ரத்தம் | சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லியிருக்கிறதா ரத்தம்..!
ரத்தம்(2 / 5)
நம் சமூகத்தில் நிகழும் கொலைகளில் யார் உண்மையான விக்டிம் என்பதை பேச முயன்றிருக்கிறது ரத்தம்.
தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த ஒரு பெரும்துயரத்தினால் பத்திரிகையாளர் துறையிலிருந்து விலகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் ரசிக வெறியால் கொலைசெய்யப்பட மீண்டும் பத்திரிகை துறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அந்தக் கொலைக்கும் சமூகத்தில் நிகழும் மற்ற கொலைகளுக்கும் ஒரு பேட்டர்ன் இருப்பதாக உணர்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு பத்திரிகையாளராக இவற்றை இவர் எப்படி இணைக்கிறார், கொலை செய்பவர்கள் யார், இந்த நெட்வொர்க்கின் பலம் என்ன என்பதுதான் ரத்தம் படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனிக்கு வரும் ஃபிளாஷ்பேக்கும், அவரின் தாடியும் சுத்தமாக ஒட்டவில்லை. ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணனுக்கு சீரியஸ் ரோல் எல்லாம் சரி தான். ஆனால் அவரோ ஓவர் ஆக்டிங் செய்து அவரின் கதாபாத்திரத்தை நகைப்புரியதாக்கியிருக்கிறார். நந்திதா ஸ்வேதாவும், ரம்யா நம்பீசனும் ஜெகனின் ஓவர் ஆக்டிங் பார்ட்டனர்கள்.
சர்வரை யார் முதலில் எடுப்பது என்கிற காட்சி உண்மையில் சுவாரஸ்யமானது. ஒரு சினிமாவில் ஹேக்கிங், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் லாஜிக் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக போலீஸ் வண்டிக்குள்ளேயே பாயைப் போட்டுத் தூங்குவது எல்லாம் செம்ம போங்கு பாஸ். குதிரை சேஸ் காட்சி முழுக்கவே சோம்பல் வழிந்தோடுகிறது. அவ்வளவு ஃபிளாஷ் பேக் சொல்லியே விஜய் ஆண்டனி மீது நமக்கு அனுதாபமும் வர மாட்டேன் என்கிறது. இதில் மஹிமா நம்பியார் மேல் நமக்கு எப்படி அனுதாபம் என்று தான் தெரியவில்லை. கேசுவலாகவே அவரின் கதாபாத்திரத்தை டீல் செய்திருக்கிறார்கள். இந்திய அளவில் புகழ்பெற்ற இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் விஜய் ஆண்டனிக்குத் தாடி வைத்திருப்பதால், யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. குடிபோதையில் இருப்பது விஜய் ஆண்டனியா சக பத்திரிகையாளர்களா என்றே தெரியவில்லை. (தமிழ்ப்படம் முதல் பாகத்தில் மரு வைத்து வரும் சிவா காட்சிக்கான ஈஸ்டர் எக்கா..!). அதே போல், விஜய் ஆண்டனி முதன் முதலாக வில்லனை சந்திக்கும் காட்சியும் சுவாரஸ்யமானது. ஆனால் அதையும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
இந்தியா போன்ற தேசத்தில் நாள்தோறும் வெறுப்புப் பிரசாரத்தின் நெடி என்பது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் அதன் நெடி இன்னும் அதிகம். இங்கு இருக்கக்கூடிய ஒரு புகழ்பெற்ற நடிகரையோ, அரசியல்வாதியையோ நியாயமான முறையில் கூட விமர்சிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. 'வெட்டுவோம் , குத்துவோம் நாங்க யார் தெரியும்ல' பாணியிலான ரீல்ஸும், ஷார்ட்ஸும் இணையம் முழுக்க பரவியிருக்கிறது. இந்த வெறுப்பை மூலதனமாகக் கொண்டு , கத்தி துப்பாக்கி போல மனிதர்களையும் கொலைக்கான ஆயுதமாய் பயன்படுத்த முடியும் என்பதை நிறுவ முயன்றிருக்கிறார் தமிழ்ப்படம் 1, தமிழ்ப்படம் 2 படங்களின் இயக்குநரான CS அமுதன். அந்த வகையில் ஒரு புதுவித டெக்னாலஜி கொலைகள் பற்றிப் பேசியதற்கு வாழ்த்துகள். ஷெர்லாக் ஹோம்ஸ் வசனங்கள், பத்திரிகை ஆபீஸ் (ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் செந்தில் ராகவன் ) போன்றவையும் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்காக எழுதப்பட்டிருக்கும் கதையும், அதை திரைப்படமாக்கியிருக்கும் விதமும் நம்மை சோதிக்கிறது.
இப்போது இந்தியா இருக்கும் சூழலில் hate speechகளின் ஆபத்து என்பது இன்னும் அதிகம். இங்கிருக்கக்கூடிய மைனாரிட்டிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் நாள்தோறும் எண்ணற்ற துயரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனால், படத்தின் லாஜிக்படி இங்கு நடந்த எல்லா வெறுப்புக் கொலைகளையும் எளிதாக personal issues வகைக்குள் கொண்டு வந்துவிடமுடியும். அரசியல் ரீதியிலான ஆபத்தைப் புறந்தள்ளிவிட்டு, படமாகவாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் ட்ரீட்மென்ட்டும் மிகவும் சொதப்பலாக இருக்கிறது. டல்லாக தொடரும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, 80ஸ் காலத்து ஜெய்ஷங்கர் பாணி திரைப்படங்களுக்கு வருவது போல வரும் பின்னணி இசையென ஏற்கெனவே அவுட் ஆஃப் டிராக்கில் செல்லும் படத்தை மேலும் கீழிறக்குகிறது டெக்னிக்கல் டீம். ஒற்றைக் கையில் விஜய் ஆண்டனி சண்டையிடுவதும் அதே 80ஸ் தான். தமிழ்ப்படம் ஸ்பூஃப்களில் வரும் 'அகில உலக சூப்பர் ஸ்டாரின்' வீட்டை பிரதியெடுத்தது போல் இருக்கிறது மஹிமா நம்பியாரின் ஹை டெக் ஆஃபீஸ். இது ஈஸ்டர் எக்கா இல்லை அடுத்த படத்துக்கான ஸ்பூஃப் காட்சியா என்பது அமுதனுக்கே வெளிச்சம்..!
தமிழ்ப்படம் 3ல் ரத்தம் படத்திலிருந்து நிறைய ஸ்பூஃப் செய்ய முடியும் என்பது மட்டுமே அமுதனுக்கான போனஸ்.