JAPAN | இன்னும் எத்தனை துயரங்களைத்தான் தருவாய் கர்த்தரே..!
ஜப்பான்(1.5 / 5)
கோவையில் ராயல் ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடையில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 200 கோடிக்கும் அதிகம் என்பதால், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. 'ஓட்டை போட்டு திருடுவது' என்றாலே அது ஜப்பான்தான் என்பதால், காவல்துறை அவரைத் தேடும் பணியில் மும்முரமாகிறது. அதே சமயம், ஜப்பானுக்கோ உடல் சார்ந்து ஒரு பெரும் பிரச்னை எழுகிறது. துரோகமும், கோபமும் தலைக்கேறும் ஜப்பான், அடுத்தடுத்து சில சம்பவங்களைச் செய்கிறார். பலே கில்லாடி திருடர், சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் என இரண்டு முகம் கொண்ட ஜப்பான் யார். அவருக்கும் போலீஸுக்கும் என்ன கனெக்சன்; போலீஸ் ஏன் அவரை விட்டுவைத்திருக்கிறது. ஜப்பானுக்காக ஒவ்வொரு முறையும் காவு கொடுக்கப்படும் 'ஆடுகள்'; ஜப்பானின் ஃபிளாஷ்பேக் ஸ்டோரி; ஜப்பானின் காதலி; ஜப்பானின் சினிமா என ' போதும் போதும் நிப்பாட்டு ' என சொல்லும் அளவுக்கு நீண்டுகொண்டேயிருக்கும் கதைக்கு ஒரு வழியாக ஃபுல் ஸ்டாப் வைத்து முடித்துவைத்திருக்கிறார்கள்.
ஒரு கதாபாத்திரமாக காஸ்ட்யூம், பல் செட், ஹேர் ஸ்டைல், கூலர்ஸ் என ஜப்பான் கதாபாத்திரம் ஒரு புதுவித அனுபவம். அந்த கதாபாத்திரத்திற்கு தன்னாலான நியாயத்தைச் செய்திருக்கிறார் கார்த்தி. அவர் அடிக்கும் சில ஒன்லைனர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. எவ்வளவு சீரியஸான சிச்சுவேசனாக இருந்தாலும், அதை ஜாலியாக கடந்துபோவது ஜப்பான் ஸ்டைல் . கௌதம் மேனன் வாய்ஸ் ஓவர்போல் படம் முழுக்க வரும் இந்த வித்தியாச மாடுலேசன்தான் ஓவர் டோஸாகிவிட்டது. கார்த்திக்கு அடுத்தபடியாக படம் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் வாகை சந்திரசேகர், விஜய் மில்டன், சுனில். இதில் வாகை சந்திரசேகருக்கு 'கர்த்தர்' லெவல் ஒன்லைனர்கள். ஜாலியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். மற்ற இருவரில் ஒருவர் நல்ல போலீஸ் , இன்னொருவர் கெட்ட போலீஸ். சுனிலை வைத்து வரும் 'குணால்' பாடல் செம்ம பிளேஸ்மெண்ட்.
சுவாரஸ்யமான ஒன்லைன், வித்தியாசமான கதாபாத்திரம் என ஆரம்பத்தில் நம்மை உள்ளே இழுத்துச்செல்லும் படம், அதன் பிறகு நம்மை ரொம்பவே சோதித்துவிடுகிறது. திக்கற்ற திசையில் நகரும் திரைக்கதை, ஸ்டேஜிங் பிரச்னைகள், ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான தொடர்பு, சுமாரான பின்னணி இசை என நம் கையில் ஒரு ரிமோட் இருந்தால் மாற்றிவிடலாமே என ஏங்க வைத்துவிடுகிறது ஜப்பான். வாகை சந்திரசேகரைப்போல நாமும் கர்த்தரே இப்பாவியை மன்னியும் என சொல்ல வைத்துவிடுகிறார்கள். இந்தப் படத்துக்கு ஏன் எமோஷனலே இல்லாத நாயகி, அதைச் சுற்றி நடக்கும் களேபரங்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ' சினிமாவுல மட்டும்தான் உனக்கு நடிக்க வரல' என டைமிங் வசனம் வேறு.
இரண்டு எக்ஸ்ட்ரீம் கதாபாத்திரங்கள், அவர்களை இணைக்கும் க்ளைமேக்ஸ் என்பதெல்லாம் புதிதில்லை என்றாலும், அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அங்கேயே தேங்கிவிடுகிறது. படத்தின் 30 நிமிடத்துக்குள் சொன்ன ஒரு விஷயம்தான் க்ளைமேக்ஸ், அதுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் என்பதெல்லாம் டூ மச் பாஸ்.
கார்த்திக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் என்கிற வகையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டிருக்கலாம். நமக்கு அப்படிக்கூட எதுவும் இல்லை என்பதுதான் பெருங்குறை.