மெரி கிறிஸ்துமஸ்
மெரி கிறிஸ்துமஸ்திரை விமர்சனம்

MERRY CHRISTMAS Review | சிறப்பான திரைக்கதை, தரமான வடிவமைப்பு, கில்லாடி க்ரைம் ட்ராமா... ஆனாலும்...!

மெரி கிறிஸ்துமஸ் - முன்பின் தெரியாத இரண்டு ஸ்டேஞ்சர்ஸ் ஒரு கிறிஸ்துமஸ் இரவில் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களின் கடந்த காலமும் நிகழ்காலமும் என்ன?
Published on
Merry Christmas Review(3 / 5)

ஆல்பர்ட் ஆரோக்யராஜ் (விஜய் சேதுபதி) ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வருகிறார். இந்த ஏழு வருட இடைவெளியில் அவருக்காக காத்திருந்த அம்மா இறந்துவிட்டார், அம்மாவின் நினைவுகள் சுமந்த வீட்டுக்கு சென்று மெல்ல மெல்ல செட்டில் ஆகிறார்.

அன்று இரவு ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பும் ஆல்பர்ட், ஒரு உணவகத்தில் மரியாவை (கத்ரீனா கைஃப்) சந்திக்கிறார். சில நிகழ்வுகளுக்குப் பிறகு மரியாவும் அவரது மகள் ஆன்னியும் (பரி மகேஷ்வரி) ஆல்பர்ட்டுடன் இணைந்து பயணிக்கும் சூழல் உண்டாகிறது. அந்த இரவு முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பல நிகழ்வுகள் நடக்கிறது, பல பிரச்சனைகள் கிளம்புகிறது. இவற்றிலிருந்து இந்த மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பதே கதை.

மெரி கிறிஸ்துமஸ்
Dunki | Salaar | Aquaman - இந்த வார ரிலீஸ் என்னென்ன படங்கள்?

ஸ்ரீராம் ராகவன் க்ரைம் ட்ராமா இயக்குவதில் கில்லாடி என்பது நமக்குத் தெரிந்ததே. அவரது `Johnny Gaddaar', ரிவென்ஜ் ட்ராமா `Badlapur' மற்றும் காமெடி - க்ரைமை அழகாக இணைத்து இயக்கிய `Andhadun' என அனைத்தும் சிறப்பானவை. `Merry Christmas' மூலம் மீண்டும் டார்க் காமெடியில் ஒரு க்ரைம் த்ரில்லரை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் சிறப்பே இதன் திரைக்கதைதான்.

இந்தப் படத்தை எழுதியிருக்கும் Sriram Raghavan மற்றும் Arijit Biswas, Pooja Ladha, Surti Anukriti Pandey, Pratheep Kumar, S Abdul Jabbar, Prasanna Bala Natarajan, Lata Karthikeyan அனைவருக்கும் பாராட்டுகள். கதையில் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமும் படத்தின் முடிவில் அழகாக வந்து இணைகிறது என்பது ஆச்சர்யம் கொடுக்கிறது. அவற்றை விரிவாக சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும். இந்தப் படம் பல கதைகளையும், சில கேள்விகளையும், தத்துவத்தையும் கூட சொல்கிறது.

ஆல்பர்ட், பெட்டைம் ஸ்டோரியாக ஆன்னிக்கு சொல்லும் கதை, கான்ஸ்டபிள் லக்‌ஷ்மி சொல்லும் புலி வேட்டைக்கதை எல்லாமும் படத்துக்குள் பொருந்துவது, ஆல்பர்ட்டும் மரியாவும் குடும்பம், காதல், குற்றவுணர்வு பற்றி வெவ்வேறு தருணங்களில் தங்களை கேட்டுக் கொள்ளும் கேள்விகள், ஆல்பர்ட்டின் பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும், ஸ்கேண்டினேவியன் தத்துவம் Yaadhum போன்றவையும் படத்தின் ஹைலைட்ஸ்.

Pramod vishwakarma

நடிப்பு பொறுத்தவரை, விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கதாப்பாத்திரம் எதுவானாலும் அதில் விஜய் சேதுபதியாகவே தோன்றும் பிரச்சனை இதிலும் தொடர்கிறதுதான். ஆனால், பல காட்சிகளில் பளிச்சிடுகிறார். என்ன நிகழ்கிறது என்ற குழப்பத்துடன் மரியாவின் வீட்டுக்கு மூன்றாம் நபருடன் அவர் செல்லும் காட்சி குபீர் ரகம். துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ராதிகா, ராதிகா ஆப்தே, கவின் பாபு, சண்முகராஜா மற்றும் ஆன்னி கதாப்பாத்திரத்தில் வரும் பரி மகேஷ்வரி என அனைவரும் சிறப்பு.

மது நீலகண்டன் ஒளிப்பதிவு காட்சிகள் பல கோணங்கள் அழகு. ப்ரீத்தம் இசையில் பாடல்கள் அவ்வளவு ஈர்க்கவில்லை. ஆனால் ரெட்ரோ ஜாஸ் இசை மூலம் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறார் பின்னணி இசையமைப்பாளர் Daniel B. George. மேலும் ஒவ்வொரு காட்சியின் தேவையறிந்து நிதானத்துடன் படத்தை தொகுத்திருக்கிறார் பூஜா. படத்தின் கூடுதல் பலம், படம் பார்க்கும் போது லாஜிக் கேள்விகள் பெரிதாக வராது என்பதே. அந்த அளவு சுவாரஸ்யமாய் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது. க்ளைமாக்ஸை ஒட்டி வரும் ஒரு பதற்றமான காட்சி மிகத் தரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

Pramod vishwakarma

அதேவேளையில் படத்தின் சில குறைகளும் உண்டு. சில காட்சிகள் நாம் யூகிக்கும் படியே நடப்பது, விஜய் சேதுபதி யாருடன் தொலைபேசியில் பேசினார், கத்ரீனா எப்படி தன் திட்டத்தை இவ்வளவு நம்பினார், ஒரே இரவில் மொத்த தடயங்களையும் அழிக்கப் போடும் திட்டம் போன்ற லாஜிக் இடையூறுகள் இருக்கிறது. கூடவே பின்னால் வரும் முடிவுகளுக்கு ஏற்றவாறு சில செட்டப்கள் வலிந்து திணித்திருக்கும் உணர்வும் வந்தது. மேலும் படம் பைலிங்குவலாக எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழில் பார்க்கையில் ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வே வருகிறது. இது போன்ற சில குறைகள் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.

ஸ்ரீராம் ராகவனின் பென்ச் மார்க் படமான `Andhadun’ அளவுக்கு சிறந்த படமா என்றால், இல்லைதான். ஆனால் நமக்கு பொழுதுபோக்கை வழங்க கொஞ்சமும் தவறவில்லை என்பது மட்டும் நிஜம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com