கொட்டுக்காளி
கொட்டுக்காளிபுதிய தலைமுறை

‘கொட்டுக்காளி’ விமர்சனம் | கண்டிப்பா பாருங்க... இனியாவது திருந்துங்க!

ஒரு குடும்பத்தின் பயணத்தினூடாக, குடும்பம், சமூகம், ஆணாதிக்கம், மூட நம்பிக்கை என பல விஷயங்கள் வெளிப்படுவதே `கொட்டுக்காளி’.
Published on
’கொட்டுக்காளி’ திரைவிமர்சனம்(4 / 5)

மீனாவுக்கு (ஆனா பென்) செய்வினை வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி, அதை சரி செய்ய அவரின் மாமன் பாண்டியும் (சூரி) குடும்பத்தினரும் சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயணத்தில் உரையாடல்கள், கோபங்கள், சண்டைகள், மூட நம்பிக்கைகள், ஆணாதிக்கம், குடும்ப அமைப்பு, நாட்டார் தெய்வங்கள், பாசத்தின் பெயரில் பெண்ணை சிறைபடுத்தும் நடவடிக்கை எனப் பலதும் நடக்கின்றன.

உண்மையில் இப்பயணம் எதற்காக? என்பதை சொல்கிறது படம்.

`கூழாங்கல்’ படத்திற்குப் பின்பு வினோத்ராஜ் இயக்கத்தில் வரும் படம் என்பதும், சர்வதேச திரைவிழாக்களில் மிகவும் வரவேற்க்கப்பட்ட படம் என்பதும் `கொட்டுக்காளி’ மீது தனிக்கவனம் கிடைக்க வழிவகுத்தது. இவையாவும் படத்தின் மீது நமக்கும் எதிர்பார்ப்பு எழ காரணமாக அமைந்தது. கூழாங்கல் போலவே இப்படத்திலும் ஒரு பயணம்தான் படத்தின் கதை.

இந்தப் பயணத்தின் மூலம் பல உரையாடல்கள் வருகின்றன. அவற்றின் மூலம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கிறார் வினோத்ராஜ். பெண்கள் மீது செலுத்தப்படும் அடக்கு முறைகள், சாதியம், சமமற்ற தன்மை, குடும்ப அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஒரு ஆணின் பிடியில் சிக்கித் திணறும் பெண்ணின் எதிர்காலம் எனப் பல விஷயங்களை பார்வையாளர் முன் வைக்கிறார்.

படத்தின் ஆரம்பமே ஒரு புதிர் போல எதற்காக இந்தப் பயணம் என்னும் கேள்வியுடன் துவங்குகிறது. கதை நகரும் போது, மெல்ல மெல்ல நாம் அந்தக் குடும்பத்தைப் பற்றியும் அதன் மனிதர்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். என்ன பிரச்னை என்பதை அறிந்து கொள்கிறோம். இவ்வகையான கதை சொல்லல் படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது.

இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், இந்த சமூகம் அவர்களுக்கு கற்பித்திருப்பது என்ன என்பதைப் பற்றியும் நம்மை யோசிக்க வைக்கிறது. சேவலுக்கும் ஆன்னா பென்னுக்குமான உருவகங்களும் அட்டகாசமாக பொருந்திப்போகின்றன.

திரைக்கதையின் வழி 'கொட்டுக்காளி'யில் வரும் சில காட்சிகளை எளிதாக சினிமா மொழிக்கு மாற்றியிருக்கலாம். ஆனால், அப்படி எதையும் செய்யாமல் , கிராமத்து நிகழ்வுகளை யாருக்கும் தெரியாமல் படம் பிடித்து வருபவன் என்ன செய்வானோ, அதைச் செய்திருக்கிறார் வினோத்ராஜ். கூழாங்கல்லும் கிட்டத்தட்ட ஒரு நிகழ்வுதான் கதை என்றாலும், இதில் அந்த கதை மாந்தர்களின் வழி பல கதைகளை நம் காதுகளுக்குள் கொட்டிக்கொண்டே இருக்கிறார் வினோத் ராஜ்.

சர்வதேச திரை விழாக்களில் திரையிடப்படக்கூடிய தகுதியில் இருக்கும் இந்திய சினிமா என்றால் அது கொட்டுக்காளிதான்.

அலைபேசி முதல் ஆட்டோக்கள் வரை எல்லாமே கிராமங்களுக்கும் வந்துவிட்டன. ஆனால், ஒரு பெண் தான் விரும்பியதை இன்னும் சுதந்திரத்துடன் பெற முடிகிறதா என்னும் வினோத்ராஜின் கேள்வி அதிமுக்கியமானது.

நடிப்பில் நம்மை கவர்வது பலர். பாண்டியாக வரும் சூரி, எப்போதும் வெடித்து விடும் திரி பற்றவைக்கப்பட்ட வெடிகுண்டாக உலவுகிறார். குடும்ப கௌரவம் என சொல்லி செய்யும் அட்டூழியங்களும், காட்டுத்தனமாக அடிப்பதும், உதைப்பதும் என அத்தனை அட்டகாசமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க முறைத்த புருவமும், முறுக்கிய உடலுமாக இருப்பவர், கடைசி காட்சியில் குழப்பம் அடைவதையும் தெளிவாக நடிப்பில் காட்டியிருக்கிறார். குறிப்பாக கை நடுங்கியபடி நிற்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

ஒரே ஒரு வசனம்தான், ஆனால் படம் முழுக்க பேசமாலேயே பல உணர்வுகளைக் கடத்தும் பொறுப்பு மீனாவாக நடித்திருக்கும் ஆன்னா பென்னுக்கு. கால்கட்டை உதறி செல்லும் சேவல் தப்பித்ததா? என ஆவலுடன் பார்க்கும் பார்வை, விடுதலை அடைந்த நபராக காற்றில் சுழலும் கூந்தலுடன் செல்லும் இல்யூஷனைப் பார்த்து கலங்குவது, பெரிய கலவரத்துக் பின் உதிர்க்கும் புன்முறுவல், கல் போல் உணர்வற்று இருப்பது என நடிப்பில் பல உயரங்களைத் தொடுகிறார் ஆன்னா.

இதர துணைப்பாத்திரங்களில் புதுகை பூபாலன், முருகன், பாண்டி, முத்துராசு, சார்லஸ், ஜவஹர், சாந்தி, முத்து, அபி மற்றும் சிறுவன் ரிஹான் என அனைவரும் மிகப் பொருத்தம்.

கொட்டுக்காளி
கொட்டுக்காளி | வாழை | ராயன் | Kalki 2898 AD | இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு தாவும் பரபரப்பை குறைத்து, காட்சி கடத்த நினைக்கும் உணர்வுகளுக்கு இடமளித்து படத்தை தொகுத்திருக்கிறார் எடிட்டர் கணேஷ் சிவா. ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வு நமக்கு எழாமல், பாண்டியின் குடும்பத்துடன் அந்த பயணத்தில் நாம் இருப்பது போன்றே உணர வைக்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவும், சுரேன், அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பும்.

படத்தயாரிப்பு நிறுவனப் பெயர் வரும் போது கூட இசை வேண்டாம் என திட்டவட்டமாய் தவிர்த்திருக்கும் இயக்குநரது நம்பிக்கைக்கு சபாஷ். படம் முழுக்க இசை இல்லை என நமக்கு எண்ணமே எழவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
கொட்டுக்காளி
வாழை திரைப்படம் | “மாரியின் மீது பெரும் அன்பு உண்டாகிறது..!” - நெகிழும் திரைப்பிரபலங்கள்!

மொத்தத்தில் மிக கனமான கதையை, இயல்பாக, சினிமா பூச்சுக்கள் ஏதும் இல்லாமல் அழுத்தமாக கொடுத்திருக்கிறார் வினோத்ராஜ்.

கண்டிப்பாக அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய படம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com