இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்: ஹே சினாமிகா முதல் ’ஜுண்ட்’ வரை
இந்தவாரம் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படம் முதல் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ திரைப்படம் வரை வெளியாகின்றன.
‘ஹே சினாமிகா’
துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்குப்பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது ‘ஹே சினாமிகா’.
’ஜூண்ட்’
இந்தியாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ள ‘ஜூண்ட்’ வரும் மார்ச் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் அம்பேத்கர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. நடிகர் அமீர்கானும் படத்தைப் பார்த்துவிட்டு கண் கலங்கியதாக குறிப்பிட்டுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. பூஷன் குமார் தயாரித்துள்ள இப்படம் வறுமை சூழ்ந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க காரணமாக இருந்த சமூக ஆர்வலரான விஜய் பார்சே என்பவரின் உண்மைக் கதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
’தி பேட்மேன்’
உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான ‘தி பேட்மேன்’ வரும் மார்ச் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மாட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இப்படத்தை பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ளது. பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். உலகின் பல நாடுகளில் ‘தி பேட்மேன்’ வெளியானாலும் ரஷ்யாவில் வெளியாகவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யாவில் வெளியிடவில்லை என்று வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது.