வேட்டையன் விமர்சனம் : சமூக அக்கறை புரிகிறது... ஆனால் குறி சரியா இருக்க வேண்டாமா?
வேட்டையன் விமர்சனம்(2.5 / 5)
அதியன் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். குற்றங்களைக் குறைக்க என்கவுன்டர்தான் ஒரே வழி என தீர்க்கமாக நம்பும் மனிதர். பள்ளி ஆசிரியை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், அவரின் என்கவுன்டர் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்பதை தீர்க்கமாக நம்பும் சத்யதேவ் அதியனை கேள்வி கேட்கிறார். தான் செய்த தவற்றை சரி செய்ய முயல்கிறார் அதியன். ஆனால், வழக்கு வேறு திசை நோக்கி நகர்ந்து பல்வேறு பூதங்களை கிளப்புகிறது. வழக்கு என்ன ஆனாது, அதியன் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாரா இல்லையா என்பதே வேட்டையனின் மீதிப்படம்.
வேட்டையன் அதியனாக ரஜினிகாந்த். தான் தவறு செய்துவிட்டோம் என வருந்தும் இடங்களில் நல்லதொரு பெர்பாமன்ஸ். கண்ணாடியை தூக்கிப்போட்டு பஞ்ச் பேசும் இடங்களில் சூப்பர் ஸ்டார் டச். ஆனால், சண்டைக் காட்சிகளிலும் நடனக் காட்சிகளிலும் சோர்வு அவரையும் மீறி வெளிப்பட்டுவிடுகிறது. டப்பிங்கிலும் சில காட்சிகளில் இன்னும் கூடுதலாய் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அமிதாப், ஃபகத் ஃபாசில், ராணா, கிஷோர், ரித்திகா சிங், துஷாரா, ரோஹினி என நீளும் ஸ்டார் காஸ்ட்டிங்கில் அமிதாப்புக்கும், ஃபகத்துக்கும் மட்டுமே கனமான கதாபாத்திரம். அமிதாப்பின் தமிழுக்கு அவர் குரலை வைத்தே AI உதவியுடன் டப்பிங் செய்திருப்பது நல்லதொரு முயற்சி. கனமான கதைக்கு நடுவே ஆங்காங்கே காவல்துறையை நக்கலடித்தபடி சிரிக்க வைக்கிறார் ஃபகத் ஃபாசில். யானைப்பசிக்கு சோளைப்பொறி போல உள்ளது ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம். ஆனால் அதிலும் தனக்கு கிடைத்ததை கரும்பாக நினைத்து, இனிக்க வைத்திருக்கிறார் ஃபகத்.
ரித்திகா சிங்கிற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஏற்ற கதாபாத்திரம், அதை சிறப்பாக செய்திருக்கிறார். துஷாராவுக்கு சிறிய வேடம்தான் என்றாலும், அவரைச் சுற்றித்தான் கதை என்பதால் அவருக்கான கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிவு செய்ய உதவியிருக்கிறார். கிஷோர் , ராணா எல்லாம் வீண்தான் என்றாலும் ரஜினி படத்தில் இதெல்லாம் வழக்கமானதுதான் என்பதால் பெரிய குறையில்லை.
மாஸ் மகராஜாவான ரஜினியை வைத்துகொண்டு சமூக படம் எடுக்க முயன்றிருக்கிறார் த.செ.ஞானவேல். என்கவுன்டர், ஆன்லைன் கோச்சிங் என சமூகத்தில் நீக்கமற நிறைந்து இருக்கும் இரண்டு விஷயங்களை வைத்து கதையைத் தயார் செய்திருக்கிறார். அதிலும்
நிஜத்திலும் பொது சமூகத்தின் மனநிலை என்பது என்கவுன்டருக்கு ஆதரவானதுதான். அது தவறு என்பதை சொல்ல முயன்ற விதத்தில் ஞானவேல் கவனிக்க வைக்கிறார்.
Justice Delayed is Justice Denied
என சொன்ன ஜெய்பீம் இயக்குநர்,
இந்த முறை
என சொல்ல வைத்திருக்கிறார்.
மாஸ் காட்சிகளில் பின்னணி இசையில் அனிருத்தின் இசை அசத்தலாக உள்ளது. ஆனால், ரஜினியின் மாஸும், ஞானவேலின் சமூக அக்கறையும் கலக்கும் இடங்களில்தான் சிக்கல் தொடங்குகிறது. மாஸான காட்சிகள் ஏனோ ரஜினியின் சம்பிரதாய காட்சிகளாகவே நீள்கிறது. அதே போல், படம் ஒரு கட்டத்துக்கு மேல், என்கவுன்டர் தவறு என்கிற விவாதத்திற்குப் பதிலாக நல்ல என்கவுன்டர் வெர்சஸ் கெட்ட என்கவுன்டர் விவாதத்திற்குள் சென்றுவிடுகிறது. அதை படத்தின் இறுதிக் காட்சிகள் ஊர்ஜிதம் செய்கிறது.
கமர்ஷியல் பழிவாங்கலுக்காக நேர்ந்துவிடப்பட்ட பாலியல் அத்துமீறல் கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதன் மூலம் ஞானவேல் என்ன சொல்ல நினைக்கிறார் என தெரியவில்லை. இவ்வளவு சமூக அக்கறைகொண்ட ஒரு இயக்குநர் ஏன் இவ்வளவு மோசமாக அந்த காட்சிகளை சித்தரித்தார் என தெரியவில்லை.
ஒரு தொழில்நுட்பத்தை நம்பி சண்டைக் காட்சிகள் என்பது தவறில்லை. ஆனால், அதையே மீண்டும் மீண்டும் எல்லா காட்சிகளிலும் திணிப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் க்ளைமேக்ஸ் எல்லாம் லிங்காவை நினைவுபடுத்திவிடுகிறது. நீதிமன்றதுக்கு மேலேயே ஹெலிபேட் வச்சிருப்பார் போலயே.!
வேட்டையனின் குறி என்கவுன்டர் குறித்து மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் இரை விழிந்திருக்கும்.