KUSHI review | ”உங்களுடைய நம்பிக்கைகள் பெரிதா? நீங்கள் நேசிப்பவர் பெரிதா?” குஷி யின் பதில் என்ன..?
Kushi(2.5 / 5)
கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் சின்ன சண்டை, அதனால் வரும் பிரச்சனைகள் எங்கு போய் முடிகிறது என்பதே `குஷி’
விப்ளவ் (விஜய் தேவரகொண்டா) புதிதாக BSNL அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறார். முதல் போஸ்டிங்கே காஷ்மீரில். அங்கு அவர் பேகமை (சமந்தா) பார்த்ததும் காதல் வருகிறது. சந்தர்ப்ப சூழலால் இருவரும் மூன்று நாட்கள் ஒன்றாக தங்க வேண்டியதாகிறது. அந்த மூன்று நாட்களில் விப்ளவின் நடவடிக்கைகள் பார்த்தது அவரும் காதலில் விழுகிறார். பிறகு தான் டிரெய்லரில் வந்த ட்விஸ்ட் வருகிறது. அவர் இஸ்லாமிய பேகம் அல்ல, பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஆராத்யா என. விப்ளவின் அப்பா ஒரு நாத்திகர், ஆராத்யாவின் அப்பா பிரபலமான ஆன்மிக பேச்சாளர். இரு வீட்டினரும் முறுக்கிக் கொண்டிருக்க, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள் விப்ளவ் - ஆராத்யா. ஒரு வருடத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சனை வருகிறது, அது மெல்ல மெல்ல வளர்ந்து பூதாகரமாக இருவரும் பிரியுமளவுக்கு செல்கிறது. என்ன பிரச்சனை? இருவரும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே `குஷி’ படத்தின் மீதிக் கதை.
சிவா நிர்வானா (டக் ஜெகதீஷை தவிர்த்து) தனது Relationship Drama Trilogyஐ எடுத்து முடித்திருக்கிறார். மூன்று படங்களிலும் காதலும் திருமணமும் பற்றி பேசியிருக்கிறார். `நின்னுக் கோரி’ பட ஹீரோ தன் காதலியுடன் திரும்ப சேர முயற்சிப்பார், அதுவும் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான பின்பு. `மஜிலி’ பட ஹீரோ தனது முன்னாள் காதலியின் நினைவுகளிலேயே இருப்பார், அதுவும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான பின்பு. `குஷி’ படத்தில் காதல் பற்றியும் திருமணத்திற்கு பிறகு இணைந்திருப்பது பற்றியும் பேசுகிறார் சிவா.
இயக்குநர் சிவா நிர்வானா, `குஷி’ மூலம் கணவன் மனைவிக்கு இடையே வரும் சண்டைகளைக் காட்டுகிறார், misunderstandingsஐ காட்டுகிறார், ஆணின் ஈகோவைக் காட்டுகிறார். அதனுடன் சேர்த்து ஒரு கேள்வியையும் முன் வைக்கிறார், ”உங்களுடைய நம்பிக்கைகள் பெரிதா? நீங்கள் நேசிப்பவர் பெரிதா?”. இந்தக் கேள்வியை சுற்றிதான் படத்தின் கதை நகர்கிறது. ஆராத்யாவின் தந்தைக்கு, ஜாதகப்படி விப்ளவ் - ஆராத்யா மணவாழ்க்கை நன்றாக இருக்காது என நம்புகிறார். எனவே அவர்களை ஏற்க மறுக்கிறார். விப்ளவின் தந்தை, கடவுள் இல்லை என்பதை தீவிரமாக நம்புகிறார் எனவே கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தை ஏற்க மறுக்கிறார். ஆராத்யா ஒரு கட்டத்தில் ஜாதகத்தின் காரணமாக தான் தனக்கு குழந்தை பிறக்கவில்லை என நம்பத் துவங்குகிறார். கடைசியாக விப்ளவ், தன் மனைவியுடன் விவாதிக்கிறார், மன ரீதியாக காயப்படுத்துகிறார், ஆனால் அவை எல்லாம் சண்டை என உணராமல், தங்கள் திருமண உறவு சிறப்பாக இருக்கிறது என நம்புகிறார். இந்த மாதிரி நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போது என்ன நடக்கிறது எனக் கதை நகர்த்தியிருக்கிறார் சிவா நிர்வானா.
நடிகர்களாக விஜய் தேவரகொண்டா, சமந்தா சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வரும் ரோஹினி, முரளி ஷர்மா உட்பட பலரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முரளியின் ஒளிப்பதிவு படத்திற்கு கலர்ஃபுல் டோனை கொடுத்திருக்கிறது. ஹேஷம் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பலம், குறிப்பாக ஆராத்யா பாடல் மிகச் சிறப்பு. பின்னணி இசை மூலம் பல எமோஷனல் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறார். எழுத்தாக பல குறைகள் இருந்தாலும், படத்தில் வரும் அர்ஜூன் ரெட்டி கனெக்ஷன் ரசிக்கும்படி இருந்தது.
படத்தின் குறைகள் என எடுத்துக் கொண்டால், கதையில் Focus and Clarity சுத்தமாக இல்லை. இந்தப் படத்தின் மையக் கதை ஆரம்பிப்பதே இடைவேளைக்குப் பிறகு தான். அதற்கு முன்புவரை, காஷ்மீர், சுவாரஸ்யமற்ற காட்சிகள், தேவையற்ற பைக் சேசிங், வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் பாடல்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்றால் இப்படித்தான் என முத்திரை குத்துவது போன்ற காட்சிகளே வருகிறது. ஆராத்யா - விப்ளவ் இருவருக்குமிடையே காதல் எப்படி வந்தது என சொல்லப்படும் காரணம் அத்தனை அழுத்தமாக இல்லை. இவர்கள் காதல் கதையைவிட இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களாக வரும் ரோகினி, ஜெயராம் காதல் கதை இயல்பாகவும், அழகாகவும் இருக்கிறது.
மேலும் படத்தில் தேவை இல்லாத காட்சிகளும் பல இருக்கிறது. படத்தின் முதல் பாதி மொத்தமும் அப்படியானதுதான். அது தவிர, குழந்தை பெற்றுக் கொள்வதில் விப்ளவுக்கு பிரச்சனை உள்ளதா என்ற சோதனைக்காக க்ளினிக் செல்வார். அந்தக் காட்சி முடியும் போது ஆராத்யா கேட்பார், “sperm எடுக்கும் போது நீ யார நினைச்சிக்கிட்ட?”. இந்தக் காட்சிகள் எல்லாம் தேவையா? இதற்கு பதில் ஆராத்யா - விப்ளவ் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு முக்கியம் என்பதையோ, உண்மையில் இருவருக்கும் என்ன தான் பிரச்சனை என்பதை தெளிவாக சொல்வதே இருந்திருக்கலாம். ஆனால் அவை எதுவும் இல்லாமல் மிகத் தட்டையான வசனம் ஒன்றை சொல்லி இந்தப் பிரச்சனையை முடிப்பார்கள்.
`குஷி’ உண்மையில் எடுத்துக் கொண்டது மிக சிக்கலான ஒன்று. ஆனால் அதை முழுதாக பேசாமல், எப்படி ஆரம்பித்தத்தோ அங்கேயே படம் முடிந்துவிடுகிறது. கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள், அவற்றிற்கு பின்னிருக்கும் உணர்வுகளையோ பற்றி பேசாமல், என்னதான் ஆனாலும் கணவன் - மனைவின்னா சேர்ந்துதான் வாழணும் எனச் சொல்லி முடிக்கிறார்கள். மொத்தத்தில் இது சாதாரண பொழுது போக்குப் படம் தான், ஆனால் படம் என்ன பேச எடுத்துக் கொண்டதோ, அதில் ஒரு தெளிவும் இல்லாமல் நிறைவடைகிறது.