இறைவன் விமர்சனம் | இந்த ஆண்டின் மிக மோசமான திரைப்படம்..!
Iraivan(0.5 / 5)
பெண்களைக் கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கில்லருக்கும், அவரைப் பிடிக்க போராடும் போலீஸுக்குமான யுத்தமே இந்த இறைவன்.
முதலில் இது எல்லோருக்குமான படம் அல்ல. சென்சாரில் A சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் explicit ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் அழுகுரல்கள் அதீத ஒலியுடன் ஒலிக்கப்படுகிறது. ஆதலால் டிக்கெட் புக் செய்யும் போது , கவனத்துடன் செய்யவும். சரி, இப்போது விமர்சனம்.
எந்தவித சட்டதிட்டங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்காத ஒரு சர்வாதிகாரி காவல்துறை அதிகாரி ஜெயம் ரவி. அதனாலேயே திருமணம் போன்ற எந்தவித சிக்கல்களுக்குள்ளும் சிக்கிவிடக்கூடாது என நினைத்து தனி மரமாய் நிற்கிறார். அதே சமயம், அவருக்கு நரேன், நரேனின் தங்கை நயன்தாரா, நரேனின் மனைவி விஜயலட்சுமி, மருத்துவர் சார்லி, காவல்துறை அதிகாரி அழகம்பெருமாள் என்று சில நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஊரையே கதிகலங்க வைக்கிறார் ஸ்மைலி கொலைகாரரான ராகுல் போஸ். இளம்பெண்களைக் குறிவைத்து கொல்லும் அவரைப் பிடிக்க முடியாமல் திணறுகிறது ஆசிஷ் வித்யார்த்தி தலைமையிலான காவல்துறை. இந்தக் கொலைகள் ஏன் நடக்கிறது; உண்மையான கொலையாளி யார்; ஜெயம் ரவிக்கும் சீரியல் கொலைகாரருக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் பாசிடிவ் என சொல்லிக் கொள்ள மூன்று விஷயங்கள் உண்டு. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை (பாடல்களிலும் அதே சிரத்தையை காட்டியிருக்கலாம்) இந்தப் படத்தின் த்ரில் மூடுக்கு சரியாக உதவியிருக்கிறது. கலை இயக்குநர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் ஹரி வேதாந்த் இருவரது பணியும் படத்தில் மிகக் கச்சிதமாக இருந்தது.
இதைத் தவிர படத்தில் பாராட்டுவதற்கு ஏதும் இல்லை. இரண்டு வேறு கதைகளாக ஓடும் முதல் பாதி, இரண்டாம் பாதி, பெரும் அயர்ச்சியை உண்டாக்கும் காதல் காட்சிகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, பொறுமையை சோதிக்கும் திரைக்கதை என எதைத் தொட்டாலும், சுக்கு சுக்காய் நொறுங்கி விழுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் எந்த அழுத்தமும் இல்லாமல் நகர்கிறது. அர்ஜுன் எதற்காக பதட்டத்துடனே இருக்கிறார்?, ஆண்ட்ரூஸ் எதற்காக அவரை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்? என்பது வெறும் வசனமாக வருகிறதே தவிர பார்வையாளர்களால் அதை உணர முடியவில்லை. இது போன்ற கதைகளில் ஒரு கதாபாத்திரம் கடத்தப்பட்ட உடன், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நமக்கு ஒரு பதைபதைப்பு வரும். ஆனால், இந்தப் படத்தில் யாருக்கு என்ன ஆனால் என்ன? என்ற மனநிலை தான் வருகிறது.
சைக்கோ கில்லர் ஜானரை வைத்துக் கொண்டு பல படங்கள் பல விஷயங்கள் பேசியிருக்கிறது. அதில் அந்த கொலையாளி கேட்கும் கேள்விகள் பல நுணுக்கமான விஷயங்களையும் வெளிப்படுத்தும். ஆனால் இதில் ”கொசுவுக்கெல்லாம் குடை பிடிக்கிறாரு” ரேஞ்சுக்கு ஒரு கதை சொல்கிறது பிரம்மா கதாபாத்திரம். அதை எல்லாம் என்ன ரகத்தில் எடுத்துக் கொள்ள எனத் தெரியவில்லை. இன்னொரு ஒரு முக்கியமான கதாபாத்திரம் சொல்லும் ஒரு காரணமும், மிகவும் நகைப்புக்குரியதாக இருந்தது.
இந்தப் படம் சரியாக எழுதப்படவில்லை என்பதற்கு இதையும் உதாரணமாக சொல்லலாம். படத்தின் ஒரு காட்சியில், தன் காதலி குடும்பத்தை விட்டு விலகி செல்வார் அர்ஜுன். பின்பு எதிரிகளால் உங்களுக்கு ஆபத்து வரும் அதனால் தான் பிரிந்து சென்றேன் என வேறு ஒரு காட்சியில் சொல்லும் போது, ”இவ்வளோ பிரச்சனை வரும்னா நீ எங்க கூட தானே இருந்துருக்கணும்” என்பார் காதலி. ஒரு கதாசிரியர் கதையில் இந்த மாதிரி முடிச்சுகள், லாஜிக் கேள்விகள் எழும் போது, ஸ்க்ரிப்ட் லெவலிலேயே சீர் செய்து எழுதியிருக்க வேண்டும். அதை பிழையுடன் எடுத்துவிட்டு, சமாளிப்பதற்காக ஏனோ தானோ என காட்சிகளை எடுக்கக்கூடாது.
நடிப்பாகவும் எந்த ஒரு நடிகரும் நம்மை ஈர்க்கவில்லை. ஒன்று ஓவராக நடித்துக் கொட்டி எரிச்சல் ஏற்றுகிறார்கள், இல்லை என்றால் தேமே என வந்து செல்கிறார்கள். நயன்தாரா கதாபாத்திரம், அவர் கால்ஷீட் கொடுக்கும் போது மட்டும் படத்தின் உள்ளே வருமாறு எழுதியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. படம் சொல்ல வரும் கருத்திலும் எந்த தெளிவும் இல்லை. முகத்தைப் பார்த்தே கிரிமினலா இல்லையா என கண்டுபிடிக்கும் பவர் போலீஸுக்கு இருக்கிறது, எனவே அவர்கள் ஒருவரை சந்தேகித்தால், குற்றவாளியாக தான் இருப்பார் என்ற ரேஞ்சில் இருக்கிறது படம். இப்படியெல்லாம் என்ன மாதிரியிலான மனநிலையில் எழுத முடிகிறது. இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் காவல்துறை அத்துமீறல்களை மனதில் வைத்தாவது இதுபோன்ற விஷயங்களில் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டிருக்கலாம் இயக்குநர். சரி, சைக்கோ கதாபாத்திரமாவது சரியாக எழுதப்பட்டிருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. ' அது அவனோட தங்கச்சி சார்' மாதிரியான வசனம் எவ்வளவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே இல்லாம பெண்களை விதவிதமாக கொன்றாலே ஹாரர் என நம்பவைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும், ஏ சான்றிதழ் படத்தில் கதாபாத்திரங்களை கொடூரமாக சித்திரவதை செய்வதற்காக மட்டும் இல்லை... படம் என்ற பெயரில் பார்வையாளர்களை டார்ச்சர் செய்வதற்காகவும் தான்!