பார்க்கிங்
பார்க்கிங்PARKING

PARKING Review| ஒரே பார்க்கிங்... இரண்டு கார்... ஈகோ யுத்தம் என்ன ஆகிறது..?

எம்.எஸ்.பாஸ்கர் கேரியரில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இளம்பரிதி நிலைத்து நிற்கும். அனுபவத்தை மீறி ' நான்' என்கிற அகங்காரம் குடிகொண்டவுடன் அவர் எடுக்கும் விஸ்வரூபம் ஆச்சர்யம் அளிக்கிறது. அந்த ஈகோ அவரை எவ்வளவு கீழான நிலைக்கு இட்டுச் சென்றாலும்..
Published on
PARKING(3 / 5)

ஒரே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு நபர்களுக்கு அங்கிருக்கும் ஒரே பார்க்கிங்கால் வரும் சண்டை எந்தளவு நீள்கிறது என்பதுதான் பார்க்கிங் திரைப்படத்தின் ஒன்லைன்.

முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் சூழலில் ஈஸ்வரும், அதிகாவும் ஒரு குடியிருப்பின் மேல்மாடி போர்ஷனுக்கு குடியேறுகிறார்கள். அந்த வீட்டின் கீழ்த்தளத்தில் நேர்மையான அரசு அதிகாரியான இளம்பரிதி தன் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார். ஸ்பெலெண்டர் பைக்கையே பலமுறை பஞ்சர் போட்டு ஓட்டும் அளவுக்கு கைசுத்தமான அதிகாரி. அவரின் அந்த அதீத நேர்மைக்காகவே மனைவி செல்வியும், மகள் அபர்ணாவும் இளம்பரிதி மீது கொஞ்சம் கடுப்புடனே சுற்றி வருகிறார்கள்.

வாடகை வீட்டையே சொந்த வீடு அளவுக்கு நிம்மதியாய் நடத்திக்கொண்டிருக்கும் இளம்பரிதிக்கு முதல் இடி ஈஸ்வரின் கார் மூலம் வருகிறது. அதுநாள் வரையில் பார்க்கிங் மொத்தமும் தனது பைக்கிற்காகவே பயன்படுத்திவந்த இளம்பரிதிக்கு இது பெரும் ரோதனையாக இருக்கிறது. ஒருநாள் இருவரின் வண்டிகளும் பார்க்கிங்கின் போது உரசிக்கொள்ள, ஏற்கெனவே துளிர்விட்டிருந்த ஈகோ பற்றி எரியத் தொடங்குகிறது. வீட்டின் உரிமையாளரும் கார் வைத்திருப்பவர் பக்கம் சாய்ந்துகொள்ள , சேர்த்து வைத்த பணத்தில் கார் வாங்குகிறார் இளம்பரிதி. ஆண் என்னும் வரட்டு கௌரவமும், ஈகோவும் இணைந்துகொண்டால் என்ன என்ன சீரழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்பார்க்கிங்

அரசு அதிகாரி இளம்பரிதியாக எம்.எஸ்.பாஸ்கர். Tailor Made என்பார்களே அப்படியானதொரு கதாபாத்திரம். எம்.எஸ்.பாஸ்கர் கேரியரில் மிக முக்கியமான கதாபாத்திரமாக இளம்பரிதி நிலைத்து நிற்கும். அனுபவத்தை மீறி ' நான்' என்கிற அகங்காரம் குடிகொண்டவுடன் அவர் எடுக்கும் விஸ்வரூபம் ஆச்சர்யம் அளிக்கிறது. அந்த ஈகோ அவரை எவ்வளவு கீழான நிலைக்கு இட்டுச் சென்றாலும், அதை ரசித்தே செய்யும்படியான கதாபாத்திரம். பிரமாதப்படுத்தியிருக்கிறார். கோபம், இயலாமை, குரூரம், நயவஞ்சகம் என எல்லாவற்றையும் விளாசித்தள்ளியிருக்கிறார். ஐடி இளைஞர் ஈஸ்வராக வரும் ஹரிஷ் கல்யாணுக்கு கோபம் அட்டகாசமாய் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 'தவற்றை வருந்தி உணரும் தருணங்கள்' அவர் கதாபாத்திரத்திலும் பெரிதாக இல்லை. அவருக்கும் கோபம் அளவுக்கு மற்ற உணர்ச்சிகள் எளிதாக கைகூடவில்லை.

படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு அடுத்தபடியாக ஈர்ப்பது செல்வியாக வரும் ரமாவும், அபர்ணாவாக வரும் பிரார்த்தனாவும் தான். " நேத்து மிக்ஸிய ரெடி பண்ணித்தாங்கன்னு சொன்னதுக்கு , மிக்ஸிய தூக்கிப்போட்டு உடைச்சுட்டு, இன்னிக்கு கார் வாங்கிட்டு வந்திருக்காரு. இப்ப சட்னிய அந்தாள் மண்டைலயா அரைப்பேன்' என இயலாமையின் கோபத்தில் ரமா வெடிக்கும் போது தியேட்டரில் சிரிப்பலைகள். மகளுக்காக பேசுவது, கணவருக்காக பேசுவது, நியாயத்தின் பக்கம் நிற்பது என இரண்டு ஆண்களுக்கு இடையேயான கதைக்கரு கொண்ட படத்தில் தனக்காக வெளியை உருவாக்கி அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ரமா. பிரார்த்தனாவுக்கு சிறிய வேடம் தான் என்றாலும், எம்.எஸ்.பாஸ்கரிடம் தனக்காக பேசும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஹவுஸ் ஓனர் இளவரசு, கார் க்ளீனர் பாப் மார்லி, LIC ஏஜெண்ட் , இஸ்திரி போடும் நபர் என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் சிறப்பாக கதையோட்டத்துடன் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்PARKING

ஒரு பார்க்கிங் இருக்கும் வீடுகளில் இரண்டு பைக்குகள் நிறுத்தும் போதே ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். அதில் புதிதாக வருபவர் கார் வாங்கினால், பல ஆண்டு குடியிருக்கும் நபர் அடையும் வேதனை எந்த அளவுக்குச் செல்லும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன். கார் காட்சிகளை த்ரில்லருக்கான பாணியில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜிஜு சன்னி. பாடல்கள், பாடல்வரிகளை கடந்துவிட்டால் பின்னணி இசையில் த்ரில்லர் பாணியில் சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார் சாம் CS. எளிமையான கதையில் , சின்ன சின்ன பொருட்கள் வழி நகரும் திரைக்கதையை அதன்வழி எடிட் செய்து ஈர்க்கிறார் பிலோமின் ராஜ்.

ஹீரோ- வில்லன் என்பதைக் கடந்து இரண்டு ஆண் மனங்களின் ஈகோ இரண்டு குடும்பங்களை எந்த எல்லைக்கு கொண்டு செல்லும் என்பதாய் ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்குப் பின்னர் டிராக் மாறிவிடுகிறது. எம்.எஸ்.பாஸ்கர் அதுநாள் வரையில் சம்பாதித்த பெயருக்கு ஹரிஷ் கல்யாணால் இழுக்கு வந்துவிட்டதால் , ஒரு கீழான செயலைச் செய்கிறார். ஆனால், அந்த செயல் அவரை ஹீரோவுக்கான போட்டியாளர் என்பதிலிருந்து வில்லனாக மாற்றிவிடுகிறது. ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரம் வெறுமனே ஈகோவுக்குள் சுறுங்கிவிட, எம். எஸ். பாஸ்கரின் கதாபாத்திரமோ வக்கிர மனம் கொண்ட கீழான நிலையில் இருந்து சில விஷயங்களை அணுகுகிறது. அதனாலேயே இரண்டாம் பாதியில் அந்தக் கதாபாத்திரம் அதன் இயல்பிலிருந்து விலகிவிடுகிறது. யதார்த்தமாக நகரும் கதை கொஞ்சம் கொஞ்சமாக த்ரில்லர் பாணிக்குச் சென்று, க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயம் ஹாரராக மாறிவிடுகிறது. மனித மனங்களுக்குள் ஈகோ முளைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்காக இவ்வளவு கீழானதாக காட்டியிருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.

பார்க்கிங்
மன்சூர் அலிகானை மன்னிப்பதா தண்டிப்பதா? போலீஸுக்கு நடிகை த்ரிஷா கொடுத்த பதில்!

எல்லோரும் யூகிக்கக்கூடிய க்ளைமேக்ஸ், இரண்டாம் பாதியின் சறுக்கல்கள் போன்றவற்றை சரிசெய்திருந்தால் இரண்டு கார்களையும் இந்த பார்க்கிங்கில் நிம்மதியாய் பார்க் செய்திருக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com