தண்டட்டி விமர்சனம் | இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாமோ..!
தண்டட்டி(2 / 5)
இழவு வீட்டில் காணாமல் போகும் தண்டட்டியும், அதனால் நடக்கும் களேபரங்களும் தான் தண்டட்டி படத்தின் ஒன்லைன்.
தங்கப்பொண்ணு (ரோகினி) கிடாரிப்பட்டியை சேர்ந்தவர். முதுமையிலும் குடும்பத்துக்காக பல கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கிறார். திடீரென இவர் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் திரும்ப வராததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகின்றனர் அவரது குடும்பத்தினர். கிடாரிபட்டிக்கு என ஒரு கட்டுப்பாடு உண்டு அங்கு போலீஸ் நுழையக் கூடாது, மீறி ஊர் விஷயங்களில் தலையிட்டால் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள். இந்த சூழலில் தங்கப்பொண்ணை தேடித் தர முன் வருகிறார் காவலர் சுப்ரமணி (பசுபதி). எதிர்பாராத விதமாக தங்கப்பொண்ணு இறந்துவிட, அவரது உடலை ஊருக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வது வரை கிடாரிப்பட்டியில் சுப்ரமணி தங்கும்படி ஆகிறது. ஆனால் விடிந்து பார்க்கையில் தங்கப்பொண்ணு அணிந்திருந்த தண்டட்டி களவு போயிருக்கிறது. இதனால் உருவாகும் பிரச்சனைகள் என்ன? தண்டட்டியை திருடியது யார்? அதை சுப்ரமணி கண்டுபிடித்துக் கொடுத்தாரா? இதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் ராம் சங்கையா படத்தை நகைச்சுவையாகவும், எமோஷனலாகவும் கலந்து சொல்கிறார். நகைச்சுவை பகுதிகள் பசுபதியை சார்ந்தே வருகிறது. முதலில் அவரிடம் தொலைந்து போன பாட்டியை கண்டுபிடிக்கும் கேஸ் வருகிறது, பின்பு பாட்டியின் தண்டட்டியை கண்டுபிடிக்கும் கேஸ் வருகிறது, ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக்கில் தமன்னா என்ற ஃபேக் ஐடி யார் என கண்டுபிடித்து தர சொல்லிக் கூட கேட்கிறார்கள். இப்படி ஜாலியாக செல்லும் படம் ஒரு கட்டத்தில் சுப்ரமணி தொலைத்த ஒன்று, அவர் தேடாமலே அவரை வந்தடைவதாக எமோஷனலாக முடிகிறது. எமோஷனல் ஏரியாவை விட நகைச்சுவையில் அசத்தியிருக்கிறார் பசுபதி. படத்தில் சில காட்சிகளே தோன்றினாலும் தங்கப்பொண்ணு கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார் ரோகினி. சில நகைச்சுவை காட்சிகள் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. குறிப்பாக ஒரு காபி தண்ணி குடுத்தியா? என ஒரு கதாப்பாத்திரம் செய்யும் கலாட்டாவுக்கு தியேட்டரே அதிரும்படி ஒலிக்கிறது சிரிப்பலை.
படத்தின் போதாமைகளாக படுவது, படத்தில் இருக்கும் சில செயற்கைத் தனங்கள். தீபா, முகேஷ், விவேக் பிரசன்னா, செம்மலர் அன்னம் எனத் தெரிந்த முகங்கள் பல உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நடிப்பு அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் கிராமத்தை சேர்ந்த பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகளில் அவர்களின் நடிப்பு இயல்பாக இல்லாமல் துருத்திக் கொண்டிருக்கிறது.
படத்தில் இரண்டு ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறது. ஒன்று 80களில் நடப்பது, இன்னொன்று நிகழ்காலத்துக்கு சம்பந்தப்பட்டது. ஆனால் அந்த இரண்டும் இன்னும் நன்றாக எழுதப்பட்டிருந்தால் அழுத்தமாக இருந்திருக்கும். கூடவே படத்திற்கு தேவையற்ற காட்சிகள் சிலவும் இருக்கிறது. உதாரணத்திற்கு பசுபதியின் அறிமுகக் காட்சியில் குற்றவாளி ஒருவரை பிடிக்க நடக்கும் கலாட்டாக்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்த தன் மகளை தேடி வரும் தந்தை சம்பந்தப்பட்ட காட்சி இவையெல்லாம் படத்தின் மையக்கதையிலிருந்து விலகியிருக்கிறது. அவை இல்லாவிட்டாலும் படத்தில் எந்த குறையும் ஏற்பட்டிருக்காது. படத்தின் பெரிய பிரச்சனையே படத்தை முடித்த விதம் தான். குறிப்பிட்ட ஒரு திருப்பம் வரும் இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் கிளம்புகிறது.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு லைவ்லி உணர்வைக் கொடுக்கிறது. வீரமணி கணேசனின் கலை இயக்கம் படத்தின் நம்பகத்தன்மைக்கு உதவுகிறது. அதே சமயம் சுந்தரமூர்த்தியின் இசையில் படத்தின் பின்னணி இசை அத்தனை சிறப்பாக இல்லை. பல இடங்களில் காட்சியின் தேவைக்கு அதிகமாகவே இசைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு யதார்த்தமான கிராமத்து படம் பார்க்க விரும்புபவர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்துகிறது. அதே சமயம் நேர்த்தியான எழுத்தும் - ஆக்கமும் இருந்திருந்தால், மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும் இந்த தண்டட்டி.