GLADIATOR II | கிளாடியேட்டரின் புகழுக்கு ஈடு கொடுக்கிறதா இந்த இரண்டாம் பாகம்..?
GLADIATOR II Review(3.5 / 5)
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு கிளாடியேட்டர் திரைப்படம். ஆன்லைன் ஸ்டிரீமிங், டோரன்ஸ், இணைய வசதி எல்லாம் இல்லாத காலத்தில் வெளியான பிரமாண்ட சினிமா கிளாடியேட்டர். அதற்கு முன்பே லாரன்ஸ் ஆஃப் அரேபியா போன்ற படங்கள் வந்திருந்தாலும், கிளாடியேட்டர் தந்த திரை அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது. ரஸல் க்ரோவின் நடிப்பு, பிரமாண்ட கலோசியம், ரதங்கள், ரிட்லி ஸ்காட்டின் இயக்கம், வசனங்கள் என எல்லாமே கைகூடி வந்த ஒரு சினிமா கிளாடியேட்டர். அதற்கு பின்பு சில முறை அடுத்த பாகம் குறித்த செய்திகள் வந்தாலும், வெவ்வேறு காரணங்களால் அது நிகழாமலே இருந்தது.
கிளாடியேட்டர் இரண்டாம் பாகத்தின் ஒன்லைனுக்கும், முதல் பாகத்தின் ஒன்லைனுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றுதான்.
GLADIATOR II Oneline:
நுமிடியாவில் மனைவியுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் லூசியஸ். ஜெனரல் மார்கஸ் அகாஸியஸின் தலைமையில் நுமிடியாவை ரொமானிய வீரர்கள் தாக்கி, மேக்ஸிமஸை சிறைபிடிக்கிறார்கள். லூசியஸின் மனைவி அங்கேயே கொல்லப்படுகிறார்.
அடிமைகளோடு அடிமையாய் விடப்பட்ட லூசியஸை விலைகொடுத்து வாங்குகிறார் மேக்ரினஸ். தன்னுடைய பல திட்டங்களுக்கு லூசியஸைப் பயன்படுத்தவிருக்கிறார் மேக்ரினஸ். உண்மையில் லூசியஸ் யார். ரொமானிய பேரரசிற்கும், லூசியஸுக்கும் என்ன சம்பந்தம்..? மார்கஸ் அகாஸியஸ் உண்மையான நோக்கம் என்ன..? தொடர்ச்சியான போர்கள் ரோம் மக்களை என்னவாக மாற்றியிருக்கிறது உட்பட பல விஷயங்களை பேசியிருக்கிறது இந்த கிளாடியேட்டரின் இரண்டாம் பாகம்.
படம் எப்படி?
போர் புரிந்து போர் புரிந்து களைத்துப் போய் அதை வெறுக்கும் ஒரு ஜெனரல் என்ன மனநிலையில் இருப்பார். அதை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் மார்கஸ் அகாசியஸாக வரும் பெட்ரோ பேஸ்கல். அவருக்கு மட்டுமல்ல, அவரின் குழுவினருக்குமே கூட பெரிய நாட்டமில்லாமல்தான் போர்களில் சண்டையிடுகிறார்கள்.
'ஒரு அடிமையின் ஆகப்பெரும் வெற்றி, தனக்கான அடிமைகளை உருவாக்குவதுதான்' என்னும் கொள்கை கொண்டபவர் மேக்ரினஸ்.
மேக்ரினஸாக டென்சல் வாஷிங்டன். சமீபத்திய பேட்டி ஒன்றில், "மிகவும் குறைவான படங்களையே ஒப்புக் கொள்கிறேன். விரைவில் ஓய்வை அறிவிக்கவிருக்கிறேன்" என பேட்டியளித்திருந்தார். டென்சல் வாஷிங்டன் ஃபிலிமோகிராஃபியில் மற்றுமொரு மகுடமாக மேக்ரினஸ் கதாபாத்திரம் இருக்கும். அடிமையாக வாழ்ந்து, அரியணை நோக்கி நகரும் கதாபாத்திரம்.
"இதுதான் அரசியல்" என அத்தனை ஆண்டுக்கால அடிமைத்தனத்துடன் அரியணையைப் பார்த்து அவர் பேசுவது அவ்வளவு அழகு.
கிளாடியேட்டர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ரஸல் கிரோதான். எல்லோருக்குமான நாயகன்.
அதற்கு முன்பும், பின்பும் பல படங்கள் கிரோ நடித்துவிட்டார். கிளாடியேட்டர், ஸ்பார்ட்டகஸாக பலர் வந்து சென்றுவிட்டார்கள். ஆனால்,
கிளேடியேட்டர் என்றால் ரஸல் கிரோ. ரஸல் கிரோ என்றால் கிளாடியேட்டர் அவ்வளவுதான்.
அப்படியானதொரு கனமான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதை ஓரளவுக்கு சிறப்பாகவும் செய்திருக்கிறார்.
ரிட்லி ஸ்காட் இதற்கு முன்னர் இயக்கிய நெப்போலியனும் போர் திரைப்படம்தான் என்றாலும், அது அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. அந்த குறையை இந்தப் படத்தில் போக்கியிருக்கிறார் ஸ்காட். கலோசியம் காட்சிகளைவிடவும் டிராமா சார்ந்த பல காட்சிகள் எமோசனல் கனெக்ட்டுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. முதல் பாகத்தின் கதையை அப்படியே மீண்டும் வைத்திருப்பது மட்டும்தான் சிறுகுறை. பின்னணி இசையும் சிறப்பாக இல்லை.
திரையரங்குகளில் பார்த்து லயிக்க, நல்லதொரு அனுபவத்தை நிச்சயம் தரும் இந்த கிளாடியேட்டர் 2