Joshua: Imai Pol Kaakha Review | என்ன GVM ஆடியன்ஸ்க்கே ஸ்கெட்ச்சா..!
Joshua: Imai Pol Kaakha(1.5 / 5)
ஒரு பெண்ணைக் காப்பாற்ற போராடும் பாதுகாவலனும், துரத்தும் ஆபத்துமே கதை.
ஜோஷ்வா (வருண்) ஒரு கான்ட்ராக்ட் கில்லர். நிகழ்வொன்றில் குந்தவியை (ராஹீ) சந்திக்கிறார், சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் குந்தவி. முதல் சந்திப்பிலேயே காதல் வர, குந்தவியுடன் சில தினங்கள் பயணிக்கிறார் ஜோஷ்வா. குந்தவி அமெரிக்கா கிளம்பும் போது, தான் யார் என்பதையும், தன் காதலையும் சொல்கிறார் ஜோஷ்வா. ஆனால் பயந்து போன குந்தவி, அமெரிக்க பறந்து போகிறார். தான் ஒரு கொலைகாரன் என்பதால், கிடைக்க இருந்த காதலை இழந்துவிட்டோம் என நினைக்கும் ஜோஷ்வா, அதன் பின் கொலைகள் செய்வதில்லை என முடிவெடுக்கிறார். உயிரைப் பாதுகாக்கும் பாடிகார்டாக மாறுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருக்கும் குந்தவி உயிருக்கு ஆபத்து எனத் தெரிய வர, காதலியை இமை போல் காக்க சபதமெடுக்கிறார். ஜோஷ்வா அவளின் உயிரைக் காப்பாற்றினாரா? அவளைக் கொல்ல நினைப்பது யார்? இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
கௌதம் மேனன் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக, John Wick,Transporter, Equalizer, Extraction போன்றதொரு படத்தை, தனது வழக்கமான ம்யூசிகல் - ரொமாண்டிக் படத்தை வழங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் படத்தின் ஆக்ஷன் மட்டுமே பெருவாரியாக கவர்கிறது. யானிக் பென் சண்டை வடிவமைப்பு பல இடங்களில் சிறப்பு. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் பல வித்யாசமான கோணங்கள், சேசிங் காட்சிகள், சண்டை என அனைத்தும் சிறப்பு. கார்த்திக் இசையில் சில பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. நான் உன் ஜோஷ்வா, டப்பாசு நேரம் போன்ற பாடல்கள் படம் விட்டு வெளிவந்தும் முனுமுனுக்க செய்கிறது.
ஆனால் ஒட்டுமொத்த படமாக பெரிதாய் கவரவில்லை என்பது தான் பிரச்சனை. ஆக்ஷன் படங்களுக்குள்ளே லாஜிக் மிஸ்ஸிங் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு படத்தை பார்க்கும் போது நம்மால் ஈடுபாட்டுடன் பார்க்க முடிகிறதா என்பது மிகவும் முக்கியம். அதை இப்படம் செய்யத் தவறுகிறது. இதற்கு பிரதானமான மூன்று விஷயங்களை காரணமாக சொல்லலாம்.
நடிப்பு பொறுத்தவரை, லீட் ரோலில் வரும் வருண், ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து, நடிக்க வேண்டிய காட்சிகளில் எமோஷன் காட்ட முடியாமல் திணறுகிறார். ராஹீ ஓரளவு நடிக்க முயன்றாலும், வசனங்களை ஒப்பிக்கும் GPAY ஸ்பீக்கர் போல செயற்கையாய் இருப்பதால் அவரது நடிப்பும் எடுபடவில்லை. இவர்கள் தவிர்த்து கிருஷ்ணா, கிட்டி, டிடி என மற்ற நடிகர்களும் நினைவில் வைத்துக் கொள்ளும் நடிப்பை வழங்கவில்லை. மேலும் இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் ஒவ்வொரு உரையாடலும் மிக செயற்கையாகவே இருக்கிறது
அடுத்த சிக்கல் இலக்கற்று நகரும் கதையும், கதாப்பாத்திரங்களும். படத்தின் ஒரு முக்கியமான பாத்திரம் அதுவரை ஒருவரை கொலை செய்ய துரத்தும், திடீரென தன் எதிரியைப் பார்த்து இவர் யார் தெரியுமா? சூர்யான்னா என்னானு தெரியுமா ரேஞ்சுக்கு ஜம்ப் அடிக்கிறது. அதற்கு காரணமாக சொல்லப்படும் முன் கதையிலும் அழுத்தம் இல்லை. மேலும் படம் முழுக்க புதுப்புது கதாப்பாத்திரங்கள் வருகிறது, போகிறது. யாருக்கும் ஒரு அழுத்தமான பணி கதையில் இல்லை. ஜேம்ஸ் பாண்டுக்கு உத்தரவிடும் எம் கதாப்பாத்திரம் போல், இதில் ஜோஷ்வாவுக்கு உத்தரவிடும் ரோலில் டிடி. ஆனால் அவரது பணி தான் என்ன? என்பதில் எந்தத் தெளிவும் இல்லை.
வலிந்து இழுக்கப்படும் காட்சிகள் படத்தின் பிரதான குறை. காட்சியில் கதைக்கு வலுசேர்க்கும் எதையும் சொல்லாமல் வீணாக காட்சியை இழுத்தடிக்கிறார்கள். உதாரணமாக, வேன் ஒன்றில் கூலிப்படையினரும், அவர்களுக்கு வேலை கொடுத்த நபரும் பேசிக் கொள்வது, அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாம் அநியாயத்திற்கு இழுத்தடிப்பு செய்திருக்கிறார்கள். படத்தில் இருக்கும் வன்முறை காட்சிகளுக்காக, இது கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கும் படம் அல்ல.
மொத்தத்தில் இது GVM இயக்கத்தில் வெளியான படங்களிலேயே மிக பலவீனமான படம். அவர் அடுத்த முறை ஒரு நல்ல கம்பேக்கை கொடுப்பார் என நம்புவோம்.