JAILER REVIEW | மெய்யாலுமே அலப்பறை கிளப்புகிறதா ரஜினியின் ஜெயிலர்
Jailer (2 / 5)
பேரன், குடும்பம் என ஜாலியாக காலம் கழிக்கும் முன்னாள் ஜெயிலர், தன் மகனுக்காக பழி வாங்கும் படலத்தில் இறங்கினால் என்ன நடக்குமோ அதுவே ' ஜெயிலர்'.
அன்பான மனைவி அழகான குடும்பம் என அமைதியாகக் காலம் கடத்தி வருகிறார் முத்துவேல் பாண்டியன். பேரனுடன் யூடியூப் வீடியோக்கள் எடுப்பது, புதினா சட்னி இல்லாவிட்டாலும் அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுவது என பெர்பெக்ட் பென்சன் வாழ்க்கையில் இருக்கும் முத்துவேலுக்கு தன் மகன் ரூபத்தில் ஒரு பெரும் பிரச்னை வருகிறது. சிலைக் கடத்தல் கும்பலை மகன் பிடிக்க, கடத்தல் கும்பல் மகனைப் பிடிக்க, என மாறி மாறி நடக்கும் கடத்தல் வேட்டையில் 'பாட்ஷா' பாய் மோடுக்கு மாறுகிறார் முத்துவேல். முத்துவேல் பாண்டியன் டைகர் கா ஹுக்குமாக மாற, அதிலிருந்து எல்லாமே சரவெடி , அதிரடி , தலைவரு நிரந்தரம் தான். இப்படியானதொரு அக்மார்க் ரஜினி படத்தில் ஆங்காங்கே மழைச்சாரல் போல நெல்சனின் டார்க் காமெடி ஒன்லைனர்களையும், வெங்கட் பிரபு டைப் ட்விஸ்ட்டுகளையும் வைத்தால் ஜெயிலர் ரெடி.
ரஜினி படங்களின் ஒன் மேன் சேவியர் என்றென்றும் ரஜினி தான். ' சார் என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு..' என சொல்லாமலே அந்த வசனத்தை சொல்லும்படியான ஆரம்ப அதிரடி காட்சி முதல், கண்ணாடி வைத்து செய்யும் ஸ்டைல் வரை படம் முழுக்கவே ரஜினியிசம் தான். கிட்டத்தட்ட 'பேட்ட' படத்தில் இருக்கும் அளவுக்கு ரஜினி ரசிகர்களுக்கான டிரேட்மார்க் மாஸ் 'ரஜினி மொமண்ட்ஸ்' படத்தில் உண்டு. அலப்பறை கிளப்புறோம் பின்னணி இசையும், டைகர் கா ஹுக்கும் பாடலும் அந்தக் காட்சிகளின் மேல் வைக்கப்படும் கிரீடம்.
படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஈர்ப்பது விநாயகனின் அசிஸ்டண்டாக வரும் நபர். அக்மார்க் நெல்சன் கம்பெனியின் அடுத்த ஆச்சர்ய பொருள். சிபிஐயிடம் ஐடி கார்டு கேட்பது, இன்னொருத்தன் மேல உட்காந்து பாரு தெரியும் என நக்கல் அடிப்பது என பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நெல்சனே அவருக்கு குரலுதவி செய்தது போல் இருக்கிறது. வில்லனாக விநாயகன். பீஸ்ட் படத்தைப் போலவே இதிலும் வில்லனை ஆங்காங்கே காமெடியனாக்கிவிட்டார் நெல்சன். அதனால் ஏனோ விநாயகன் பெர்பாமன்ஸ் சிறப்பாக இருந்தாலும், பெரிதாக ஈர்க்கவில்லை. சிறப்பத் தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி செராஃப் காட்சிகளில் சிவராஜ்குமாருக்கு மட்டும் மாஸ் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பாரதியார் புகழ் யோகி பாபுவின் ஒன்லைனர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. இவர்கள் போக மாரிமுத்து, கிஷோர், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா, வைபவ் பிரதர் சுனில் ரெட்டி, கிங்ஸ்லி, விடிவி கணேஷ், ரித்து என ஒரு டஜன் கதாபாத்திரங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ' காவாலா' பாடலுக்காக மட்டும் தமன்னா போர்ஷனை பொறுத்து அருளலாம். மற்றபடி அந்த ஒட்டுமொத்த போர்ஷனும் தேவையில்லாத ஆணி தான். தமன்னா போர்ஷனே தேவையில்லாத ஆணி என்னும் போது, ரஜினிக்காக எழுதப்பட்டிருக்கும் அந்த ' young age ' பிளாஷ் பேக் பற்றியெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ரஜினி படமென்றாலே, ' எங்க அண்ணனுக்கு நாந்தாண்டா செய்வேன்' மோடுக்கு சென்றுவிடுகிறார் அனிருத். பின்னணி இசை மாஸ் காட்சிகளை மேலும் ரசிக்க வைக்கிறது. விஜய் கார்த்தி கண்ணனின் கேமராவில் ஜெயிலர் மற்றுமொரு விசுவல் ட்ரீட்டாக மாறிவிடுகிறது. விநாயகனை சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ரஜினிக்கான மாஸை அழகாக ஏற்றுகிறது விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா. காவாலா பாடல் செட், காஸ்டியூம்ஸ், ஜானி மாஸ்டர், தமன்னா என அந்த ஐந்து நிமிடமும் கலர்புல் திருவிழா.
நெல்சனின் எழுத்தின் பலமே சிக்கலான இடங்களில் கூட காமெடியை அசால்ட்டாக சொருகுவதுதான். கோயிலுக்குள் இருக்கும் ஒரு பொருளைக் கடத்த, ' தெய்வமே நீதான் காப்பாத்தணும்' என வேண்டிக்கொண்டிக்கொள்வது ஒரு சின்ன சாம்பிள். ஜெயிலரிலும் அது சில இடங்களில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சில இடங்களில் வொர்க் அவுட் ஆகவில்லை. கமலின் விக்ரம் போலவே இருக்கும் ஒன்லைன் தான் என்றாலும் கமர்ஷியல் ஆக்சன் படமாக தனித்து நிற்கிறது ஜெயிலர். டிபிக்கல் ரஜினி படத்தில் சாம்ர்த்திய சிரிப்புமூட்டும் ஒன்லைனர்கள் என ரகளையாக நகரும் முதல் பாதி , ஒரு கட்டத்துக்குப் பின்னர் சோதிக்கத் தொடங்கிவிடுகிறது. இந்தியா முழுக்க சிலை கடத்தலுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் நெட்வொர்க் இருக்கிறது என்னும் போது, இன்னும் சுவாரஸ்யமாக இரண்டாம் பாதியை எழுதியிருக்கலாமே என்கிற எண்ணம் எழாமல் இல்லை. ரஜினி என்றாலே 'larger than life கதாபாத்திரம் என்றான பின், எதற்கு ரஜினி போகும் இடமெல்லாம் டோரா குள்ளநரிகளின் உதவிகளை நாடுவது போல் நாடிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. யாருமே பார்க்காத கிரீடம், விலை மதிக்க முடியாத கிரீடம் எனில் அது எவ்வளவு அட்டகாசமாக இருக்க வேண்டும். ஆனால், அது ஏனோ பீஸ்ட் பட வில்லன் போல பாவமாய் இருக்கிறது. இதைய எடுக்கவா யூடர்ன் போட்டு டேபிள உடைச்சு...
ஜெயிலரைக் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி வகைமையில் சேர்க்கலாமா என தெரியவில்லை. இந்தியாவின் சென்சார் போர்டைப் பொறுத்தவரையில் பெரிய ஹீரோக்கள் என்றால் தாராளமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடலாம். பீஸ்ட் படத்திற்கு எப்படி UA கொடுத்தார்கள் என்றே தெரியாத சூழலில் அதைவிடவும் வன்முறை கதகளி ஆடும் ஜெயிலருக்கும் UA கொடுத்திருக்கிறார்கள்.
ரஜினியின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில், இது நிச்சயம் நல்லதொரு கம்பேக் தான். அந்த வகையில் ' தலைவரு நிரந்தரம்' . நெல்சனின் முழுநீள காமெடிக்கு இன்னும் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.