சினிமா தொழில் குறைந்த காலம் மட்டுமே கைகொடுக்கும் என்பதை மலையாள நட்சத்திங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால், சினிமாவை மட்டுமே நம்பியிராமல் வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டு வரும் மோகன்லால் துபாயில் உணவகம் நடத்தி வருகிறார். மசலா, ஊறுகாய், மற்றும் சமையல்
பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். ’மோகன்லால் டேஸ்ட் பட்ஸ்’நிறுவனத்தை 2007
ஆம் ஆண்டு தொடங்கினார். தொடுபுழா மற்றும் பெரும்பாவூரில் ஆஷிர்வாத் சினி காம்பளக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களில்
பார்ட்னராகவும் இருக்கிறார்.
’சால்ட் அண்ட் பெப்பர்', '22 ஃபீமேல் கோட்டயம்‘போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆஷிக் அபு, ‘கஃபே பபாயா’
உணவகத்தை கொச்சியில் உள்ள பலரிவட்டோம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல் கொச்சியில் பிரபலம். ஆஷிக் அபுவின்
மனைவியும், நடிகையுமான ரீமா கல்லிங்கல் ’மாமாங்கம்’ என்னும் நடனப்பள்ளியை நடத்தி வருகிறார்.
நடிகர் திலீப், கேரளாவின் கலாசார உணவாகக் கருதப்படும் புட்டுக்கடை நடத்தி வருகிறார். தி புட்டு என்னும் கொச்சியில் உள்ள அந்த
ரெஸ்டாரென்டில் விதவிதமான வகையில் புட்டு வகைகள் பரிமாறப்படுகிறது. கொச்சியில் ’மேங்கோ ட்ரீ’உணவகத்திலும் திலீப்
பார்ட்னர். இந்த உணவகம் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் தாயார் உருவாக்கியது.’டி சினிமாஸ்’என்ற பெயரில் சாலக்குடி மற்றும்
திரிசூரில் தியேட்டர்களையும் வைத்திருக்கிறார். மல்லிகா சுகுமாறன், இவரது மகன்கள் இந்திரஜித் மற்றும் பிருத்விராஜ் ஆகிய மூவரும் இணைந்து கத்தாரில் உள்ள தோகாவில் நட்சத்திர உணவு விடுதியை நடத்தி வருகிறார்கள்.
அமலா பால் கொச்சியில் யோகாவைக் கற்றுக்கொடுக்கும் எம்.ஆர் யோகா நிலையத்தை நடத்தி வருகிறார். இங்கு ஏரோபிக்ஸ்,
ஸ்கூபாவுடன் நடனமும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நடிகை லீனா கோழிக்கோட்டில்’ஆக்ருதி’என்னும் உடல் குறைப்புக்கான
நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகை பூர்ணிமா கொச்சியில்’ப்ராணா’என்னும் அழகுநிலையத்தை நடத்தி வருகிறார்.
இந்த அழகு நிலையத்திற்கு அமலாபால், ஜாகுலின் பெர்ணாண்டஸ், நஸ்ரியா நஸிம், ப்ரியாமணி உள்ளிட்ட சில தமிழ் சினிமா
நட்சத்திரங்களும் வாடிக்கையாளர்கள். நடிகை காவ்யா மாதவன் அழகு சாதனங்களை ஆன்லைன் மூலம் விற்பனைச் செய்யும்
’க்ஷயா’என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகர் சித்திக் கொச்சியில்’ம்மா மியா’என்னும் உணவகத்தை நடத்தி
வருகிறார். இங்கு கடல்வகை உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.