கோழை டூ வீரன்... வீரன் டூ மாவீரன்..! சிவகார்த்திகேயனுக்கு இந்த மாவீரன் 'வீரமே ஜெயமா..?
மாவீரன்(3.5 / 5)
எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்து வாழும் ஒரு கோழை மக்களின் பிரச்னைகளைத் தட்டிக் கேட்டால் என்ன ஆகும் என்பதே மாவீரன் என்னும் ஃபேன்டஸி படத்தின் ஒன்லைன்.
கார்ட்டுனீஸ்ட் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும் சத்யாவுக்கு சப் எடிட்டர் நிலா மூலமாக அந்த வேலையே கிடைக்கிறது. அதே சமயம், சத்யா வாழும் குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு எல்லாமே பிரச்னையாய் இருக்க, அதையே கன்டென்ட்டாக மாற்றி கார்ட்டூன் ஆக்குகிறார் சத்யா. புதிய குடியிருப்பின் பிரச்னைகள் அதிகமாக, பிரச்னையே வேண்டாம் என எல்லாவற்றுக்கும் ஒதுங்கிப் போகும் கோழை சத்யாவுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்ன, கோழை எப்படி மாவீரன் ஆனான் என்பதே மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் மாவீரன்.
சத்யாவாக சிவகார்த்திகேயன். தன் உடல்மொழியில் இருந்து எல்லாவற்றையும் இந்தப் படத்துக்காக மாற்றியிருக்கிறார். சத்யா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக பொருந்திப்போகிறார் சிவா. தன் வித்தையை மொத்தமாய் காட்டிவிட்டு, மீண்டும் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு பவ்யமாக முட்டி போட்டும் அமரும் காட்சியாகட்டும்; " நீ இங்க இருப்பியாடா" என கர்ஜிக்கும் காட்சியாகட்டும் சிவா மாவீரனாக உயர்ந்து நிற்கிறார். நிலாவாக அதிதி ஷங்கர். சப் எடிட்டர் கதாபாத்திரம் என்றாலும் பெரிய வேலையில்லை. ஜாலியாய் வந்துவிட்டு செல்கிறார். சத்யாவின் அம்மாவாக சரிதா, தங்கையாக மோனிஷா, அதே குடியிருப்பில் வாழும் ஆட்டோ டிரைவராக திலீபன் என ஒவ்வொருவரும் அவர்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பலம் யோகிபாபுவின் காமெடி. பேட்ச் வொர்க் செய்யும் நபராக வரும் குமார் கதாபாத்திரத்தில் பல படங்களுக்குப் பிறகு நிஜமாகவே சிரிக்க வைத்திருக்கிறார். வழக்கமான உருவகேலி ஜோக்குகளாக இல்லாமல், ஒவ்வொரு வசனத்திலும் காமெடிகளை அள்ளிவீசியிருக்கிறார் யோகிபாபு. குரலாக வரும் விஜய் சேதுபதி பலம். அமைச்சர் ஜெயக்கொடியாக மிஷ்கின். அவரின் உற்றதுணையாக சுனில். இறுதிக்காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் மிஷ்கின். இருவரின் கதாபாத்திரதையும் இன்னுமே சிறப்பாக எழுதியிருக்கலாம் என்பதே சிறு குறை.
தன் முதல் படமான மண்டேலாவைப் போலவே இதிலும் சமூகப் பிரச்னைகளை ஃபேண்டஸி ஜேனருக்குள் நுழைத்து சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார். சென்னையில் பூர்வகுடிகளுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு என்னும் மாயாஜால வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் நிஜ சோதனைகளை காமெடிகளின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர். அடுத்து நடப்பதை சொல்லும் குரல் என்னும் ஃபேன்டஸி மூலம் சமூக பிரச்னையை பேசினாலும், நமக்கான பிரச்னைகளுக்கான தீர்வு நம் கேள்விகள் தான் என்பதையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். ஆரம்பித்த இடம் நோக்கி சில காட்சிகளை முடித்ததும் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. மடோன் அஷ்வின் ஒரு சென்சிபிளான கிரியேட்டர் என்பதையும் சில காட்சிகளைத் தவிர்த்ததன் மூலம் உணர முடிகிறது. பரத் ஷங்கர் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வீட்டுக்குள் நுழையும் போதும் வரும் பிஜிஎம்மும்,. மாஸ் காட்சிகளின் போது பிஜிஎம்மும் அட்டகாசம். யானிக் பென் சண்டைக் காட்சிகளும், விது அய்யனாவின் ஒளிப்பதிவும் பெரும்பலம்.
க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க எழுதப்பட்டிருக்கும் சில காட்சிகளில் போதிய தெளிவில்லை. ஃபேண்டஸி என்றாலும் அப்படியான காட்சிகளைத் தவித்திருக்கலாம். சிஜியிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். ' மக்கள் மாளிகை ' கட்டிடம் போலவே ஸ்திரத்தன்மை இல்லாமல் சிஜி கையாளப்பட்டிருக்கிறது.
திரையரங்குகளுக்கு ரசிகர்களை படையெடுக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறான் இந்த மாவீரன்.