RATHNAM REVIEW | நமக்கு எதுக்கு ஹரி சார் அரசியல் எல்லாம்..!
RATHNAM REVIEW (1.5 / 5)
எதேச்சையாக பிரியா பவானி சங்கரை சந்திக்கும் விஷால், எதற்கு அவருக்காக உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார் என்பதே இந்த ரத்னம்.
வேலூர் எம் எல் ஏ சமுத்திரக்கனி. சமுத்திரகனியின் வலது கரம் விஷால். நல்லது கெட்டதென என எல்லாவற்றுக்கும் சமுத்திரக்கனி சார்பாக ஆஜராவது விஷால் தான். ஒரு நால் எதேச்சையாக சாலையில் பிரியா பவானி சங்கரை சந்திக்க, எங்கேயோ பார்த்த முகம் என தேடி அலைகிறார். பின் அவருக்கு இருக்கும் சிக்கல்களை அறிந்து அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் உதவ முன்வருகிறார். அது விஷாலுக்கு என்ன மாதிரியான பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இருக்கும் அந்த கனெக்ட் என்ன. பிரியாபவானி சங்கரை ஏன் வில்லன் க்ரூப் துரத்துகிறது மாதிரியான பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த ரத்னம்.
விஷாலில் கேரியரில் நடித்த பெரும்பாலான படங்களை இரண்டாகப் பிரித்துவிடலாம். IPS முதல் ஏட்டு வரை எல்லா கதாபாத்திரத்தில் ஒரு ரவுண்டு வந்துவிட்டார். இன்னொருபக்கம் ரவுடியாக வருவது. இந்தப் படம் ரவுடி அவதாரம். பறந்து பறந்து சண்டை போடுவதும்,பஞ்ச் பேசுவதும் விஷாலுக்கு கை வந்த கலை. ஆனால், எமோசனல் காட்சிகள் விஷால் வந்தாலே டல் அடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. திரைக்கு வெளியே அவர் செய்யும் ஆக்டிங் அளவுக்கு சினிமாவில் அவர் நடிப்பதில்லையோ என்று தோன்றுகிறது. அதுவும் க்ளைமேக்ஸில் பூசணி வெட்டறதில்லையா, தேங்காய் உடைக்கறதில்லையா என்றெல்லாம் க்ளோஸ் அப்பில் பேசிக்கொண்டே இருக்கிறார். ப்ளீஸ் விஷால். பிரியா பவானி சங்கருக்கு நடிக்க வாய்ப்பிருக்கும் கதாபாத்திரம். சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி, யோகிபாபு, முரளி ஷர்மா, ஹரீஷ் பேரடி, வேட்டை முத்துக்குமார், துளசி, ஜெயபிரகாஷ், மொட்டை ராஜேந்திரன் என பல தெரிந்த முகங்கள். ஆனால், சமுத்திரகனி, முரளி ஷர்மாவைத் தவிர யாருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் எழுதப்படவில்லை. துளசிக்கு எல்லாம் சீரியல் சென்டிமென்ட் காட்சி போல ஒரு லிட்டர் க்ளீசரனை கண்ணில் ஊற்றி அழ வைத்திருக்கிறார்கள்.
ஹரி படங்களின் பெரும்பலம் ஆக்சன் காட்சிகளோ, வசவுச் சொற்களோ , காமெடி டிராக்கோ அல்ல. அவர் படங்களில் இருக்கும் குடும்ப அமைப்பும், அந்த அமைப்பிற்காக கதாநாயகன் செய்யும் தியாகமுமே அவர் படங்களின் அடிநாதம். இந்தப் படத்திலும் அப்படியானதொரு ஒன்லைனைப் பிடித்திருக்கிறார் ஹரி. ஆனால், அதற்கேற்ற காட்சிகளும், திரைக்கதையும் இல்லாததால், எந்த எமோசனல் கனெக்ட்டும் இல்லாமல் அந்தக் காட்சிகள் நகர்கின்றன.
இடைவேளைக்கு முன்னை சிங்கிள் ஷாட்டில் ஒரு சண்டைக் காட்சியை கனல் கண்ணனுடன் வடிவமைத்திருக்கிறார் ஹரி. அசத்தலான முயற்சி. நிறைய நடிகர்கள், பர பர சேஸிங், வெடிக்கும் வண்டிகள் என பலவற்றையும் இணைத்து ஹரி செய்திருப்பது இக்கால இளம் இயக்குநர்களுக்கு நிச்சயம் ஒரு சவாலாக இருக்கும். சுகுமாரின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாதின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. SP சரண் குரலில் எதனாலே, கபில் கபிலன் குரலில் உயிரே இரண்டு பாடலையும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மெலடி பிளேலிஸ்ட்டில் சேர்த்துவிடலாம். ஆனால், அந்தக் கடைசி பாடல் தான் ஏதோவொரு ராஜா பாடலை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
நீட் பற்றிய புரிதலற்று தமிழ் சினிமாவிலேயே விஷம கருத்துக்களுடன் சில படங்கள் வெளிவந்ததுண்டு. மருத்துவர்களின் தரத்தை நக்கல் செய்யும் விதமாக வசனங்களை அந்தப் படங்களில் எழுதியிருப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் நீட் குறித்தும், தனியார் மருத்துவ சீட் கட்டணம் குறித்தும் தெளிவாக பேசியிருக்கிறார் ஹரி. அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள். இறுதிக்காட்சிக்கும் பாராட்டுக்கள். அதே சமயம், இலவசங்கள் குறித்த அரசியல் போதாமை; எல்லோரையும் குடிகாரர்கள் என ஏளனம் செய்வது; ரௌடிக்கு புது விளக்கம் கொடுப்பது என படத்தில் நிறைய பிரச்னைகள். 'செத்துட்டானா நான் இங்க இன்னும் பேசிட்டிருக்கேன்", " ஜாக்கி தூக்கின வண்டி மாதிரி காக்கிய தூக்கிட்டு வந்துடறீங்க" என சில வசனங்களில் ஹரி டச். ஆனால், " போலீஸும் ரவுடியும் அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தா தான் ஊரு நல்லா இருக்கும்"; " காசுக்காக கொலை பண்ற பொறிக்கி இல்ல, கொள்கைக்காக கொலை பண்ற ரவுடி", " கடவுளுக்கு தீபராதனை காட்டும்போது சந்தோசமா இருக்கும். ஆனா , அதே தட்டோட கையேந்தி நிக்கறப்ப வலிக்கும். அந்த இழிநிலைல இருந்து வெளிய வரணும்னு தான்" என போகிற போக்கில் எந்த புரிதலும் இல்லாமல் வசனங்களை வீசி எறிந்திருக்கிறார். " எங்க அம்மாவ பத்தி நான் எப்படி வெளில சொல்ல முடியும்" என விஷால் அழுது புலம்பும் போதெல்லாம். "என்ன சார் அறிவு இல்லாம எதை எதையோ பேசிட்டு இருக்கீங்க. உங்க அம்மா உங்க லாஜிக்படியே யோசிச்சாலும் எந்த தப்பும் பண்ணலையே" என சொல்லத் தோன்றுகிறது. இன்னார் தான் அரசியல் படம் எடுக்க வேண்டும், இன்னார் எடுக்கக்கூடாது என யாரும் கட்டளையிட முடியாது. ஆனால், அரசியல் புரிதல் இல்லாமல் இப்படியான படங்களை எடுப்பது ஹரி மாதிரியான சீனியர் இயக்குநருக்கு அழகல்ல.
தமிழ் சினிமாவின் டாப் டென் கமர்ஷியல் இயக்குநர்களில் ஹரிக்கு நிச்சயம் இடமுண்டு. ஆனால், ரத்னம் மாதிரியான படங்கள் அவரை அந்த பட்டியலில் இருந்து விலக்கவே வழிவகை செய்யும்.
ஹரி படங்களுக்கான ஆடியன்ஸ் இப்போதும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அதீத மசாலா, இப்ப இருக்குற டிரெண்டுக்கு மாறுகிறேன் என்றெல்லாம் எதையும் செய்யாமல் பர பர கமர்ஷியல் சினிமா ஒன்றை ஹரியால் நிச்சயம் இயக்க முடியும். அந்தப் படத்திற்காக காத்திருப்போம்.