Maharaja review |லட்சுமிக்கு என்ன தான் ஆச்சு.. எப்படியிருக்கிறது விஜய் சேதுபதியின் 50வது சினிமா..?
Maharaja(2.5 / 5)
மகாராஜா (விஜய் சேதுபதி) சலூன் நடத்திக் கொண்டிருப்பவர். மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான மகள் ஜோதி (சச்சனா). தான் எல்லாம் என வாழ்ந்து வருகிறார் மகாராஜாவும், ஜோதியும் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக லக்ஷ்மியையும் பார்க்கிறார்கள். மகள் ஜோதி ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாகிறார் மகாராஜா. வேலை முடித்து வீடு திரும்பிய தன்னை, திடீரென தாக்கிவிட்டு வீட்டிலிருந்த லக்ஷ்மியை ஒரு கும்பல் திருடிவிட்டார்கள் என்ற புகாருடன் காவல் நிலையம் செல்கிறார். முதலில் அந்த வழக்கில் ஆர்வம் காட்டாத காவலதிகாரியிடம், லக்ஷ்மியை கண்டுபிடித்துக் கொடுத்தால் 7 வட்சம் தருவதாக ஒரு ஆஃபர் தருகிறார். காவல் துறை விசாரணையை துரிதப்படுத்துகிறது. லக்ஷ்மி யார்? உண்மையில் மகாராஜாவின் திட்டம் என்ன? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இதற்கு முன் குரங்கு பொம்மை என்ற சிறப்பான படத்தைக் கொடுத்திருந்தார். அதனாலேயே மகாராஜா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. உடல்ரீதியான தாக்குதல்கள் பற்றிய காட்சிகள் இவ்விரண்டு படங்களிலும் உண்டு. அதே நேரம் இவர் இயக்கிய `புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படம் எமோஷனலாக நம்மை நிலைகுலையச் செய்யும். அதைப் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும்.
மகாராஜா படத்தின் பெரும் பலமே அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு புதிர் போன்று எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை பார்வையாளனின் கவனத்தை கவர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற யூகங்களுடன் நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. படத்தின் முக்கால்வாசி கதை, ஒரு செட்-அப் என வைத்துக் கொண்டால், கடைசி 10 - 15 நிமிடங்கள் Payoff. கண்டிப்பாக அந்த ட்விஸ்ட் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. படத்தின் மையக் கதை பற்றி பேச துவங்கும் முன்பு, காமெடிகளை சுவாரஸ்யமாக கதையில் சேர்த்திருக்கிறார்கள். மகாராஜா தன் கேஸை விசாரிக்க சொல்லி, திரும்ப திரும்ப தன் வீட்டில் நடந்தவற்றை கூறுவது, முரட்டுத்தனமான ஆள் நடிகர் குணால் ரசிகர் சொல்வது, டிவிஎஸ் 50 திருடனுக்கு, போலீஸ் என பெயர் வைப்பது, அதன் மூலம் நடக்கும் காமெடிகள், குற்றத்தை தடுக்க வேண்டிய காவலதிகாரிகள், ஒரு ஃபோர்ஜரி வேலையில் ஈடுபடுவது என்ற முரண் எனப் பல விஷயங்களை காமெடியாக சொல்லியிருந்ததும், அதன் மூலம் சுவாரஸ்யமாக கதை நகர்த்தியதும் சிறப்பு.
நடிப்பு பொறுத்தவரை முன்னிலை வகிப்பது விஜய் சேதுபதிதான். 50வது படத்திலும் அசத்தியிருப்பதற்கு வாழ்த்துகள். அவரின் நடிப்புக்கு உதாரணமாக ஒரு காட்சியை சொல்வதென்றால், ஒரு கதாப்பாத்திரத்திடம் கோபமாக சவால் விட வேண்டும், அந்தக் காட்சியில் அவரின் உடல் மொழியே போதும் அவரது சிறப்பான நடிப்பை பற்றி கூற. அவர் மட்டுமின்றி பாய்ஸ் மணிகண்டன், நட்டி, சிங்கம் புலி, அபிராமி, வினோத் சாகர், சச்சனா எனப் பலரும் சிறப்பான நடிப்பைப் கொடுத்திருந்தனர். குறிப்பாக சில நிமிடங்களே வந்தாலும் , பிரதாமப்படுத்தியிருக்கிறார் அபிராமி. அனுராக் காஷ்யப்பின் தோற்றமும், காட்சியில் அவரது செயல்களும் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் பபுள்கம் மெல்லும் பம்மல் K சம்பந்தம் போல, டப்பிங் வசனத்திற்கும், உதட்டசைவுக்கும் துளியும் பொருத்தமே இல்லை. அது பெரிய அளவில் சோதிக்கிறது.
படம் நெடுக வரும் மர்மம் கடைசிவரை தாக்குப் பிடிக்க பெரிய காரணம் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ். ஒவ்வொரு திருப்பத்தையும் மெல்ல மெல்ல அவிழ்வது சுவாரஸ்யப்பட அவரும் முக்கிய காரணம். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு படம் முழுக்க ஒரு திகில் உணர்வைக் கொடுக்கிறது. அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் மிக இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பின்னணி இசையின் மூலம் பல காட்சிகளின் டென்ஷனை எக்கச்செக்கமாக கூட்டியிருக்கிறார் அஜனீஷ் லோக்நாத்.
படத்தின் குறைகள், சில இடங்கள் இன்னும் அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்திருக்கலாம். படத்தின் முக்கியமான இரு கதாப்பாத்திரங்களை போலீஸ் சுற்றி வளைக்கும் காட்சி இன்னும் கூட வலுவாக இருந்திருக்கலாம். மேலும் படத்தில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய திட்டமிடுகிறது ஒரு குழு. அக்குடும்பத்தை மொத்தமாக தீர்த்துக்கட்ட காத்திருப்பவர்கள், அக்குடும்ப நபர் ஒருவர் கிடைத்தும் கொலை செய்யாமல் திரும்புகிறார்கள். அது எதனால் என்பது பற்றிய காரணாம் எதுவும் இல்லை. சில கதாப்பாத்திரங்கள் இந்தக் கதைக்கு ஏன் தேவை, அதிலும் அம்மாதிரியான கதாப்பாத்திரங்களில் ஏன் மம்தா மோகன் தாஸும், பாரதிராஜாவும் என்ற கேள்வியும் வருகிறது. படம் மிக மிக மிக வன்முறையான, மனதை தொந்தரவு செய்யக் கூடிய விஷயங்களை உள்ளடக்கியது. எனவே அதை மனதில் வைத்துக் கொண்டு படம் பார்க்கவும்.
விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, பல திருப்பங்களை உள்ளடக்கிய கதை என்ற சுவாரஸ்யங்கள் இருந்தாலும், படம் சொல்லவரும் கருத்து என்ன என்பதும், அது சொல்வது சரிதானா என்பது பற்றிய கேள்வியும் நமக்கு எழுகிறது. போலீஸ் துணையுடன் நடக்கும் சில விஷயங்களையும், உன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நடந்தால் என்று படத்தில் பேசியிருப்பதையும், இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். அதே போல், காட்சிகளாக மட்டுமல்லாமல், வசனங்களாகவே சில இடங்கள் ரொம்ப மோசமாக எழுதப்பட்டிருக்கிறது. சிங்கம்புலிக்கு எழுதப்பட்ட வசனங்கள் அதன் உச்சம். சினிமா என்னும் மீடியத்தில் கைத்தட்டல் வாங்குவதற்காக இவ்வளவு கீழிறங்கி அருவருப்பான விஷயங்களை செய்ய வேண்டியதில்லை.
சிறுமிகள் தொடர்பான காட்சிகளை இவ்வளவு மோசமாக சித்தரிப்பது மிகவும் வேதனையானது. இன்னொன்று இந்த சினிமாவை ரிவெஞ்ச் பாணியிலான சினிமா எனவும் கடந்து போக முடியவில்லை. காரணம், பிளாஸ்டிக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களும், அந்தக் கதாபாத்திரங்கள் செய்யும் சில விஷயங்களும்.
கொஞ்சமேனும் அறம் சார்ந்து இந்த கதையை இயக்கியிருந்தால், இந்த த்ரில்லர் சினிமா இன்னும் அழுத்தமானதாக உருவாகியிருக்கும்.