Lover Movie Review | இக்கால இளசுகளின் காதலை பிரதிபலிக்கிறதா லவ்வர்..!
Lover Movie Review(3 / 5)
ஆறு வருடம் காதலர்களாக பயணிக்கும் ஜோடிக்கு, இடையே வரும் ரிலேஷன்ஷிப் சிக்கல்களே கதை.
அருண் (மணிகண்டன்) - திவ்யா (ஸ்ரீ கௌரி ப்ரியா) இருவருக்கும் கல்லூரியில் பூக்கும் காதல், ஆறு வருடங்களாக தொடர்கிறது. துவக்கத்தில் இனிமையாக காதலில் இருந்த இருவருக்குமிடையில், இப்போது பல பிரச்சனைகள், பல சண்டைகள். அருண், தான் வளர்ந்த சூழல், தனக்குள் இருக்கும் இன் செக்யூரிட்டீஸ் காரணமாக, திவ்யாவை கட்டுக்குள் வைக்க பார்க்கிறார். திவ்யா என்ன செய்தாலும், தன்னுடைய அனுமதியோடு செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறார். தனக்குப் பிடிக்காததை செய்தால், கோபத்தில் கொப்பளிக்கிறார். அருணின் இந்த சுபாவங்களை கண்டு, மிகவும் பயத்துடன், ரிலேஷன்ஷிப்பை தொடர்கிறார். அவருடன் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற குழப்பத்தில் விழுகிறார். ஒரு முக்கியமான சூழலில் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல், அவர்களின் ரிலேஷன்ஷிப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் பின் என்ன ஆகிறது, இருவரும் இணைந்தார்களா? இல்லையா? இருவரும் சந்திக்கும் துயர்கள் என்ன என்பதை எல்லாம் சொல்கிறது படம்.
பிரபுராம் வியாஸ் இதற்கு முன் இயக்கிய Livin' வெப் சீரிஸ் தமிழில் வெளியான சிறப்பான சீரிஸில் ஒன்று. அதைப் போலவே மீண்டும் ரிலேஷன்ஷிப் சிக்கல்களைப் பேசும் கதைக்களத்தை லவ்வரில் எடுத்திருக்கிறார். ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பதை கூடுமானவரை தெளிவாக பேச முயன்றிருக்கிறார். முதல் பாதியில் அருண் - திவ்யா இருவரின் உலகம் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டு, இரண்டாம் பாதி முழுக்க, அருண் - திவ்யா இருவரின் உறவில் இருக்கும் சிக்கல்கள் விரிவாக சொல்லப்படுவது சிறப்பு. யார் செய்வது தவறு? அவர்களின் குழப்பங்கள், இதனால் உணர்வுரீதியாக இருவரும் உண்டாக்கிக் கொள்ளும் அவஸ்தைகள் என அனைத்தும் வருகிறது. இந்த இருவருக்குள்ளும் ஒரு நல்ல தருணம் வரும் போது, எப்போது இது சண்டையாக மாறி நிலமை இன்னும் மோசமாகுமோ என்ற நம் பதைபதைப்பை, அழகாக காட்சியிலும் கடத்தியிருக்கிறார்.
இவர்களின் ரிலேஷன்ஷிப் மட்டுமில்லாமல், இன்னும் இரு ஜோடிகளின் கதையும் வருகிறது. ஒன்று அருணின் அம்மா - அப்பா இடையிலான திருமண உறவு. அது முற்றிலும் சிதைந்து போய் இருக்கிறது. இன்னொன்று மதன் தன் கடந்த கால ரிலேஷன்ஷிப்பில் செய்த தவறையும், அதனால் புதிதாக ஒரு காதலுக்குள் நுழைய பயமாக உள்ளது என்று சொல்லும் விஷயம். இந்த இரு கதைகளும் படத்திற்கு புதிய ஃப்ளேவர் சேர்ப்பதாக இருந்தது.
அத்தனை நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்கள். லீட் ரோலில் நடித்திருக்கும் மணிகண்டன் terrific formல் இருக்கிறார். அவர் உடைந்து பேசுவது, அழுவது, கோபத்தில் சண்டையிடுவது என எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற Ticking Bomb கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஸ்ரீ கௌரி ப்ரியாவின் கதாப்பாத்திரமும் சரி, அதை அவர் நடித்திருக்கும் விதமும் சரி அட்டகாசம். காதலனை கையாள முடியாமல் திணறுவது, ஏன் இந்த உறவை தொடர முடியாது என விளக்க முற்படுவது. எதிர்காலம் பற்றி குழம்புவது எனப் பல உணர்வுகளை தெளிவாக கடத்துகிறார். இவர்களுடன் கண்ணா ரவி, கீதா கைலாசம், ஹரீஷ் குமார் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஷ்ரியாஸ் கிருஷ்ணா தன் ஒளிப்பதிவு மூலம் படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்க்கிறது. மேலும் அவரின் இசையில் எல்லா பாடல்களும் கேட்க இதம். மோகன் ராஜனின் வரிகளுக்கு தனி பாராட்டுகள். வெலகாத, தேன் சுடரே ஆகிய பாடல்கள் மிகச் சிறப்பு.
இது போன்ற சினிமாக்களில் வழக்கமாக, பெண்கள் மீது பழி போட்டு, அவர்களைக் குற்றவுணர்வுக்கு உட்படுத்தும் காட்சிகள் இருக்கும். அதிலிருந்து விலகி, பெண்களுக்கு ஒரு மோசமான ரிலேஷன்ஷிப், எப்படியான traumaவைக் கொடுக்கும் எனப் பேசியிருக்கிறது படம். ரிலேஷன்ஷிப்பில் வரும் சிக்கல்களையும், நுணுக்கமான உணர்வுகளையும் முடிந்த வரை முதிர்ச்சியுடனும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இது வழக்கமான காதல் கதையாக இல்லாமல், ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கதை என்பதால் எல்லோருக்கும் கனெக்ட் ஆகுமா என்பது சந்தேகம் தான். மேலும் ஒரு ரிலேஷன்ஷிப் எப்படி சிதைகிறது என்பதை சொல்ல நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே மீண்டும் மீண்டும் இருவரின் சண்டைகளைப் பார்ப்பது, ஒரே மாதிரி காட்சியை திரும்ப திரும்ப காட்டுவது போன்ற அலுப்பை தரும். இது போன்ற குறைகளை தள்ளிவைத்துவிட்டால், ஒரு சிறப்பான பொழுதுபோக்கைக் கொடுக்கும் படம்.
இந்தப் படம் James Baldwin எழுதிய Love does not begin and end the way we seem to think it does. Love is a battle. Love is a war. Love is growing up என்ற வாசகத்துடன் முடிகிறது. இதை உணர்வுபூர்வமான ஒரு சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.