Rocky Aur Rani Kii Prem Kahani Movie Review | மெய்யாலுமே கரண் ஜோஹரின் கம்பேக்கா..!
Rocky Aur Rani Kii Prem Kahani(3 / 5)
சினிமா பயணம் துவங்கி 25 வருடம் ஆனதையொட்டியும், தனது கம்பேக் படமாகவும் Rocky Aur Rani Kii Prem Kahani படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் கரண் ஜோஹர். உண்மையாலுமே கம்பேக்கா?
ராக்கி (ரன்வீர் சிங்) ஸ்வீட் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர் வீட்டு வாரிசு. பலத்த கட்டுப்பாடுகளுடன் வளரும் ராக்கிக்கு தன் தாத்தா கன்வல் லுன்ட் (தர்மேந்த்ரா) மீது கொள்ளைப் பிரியம். நினைவு தப்பிப் போனாலும், பழைய காதலியின் பெயரை முணுமுணுத்துக் கொண்டு காலத்தை கழிக்கிறார் கன்வல். எப்படியாவது அந்தக் காதலியையும் தாத்தாவையும் சந்திக்க வைக்கும் முயற்சியில் தொலைக்காட்சி நெறியாளர் ராணியை (அலியா பட்) சந்திக்கிறார். தாத்தா காதலுடன், தன்னுடைய காதலையும் வளர்க்கிறார். தாத்தா காதலுக்கு பாட்டி தடைக் கல்லாய் நின்றாலும், ராக்கி - ராணி காதல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் செல்கிறது.
ஆனால் திருமணம் என்று வரும் போது இரு வேறு கலாசார எல்லைகளில் இருக்கும் இவர்களது குடும்பம் குறுக்கே வருகிறது. ”சரி என் வீட்டில் நீ, உன் வீட்டில் நான்” என 'பூவெல்லாம் கேட்டுப் பார்க்க' நினைக்கிறது இந்த 'ஜோடி'. இந்த எக்ஸ்சேஞ் ஆஃபரால் நடக்கும் கலாட்டாக்களும், எமோஷனலான முடிவுகளும் தான் படத்தின் மீதிக் கதை.
கரண் தனது கடந்த ஆறு படங்களில், அதிகப்படியாக குடும்ப உறவுகள் பற்றி தான் பேசியிருப்பார். Kuch Kuch Hota Hai, Kabhi Khushi Kabhie Gham..., Kabhi Alvida Naa Kehna, Ae Dil Hai Mushkil கூடவே அதிக கவனம் பெற்ற Lust Stories குறும்படத்தில் கூட அது இருக்கும். தற்போது Rocky Aur Rani Kii Prem Kahani படத்திலும் Romantic and Family Dramaவுடன் வந்திருக்கிறார்.
ராக்கி ஆண் மையச்சிந்தனையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர், ராணி அவரது விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர். இருவரும் தங்கள் குடும்பங்களை மாற்றிக் கொள்ளும் போது என்னவெல்லாம் எதிர்கொள்கிறார்கள்? அந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்கிறார்கள்? என்பதாக கதை நகர்கிறது. ராக்கியின் அப்பா மிக கடுமையானவர், சப்பாத்தி ஆறிப் போய் இருந்தால் கூட சிடுசிடுவென மனைவியின் மீது எரிந்து விழுவார். ராணியின் குடும்பம் கூட்டாக எல்லா வேலைகலையும் பிரித்து செய்வார்கள். ஆனால் அவர்களும் ராக்கியின் ஆங்கிலத்தையும், உடையையும் ப்ரிவிலெட்ஜ் மன நிலையில் இருந்து அணுகி சிரிக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை பொலிடிகல் கரெக்ட்னஸ் எதிர்பார்க்கிறார்கள். இரு குடும்பங்களிலும் உள்ள பிரச்சனைகள் காமெடியாக சொல்வதும், அதை மிக எமோஷனலாக விளக்குவதும் என கரண் ஜோஹர் தன்னுடைய ஸ்டைலில் விளையாடுகிறார். பாலிவுட் சினிமாவின் சம்பிரதாய காட்சியமைப்புகளை பகடி செய்யும்படி தன்மையுடனும் படம் நகர்கிறது.
மேலும் ஸ்வீட் சர்ப்ரைஸாக Kanwal Lund (தர்மேந்த்ரா) Jamini Chatterji (ஷபானா ஆஸ்மி) இடையேயான காதல் காட்சிகளும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Abhi Na Jao Chhod Kar போன்ற பழைய பாடல்களும் ரசிக்க வைக்கிறது. நடிப்பு பொறுத்தவரை, ரன்வீர் சிங் - அலியா பட் இடையேயான காட்சிகள் அத்தனையும் மிக சிறப்பு. குடும்பத்தையே கைக்குள் வைத்துக் கொள்ளத் துடிக்கும் குடும்பத்தலைவியாக ஜெயா பச்சன், கை கூடாத காதலை நினைத்து கலங்கும் ஷபானா ஆஸ்மி, தான் ஒரு கேலிப் பொருளானது தெரிந்த பின் கலங்கிப் போய் பேசும் ராய் சௌத்ரி எனப் பல துணைக் கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய வழக்கமான துள்ளல் ஸ்க்ரிப்டுக்குள், Body shaming பற்றி பேசுகிறார் கரண் ஜோஹர். திருமணமான பின் மனைவியின் வீட்டுக்கு கணவன் செல்லக் கூடாதா எனக் கேட்கிறார், பெண்ணின் உள்ளாடையைத் தொடுவதோ, துவைப்பதோ அவமானம் இல்லை, பெண்ணை சரிசமமாக மதிக்காததுதான் அவமானகரமானது என்று சொல்கிறார். உடைதான் பிரச்சனை என்றால் 3 வயது சிறுமியும், 90 வயது மூதாட்டியும் ஏன் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள்? என்றும் கேட்டிருக்கிறார். ஒரு மெய்ன்ஸ்ட்ரீம் படத்தில் இது போன்ற கருத்துகள் இடம்பெறுவது பெரிய அளவில் சென்று சேரும் என்பதால், அது பாராட்டுக்குறியது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மிகத் துணிச்சலாக பேசும் பல பாலிவுட் சினிமாக்கள் வந்துவிட்டது. கரண் படம் இயக்காத இடைவெளியில் பாலிவுட்டே தன் முகத்தை மாற்றிக் கொண்டது. அதனால் கரண் சமூகப் பிரச்சனைகளை பேசக் கூடாது என்றோ, அவரது ஸ்டைலை மாற்ற வேண்டும் என்ற சொல்லவில்லை. சொல்வதை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக சென்று சொல்ல வேண்டும். கலர் கலர் பூச்சுகளுக்கு இடையே ஒளிந்து கொண்டு சொல்லாமல், உண்மையாகவும், இயல்பாகவும் சொல்ல வேண்டும். செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு எல்லா கருத்துகளையும் கதைக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்ற அளவில் மட்டும் நின்றுவிடக் கூடாது.
கண்டிப்பாக Rocky Aur Rani Kii Prem Kahani தரமான பொழுது போக்குத் திரைப்படம், அதன் நகைச்சுவையும், எமோஷன் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் இது மிக முக்கியமான படம் என்று சொல்லும் இடத்தில் இல்லை. மாறாக மற்றும் ஒரு பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படம், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற அளவிலேயே சுருங்கிவிடுகிறது. கரண் ஜோஹருக்கு கம்பேக் தான். ஆனால், முக்கியமான சினிமா கொடுத்த இயக்குநராக அல்ல. ஒரு வியாபாரியாக, ஒரு தயாரிப்பாளராக.