Kazhuvethi Moorkkan | அரசியல் சரி... சினிமாவாக ஈர்க்கிறதா கழுவேத்தி மூர்க்கன்..?
Kazhuvethi Moorkkan (2 / 5)
மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி மூர்க்கன்’
ராமநாதபுரம் தெற்குப்பட்டியில் ஆதிக்க சாதியினரும் - தாழ்த்தப்பட்ட சாதியினரும் சண்டை சச்சரவுகளோடு வாழ்கிறார்கள். அதே ஊரில் வசிக்கும் இரு நண்பர்கள், மூர்க்கசாமி (அருள்நிதி), பூமிநாதன் (சந்தோஷ் பிரதாப்). மூர்க்கசாமி ஆதிக்க சாதியை சேர்ந்தவர், பூமிநாதன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களது நட்பு ஊரில் யாருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக மூர்க்கசாமியின் குடும்பத்திற்கு. இந்த சூழலில் தெற்குப்பட்டியில் ஒரு சாதிக் கட்சி மாநாடு நடத்த திட்டமிடுகிறார்கள் உள்ளூர் அரசியல்வாதிகள். அந்த மாநாட்டுக்கான போஸ்டர் ஒட்டுவதில் துவங்கும் பிரச்சனை ஒரு கொலையில் சென்று முடிகிறது. அந்தக் கொலையால் மூர்க்கசாமியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அதன் பின் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் செ கௌதமராஜ் படம் முழுக்க சாதிய பாகுபாடுகள் மனிதத்தன்மையற்ற செயல் என்பதைக் கூற வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். நேரடியாக எந்த சாதியின் பெயரையும் சொல்லவில்லை என்றாலும், அவர் சொல்ல வந்த கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிகார அமைப்பு எப்படி செயல்படுகிறது, சாதியின் பெயரால் மக்கள் பிரிக்கப்படும் அரசியல், இதனால் ஆதாயம் அடைபவர்கள் யார் யார் எனப் பல விஷயங்களை முன்வைக்கிறார் இயக்குநர். வசனங்களாகவும் வீரத்தைப் பற்றி பேசுவது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சாதிய படிநிலை எவ்வளவு பெரிய முட்டாள்தனம் எனப் பேசுவது போன்ற பல இடங்களில் அழுத்தமாக எழுதியிருக்கிறார்.
பர்ஃபாமன்சாக அருள்நிதி தனது டீஃபால்ட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடிப்பதற்கு என இருக்கும் ஒரே காட்சி, பூமிநாதனின் தாயிடம் சென்று பேசுவது. அந்தக் காட்சியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் முழுக்க சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பது சந்தோஷ் பிரதாப் தான். மிக அமைதியாகவே தனது அழுத்தமான நடிப்பால் பல காட்சிகளில் கவனம் பெறுகிறார். முனீஷ்காந்த் காமெடி + சீரியஸ் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் பிரச்னைகள் எனப் பார்த்தால், படம் எழுதப்பட்டிருக்கும் விதம் தான். சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையும், வலுவாக எழுதப்படாத கதையும் படத்தின் பெரும் பிரச்சனைகள். படத்தின் மையமே சாதியை பாகுபாடுகளால் நிகழ்த்தப்படும் அநீதிகள். ஆனால் படத்தின் கடைசி லேயரில் அதை வைத்துவிட்டு, படம் மொத்தமும் ரிவென்ஞ் மோடுக்கு சென்றுவிடுகிறது. படத்தின் ஒரு காட்சி கூட பார்வையாளர்களின் கவனத்தைப் பெறவில்லை. எல்லாமுமே சுலபமாக யூகிக்க முடிந்தது தான் அதற்கான பிரதான காரணம். படத்தின் வணிகத்திற்காக வைக்கப்பட்ட காதல் காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம், மூர்க்கன் - கவிதா இடையே வரும் காதல் காட்சிகள் அத்தனை செயற்கையாக இருந்தது. இத்தனைக்கும் கதைக்கும் அவர்களின் காதலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை எனும் போது, பார்க்கவாவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டாமா? அதே சமயம் பூமிநாதன் சார்ந்த காட்சிகள் எல்லாம் எதார்த்தமாகவும், நம்பும்படியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் முடியும் போது, சாதிக்கு எதிராக இயக்குநர் சொல்ல விரும்பிய கருத்துகளைத் தாண்டி, படத்தின் இறுதியில் நிகழும் ஒரு கொலை எத்தனை கொடூரமாக இருந்தது என்பதே மனதில் பதிகிறது. அந்த இடத்தில் சொல்ல விரும்பிய கருத்தை அழுத்தமாக சொல்லாமல் சரிகிறது படம்.
மொத்தத்தில் நிறைய வன்முறையுடன், அதே சமயம் சாதிய பாகுபாடுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கருத்தையும் முன் வைக்கிறது இந்த `கழுவேத்தி மூர்க்கன்’