்டியலில் இடம்பெற்ற முக்கிய கலைஞர்களான மெல்லிசை மன்னரும், கவியரசரும் என்றென்றைக்குமான ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அவ்விரு திரை ஜாம்பவான்களின் பிறந்தநாள் இன்று.

இசையும், அமுதும் ஒன்றாய் இனிப்பதைப்போல்... அழகும், தமிழும் ஒருசேர கவர்வதைப்போல்... திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்காக பிறந்தவர்கள்தான், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன். ஒரே தினத்தில் பிறந்த இவ்விருவருக்கும், ஒரு வயது மட்டுமே வித்தியாசம். கண்ணதாசன் 1927ஆம் ஆண்டும், எம். எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டும், இவ்வுலகில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்கள்.

வாழ்வின் நிகழ்வுகளை வரிகளாக்கும் கண்ணதாசனும், அவரின் இன்பத் தமிழுக்கு இசை சேர்க்கும் எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து, தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பாட்டுச்சரங்கள் ஏராளம். இனிமை ததும்பும் காதலோ, இதயம் நொறுக்கும் சோகமோ, வாழ்வின் அர்த்தம் சொல்லும் தத்துவமோ, பக்தி இசையோ... இப்படி, மனிதர்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் வெவ்வேறு விதமான இசையை கொடுத்து, தமிழர்களின் ஆன்மாவோடு இருவரும் கலந்திருக்கிறார்கள்.

எழுத்தாலும், இசையாலும் இறுகப் பிணைக்கப்பட்ட இவ்விருவரின் நட்பும், அத்தனை ஆழமாக இருந்ததே, இக்கூட்டணியின் படைப்பில் காலம் கடந்து நிற்கும் பாடல்கள் உருவாக காரணமாகியிருந்தது. அதனால்தான், இசைக்கடலும், கவிதைக்கடலும் சினிமா எனும் திரைக்கடலில் சங்கமித்து, பல்வேறு மாயங்கள் செய்துள்ளன. திரையிசையில் சரித்திரம் படைத்த இவ்விருவரும், சினிமாவுக்கு செய்த பங்களிப்பு அதிகம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, தேமுதிக களத்தில் இல்லை... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 1,700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எம்.எஸ். விஸ்வநாதன். தமிழர்களின் உணர்வோடு கலந்திருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாவும் இவரின் இசையில் உருவானதுதான். இதேபோல், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என எழுத்துப் பணியில், எட்டாத உயரம் தொட்டவர், கண்ணதாசன்.

இவர், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவ்விருவரின் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு, சுவாரஸ்யம் நிறைந்த பல பின்னணி கதைகளும் இருக்கின்றன. காவியத் தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்றவர், கவிஞர் கண்ணதாசன்.. ஆம், அது 100 சதவிகிதம் உண்மைதான்... ஆனால், மெல்லிசை மன்னர் அப்படி எதுவும் சொன்னதில்லை.. ஆனால், கவிஞரின் கவியோடு, அவரின் இசையும் நிரந்தரமானது என்பதை நில்லாமல் சுழலும் இந்த பூமியும், இசையில் கலந்திருக்கும் காற்றும், நிரூபித்துக் கொண்டே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com