Meiyazhagan review | மாரியாய் பொழியும் அன்பிலிருந்து ஓடியிருக்கிறீர்களா..?
meiyazhagan(3 / 5)
நினைவுகளே வேண்டாம் என்று உதறி ஓடும் நபர்... பழைய நினைவுகள் அத்தனையும் பொக்கிஷமாக சேமிக்கும் நபர்... இருவரின் ஒரு நாள் பயணமே `மெய்யழகன்’
சொத்துப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்த கசப்பான சம்பவங்களால், தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்கிறது அருள் (அர்விந்த் சுவாமி) குடும்பம். 20 வருடங்களுப் பிறகு சித்தி மகளின் திருமணம் வரவே, தங்கை மீதான பாசத்தால் தவிர்க்க முடியாமல் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். ஒரு இண்ட்ரோவர்ட்டா அழகா, ரிஷப்ஷனுக்கு சென்று கிஃப்ட்டைக் கொடுத்துவிட்டு இரவோடு இரவாய் கப்சிப் என பஸ் பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் அருள். ஆனால் அங்கு அவர் சந்திக்கும் உறவுக்காரர் (கார்த்தி) குறுக்க இந்த கௌஷிக் வந்தா என களம் இறங்க, அதன் பின் நிகழ்பவையே மீதிக்கதை.
மிக எளிமையான கதை ஒன்றை... இல்லை இல்லை, சின்ன நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை மிக எதார்த்தமாக படமாக்குவதில் வல்லவர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிரேம்குமார். 96 போலவே இதுவும் ஒரு நாளில் நடக்கும் கதை. இரு கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை. ஆனால், இதில் சின்னச் சின்ன தருணங்களை, மெல்லிய உணர்வுகளை அழகாய் காட்சிகளுக்குள் கடத்துகிறார் இயக்குநர். திடுக்கென நினைவில் மின்னி மறையும் பாடலின் ஹம்மிங், நடத்துனர் இருக்கையில் அமர்வதா, எழுவதா என்ற தடுமாற்றம், கொய்யாக் கூடையை தூக்கி கொடுத்தவருக்கு ஒரு கொய்யாப்பழத்தை வெடுக்கென கையில் திணித்து செல்லும் பாட்டி, உறவினரைப் பார்த்ததும் மலரும் முகம் எனப் மிகவும் எளிமையான, அழகான தருணங்களை எடுத்து கோர்த்திருக்கிறார். படம் முழுக்க ஒரு லைவ் தன்மையைக் கொடுத்திருப்பது பெரிய பலம்.
கார்த்திக்கு இது ஒருவகையில் இன்னொரு பருத்திவீரன். இதுவரை நடித்த அத்தனை நடிப்பையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு புது மனிதராக வந்திருக்கிறார். சிறு குழந்தை போல குளிப்பதில் போட்டி போடுகிறார், எதேர்ச்சையாக வந்த ஒரு பொருளின் மகத்துவத்தை விவரிக்கிறார், எப்போதோ யோசித்த பாடல் பல நேரம் கழித்து நினைவில் வந்ததும் குதுகலமாகிறார்... உண்மையில் கார்த்தி படம் முழுக்க மிளிர்கிறார், அவரிடமிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. இந்த அன்பை தொல்லையாக நினைத்து உதறுவது, பின்பு துடித்துப் போவது என கச்சிதமாக நடித்திருக்கிறார் அர்விந்த் சுவாமி. இவர்கள் தவிர கருணாகரன், ராஜ்கிரண், இளவரசு, ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ரேச்சல் ரெபேக்கா என அத்தனை பேரும் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் இதம் என்றால், பின்னணி இசை இன்னும் இதம். யாரோ இவன் யாரோ பாடல் வரும் இடத்தில் மனம் உருகிப் போகிறது. மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவிலும் அத்தனை அழகியல், இயல்பு. பேருந்து பயணம், இரவு நேர சைக்கிள் பயணம், வயர்களுக்கு இடையே கூடு கட்டும் பறவை, கிணற்றடி, ஜல்லிக்கட்டு, விறகு எரியும் வெளிச்சத்தில் இருவரின் உரையாடல் என ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் குறை என எடுத்துக் கொண்டால், இரண்டாம் பாதியில் கதையில் இருந்து விலகிச்செல்லும் சில காட்சிகளை தான் சொல்ல வேண்டும். ஒரு கதாப்பாத்திரம், அதன் நிலையில் இருந்து சொல்லும் விஷயங்களாகவே அதை எடுத்துக் கொண்டாலும், இந்தத் திரைக்கதைக்குள் அதன் அவசியம் என்ன என்ற எந்த தெளிவும் இல்லை. அருள் கதாப்பாத்திரத்தின் குடும்பப் பிரச்சனையை வார்த்தையில் கடந்தாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, அவர் ஏன் தங்கைக்காக திரும்ப வருகிறார் என்பதையும், தங்கையின் மீதான பாசத்தை கூறும் படியாகவும் ஒரு காட்சி நம்மை நெகிழ்த்துகிறது. ஆனால், சம்பந்தமில்லாமல் வரும் போர் கதைகளும், ஜல்லிக்கட்டும் நம்மால் அத்தனை எளிதாய் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும், நினைவுகளை கண்டு மிரண்டு ஓடும் ஒருவர், தன் கடந்த கால நினைவில் இருந்து ஒரே ஒரு பெயரை, ஒரே ஒரு நபரை மீட்டெடுக்க முயற்சிக்கும் முரண், இதன் ஊடாக பல கதாப்பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்தி, நெகிழ்த்தி, கலங்க வைத்து, உருக வைத்து, ஆனந்தப்படுத்தியிருக்கும் மெய்யழகனை, நிச்சயம் திரையில் கண்டு களிக்கலாம்.