சொப்பன சுந்தரி விமர்சனம் | காமெடியன்ஸ் இருக்காங்க... ஆனா காமெடி..?
Below Average(2 / 5)
ஒரு காரால் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளும் சிக்கல்களும் தான் ' சொப்பன சுந்தரி' படத்தின் ஒன்லைன்
கதை துவங்கியதும் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) குடும்பத்தின் வறுமை நிலை காண்பிக்கப்படுகிறது. அவரது அப்பா படுத்த படுக்கையாக இருக்கிறார், அம்மா வாங்கிய கடன்களை கொடுக்க முடியாமல் திணறுகிறார், குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக அண்ணன், தன் மனைவியுடன் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். கூடவே அக்கா பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி. ஒரு குடும்பத்துக்குள் ஒரு கோடி கஷ்டங்களா என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது, அகல்யாவின் வீடு தேடி லக்கி ப்ரைஸாக வருகிறது ஒரு கார். அந்தக் காரை வரதட்சணையாகக் கொடுத்து அக்காவின் திருமணத்தை நடத்துவது என முடிவு செய்கிறது அகல்யாவின் குடும்பம். ஆனால் திடீரென நடக்கும் இரண்டு சம்பவங்களால் மொத்தமும் தலைகீழாக மாறுகிறது. ஒன்று ஒரு விபத்து, இன்னொன்று அகல்யா குடும்பத்திற்கும் அவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையில் நடக்கும் சண்டை. இதனால் வரும் பாதிப்புகள் என்ன? எப்படி அகல்யா இவற்றை சரி செய்கிறார்? அந்த கார் கடைசியாக யாருக்கு சேர்கிறது? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இந்தப் படத்தை ஒரு காமெடி அல்லது டார்க் காமெடி படமாக கொடுக்க முயன்றிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் திருட்டு சம்பந்தப்பட்ட காட்சி, மருத்துவமனை ஒன்றில் ஒரு கதாபாத்திரம் வெறும் கிட்னிய மட்டும் தான் வித்தியா? எனக் கேட்கும் காட்சி என படத்தின் ஒன்றிரண்டு இடங்களில் அது வெர்க்கும் ஆகிறது. இந்தப் படத்தை நடிப்பால் ஓரளவுக்கு காப்பாற்றுவது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். படத்தின் சீரியஸான காட்சிகள் எல்லாம் அவரை சார்ந்தே இருக்கிறது. அவற்றை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. பல காட்சிகளை தனது ஸ்கோரால் சுவாரஸ்யப்படுத்துகிறார்.
காமெடி ஜானருக்கான நல்ல களம் இருந்தும் படத்தில் பல போதாமைகள் இருப்பது மைனஸ். நாம் இதற்கு முன் காமெடி ரோலில் பார்த்து பழகிய தீபா, கருணாகரன், சுனில், ரெடின் கிங்க்ஸ்லி, ஷாரா எனப் பலர் இருக்கிறார்கள். ஆனால், காமெடி தான் இல்லை. தீபா பேசும் ஒன்றிரண்டு வசனங்கள், ரெடின் கிங்க்ஸ்லியின் ஒரு காட்சி என மிக சொற்பமான இடங்களிலேயே சிரிப்பு வருகிறது. ஒரு படமாக இதைப் பார்க்கவும் சுவாரஸ்யமான திருப்பங்களோ, காட்சிகளோ எதுவும் இல்லை. மிக எளிதாக யூகித்துவிடும் ட்விஸ்ட் இன்னும் பெரிய மைனஸ். இந்த மாதிரி ஜானரில் சூதுகவ்வும், டாக்டர் போன்ற தமிழ் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் சொப்பன சுந்தரியில் அந்த அளவுக்கான செரிவான எழுத்தும், சுவாரஸ்யமான திரைக்கதையும் மிஸ்ஸிங்.
மேலும் சூதுகவ்வும் , தாஸ் மற்றும் அவரது குழு செய்யும் சின்ன சொதப்பலால் வரும் சிக்கல்களைப் பற்றிய கதை, டாக்டர் ஒரு சிறுமியை மீட்க ஹீரோ செல்லும் கதை. இதில் இருந்து எந்த விலகலும் இல்லாமல் கதையை மட்டும் கவனமாக நகர்த்துவார்கள். சொப்பன சுந்தரியிலும் அதன் பிரதான கதை இருக்கிறது. கையைவிட்டுச் சென்ற காரை நாயகி திரும்ப மீட்டெடுத்தாரா இல்லையா? என்பதுதான் மையம். ஆனால் திடீரென கதைக்குள் செக்ஷுவல் ஹராஸ்மெண்ட் பற்றிப் பேசுகிறார்கள். பாலியல் வன்முறைகள், அத்துமீறல்கள் பற்றி பேசும் அவசியம் இன்று இருக்கிறது. ஆனால் அது சொல்லப்படும் கதைக்கு எவ்வளவு தேவை என்பதும் முக்கியமானது. கதையே முடிந்த பிறகும் திடீரென ஒரு சண்டைக் காட்சி தேவையே இல்லாத திணிப்பு. மேலும் அந்தக் காட்சியில் ஹீரோயின் சொல்லி அவரது தாய் செய்யும் ஒரு விஷயம் முகம் சுழிக்கும்படி இருக்கிறது. ஏன் இந்தக் கதை எப்படியோ ஆரம்பித்து எங்கெங்கோ செல்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
மொத்தத்தில் ஒரு Wanna Be Comedy படமாக மட்டுமே சொப்பன சுந்தரி இருக்கிறது. ஆனால் அதிலும் முழுமையடையாமல் திணறி தடுமாறுகிறது. வழக்கமான ஒரு காமெடி படமாக இருந்தால் போதும் என நினைப்பவர்களுக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கலாம். ஆனால் புதுமையான கதை சொல்லலையோ சுவாரஸ்யத்தையோ விரும்புபவர்களுக்கு சொப்பன சுந்தரி ஏமாற்றத்தையே அளிக்கும்.