INDIAN 2 KAMAL
INDIAN 2 KAMAL LYCA

INDIAN 2 | ஏன் ஷங்கர்... ஏன் கமல்... இதற்கா இத்தனை பில்ட் அப்..?

இந்தியன் இரண்டாம் படத்தின் ஒரே ஆறுதல் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர். என்ன அதைப் பார்க்க நீங்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
Published on
இந்தியன் 2(1.5 / 5)

இந்தியன் படம் பார்த்துவிட்டு, இதை தத்தமது வீட்டில் செய்தால் என்ன நடக்கும் என்பதே இந்தியன் 2 படத்தின் ஒன்லைன்.

இந்தியா இன்னமும் லஞ்சம் , ஊழல் என தீயவற்றின் கூடாரமாகவே இந்த நூற்றாண்டிலும் இருக்கிறது. அந்நியன், இந்தியன் என இரு பெரும் பரிசுத்த ஆத்மாக்கள் தட்டிக் கேட்ட விஷயங்களைப் பார்த்து இன்ஸ்பயர் ஆன நாலு பேர் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக ஒரு யுடியூப் சானல் ஒன்றை நடத்திவருகிறார்கள். சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ரிஷி நால்வரும் அவர்தம் கண்ணுக்கு தென்படும் அநியாயங்களை தட்டிக் கேட்பதுடன், அதையே வீடியோவாக எடுத்து ஊருக்குள் லைக்ஸும் அள்ளுகிறார்கள். இதனால் சிக்கலுக்குள் சிக்கிவிட, " இதுக்கு எல்லாம் ஒருத்தன் இந்தியன் தாத்தா மாதிரி பொறந்து வரணும்டா" என எமோசனலாக பேச, அட நாம ஏன் இந்தியன் தாத்தாவையே தட்டியெழுப்பக்கூடாது என அங்கிருக்கும் ஒரு ஐடியா மணி ஐடியா கொடுக்க, #ComeBackIndian என பதிவுகளைக் கொட்டத் தொடங்குகிறார்கள். ' பொட்டிக்குள்ள போன பாய் இங்க வந்துட்டேன்' கதையாக, இந்த மெசேஜுக்குத்தான் ஷெல்வமே இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் என மீண்டும் இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைக்கிறார் இந்தியன் தாத்தா. புதிய ஊழல்கள், புதிய பிரச்னைகள் , புதிய வர்மாக்கள் என ஸ்மார்ட் ஹை டெக் வர்மா மேனான இந்தியன் தாத்தா என்ன என்ன செய்கிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகம்.

ஒரு படத்தில் மீம் டெம்ப்ளேட் இருக்கலாம். ஆனால், ஒரு மீம் டெம்ப்ளேட்டே படமாக இருந்தால் எப்படியிருக்கும். அதுதான் இந்தியன் 2. இந்தியன் 2 படத்தின் கதையே இந்தியன் படத்திற்கு நேர் எதிரான ஒன்று. இந்தியன் மாதிரியான கதாபாத்திரத்தை மக்கள் வெறுப்பது போல் காட்சிகள் எடுப்பதுதான் நோக்கம் என்றால், இந்தியன் கதாபாத்திரத்தின் மீது நமக்கு பரிதாபம் வர வேண்டும். ஆனால், இதில் அப்படியே நேர் எதிர். முதல் பாகத்தில் இந்தியன் கதாபாத்திரத்தில் செய்யும் கொலைகளுக்குப் பின்னால் அழுத்தமான காரணம் இருக்கும். மனோரமா போர்சன் ஆகட்டும், கஸ்தூரி போர்சன் ஆகட்டும் அவ்வளவு ஏன் சந்துரு கதாபாத்திரம் கொல்லப்படும்கூட இந்தியன் கதாபாத்திரத்தின் மீது நமக்கு கோபம் வராது. அதற்கும் அவர் தன்னை மகனைக் கொல்லும் காட்சி அது. ஒரு சிறந்த ரைட்டிங் என்பது அதுதான். ஆனால், இந்தப் படத்தில் இப்படி குறிப்பிட்டுச் சொல்லும் படி ஒரு காட்சி கூட இல்லை. சித்தார்த் குடும்பத்தை வைத்து ஏற்கெனவே பார்வையாளருக்கு கடத்திவிட்ட ஒரு விஷயத்தை மீண்டும் ஜெகன் குடும்பத்தை வைத்து எடுப்பது; பிறகு அதையே ரிஷி குடும்பத்தை வைத்து எடுப்பது என 3 மணி நேரத்தை நிரப்பி வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் #GoBACKINDIAN என்றெல்லாம் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் சேர்ந்து போட்டுவிடலாமோ என தோன்ற வைத்துவிடுகிறார்கள்.

செமஸ்டரில் பதில் தெரியாத மாணவர் எல்லா பக்கத்திலும் தனக்குத் தெரிந்ததையே மீண்டும் மீண்டும் எழுதி ஃபில் செய்வதைப் போலவே, எல்லாக் காட்சிலயும் வர்மத்தை சேர்த்திருக்கிறார்கள்.இந்தியனில் கமல் வர்மத்தை பயன்படுத்தும்போது, ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இதில் சிரிப்புத்தான் வருகிறது. அதிலும், ஒரு வர்மத்தை செய்துவிட்டு, கோனார் நோட்ஸ் வாசிக்கறேன் கதையாக கமல் பேசிக்கொண்டே இருக்கிறார். வாங்கிய பாப்கார்ன் தீர்ந்துபோய், நாம் மறுபடியும் வெளியே சென்று தாராளமாக பாப்கார்ன் வாங்கி வரலாம். கமல் ' சங்கித ஸ்வரங்கள்' என பேசிக்கொண்டே தான் இருப்பார். ஓட 'வர்மம்', ' பாட' வர்மம்', லேடி 'வர்மம், எச்சி ' வர்மம்' என விதவிதமான வர்மங்களை கையில் எடுத்திருக்கிறார்கள். ஓர் ஆணை பெண் போல நாண வைப்பது என்பது என்ன மாதிரியிலான தண்டனை ஷங்கர் & கமல். அதே போல் இலவசங்கள் குறித்த புரிதலிலும் ஷங்கரின் வன்மமே வெளிப்படுகிறது. கழிவறையில் கிறுக்கிக்கொண்டிருந்தவர்கள் தான் தற்போது ஃபேஸ்புக்கில் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் என போகிற போக்கில் ஒரு வசனம். வசனத்தின் அபத்தத்தைக் கடந்து மக்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டா , X, த்ரெட்ஸ் என பல காலம் முன்னே சென்றுவிட்டார்கள் . இன்னமும் திண்ணைக் கிழவர்கள் போல ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களை கிண்டல் செய்துவிட்டு வெற்றுப் பெருமிதம் அடைந்துகொள்கிறது படக்குழு. தமிழ்நாட்டில் கொன்றால் இந்தியன் , இந்திய அளவில் கொலைகள் புரிந்தால் PAN INDIAN 2 என்கிற அளவுக்கு புரிதல் கொண்ட படக்குழுவுக்கு ஃபேஸ்புக்கில் கிறுக்குபவர்கள் பதில் சொல்லாமல் யார் சொல்வார்கள்.

சுஜாதா காலங்களில் பொலிட்டிகல் கரெக்ட்னெஸை தூர வைத்துவிட்டால் சுவாரஸ்யமான வசனங்களாவது மிஞ்சும். இதில் அதுவும் இல்லை. ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் என மூவர் வசனம் எழுதியிருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு வரிகூடவா உருப்படியாக எழுதியிருக்க முடியாது. ஒப்பேற்றுவதை சினிமாவில் லேஸி ரைட்டிங் என்பார்கள். INDIAN 2 என்பது மொத்தமாகவே லேஸி தான். படத்தில் பணக்காரர்கள் எல்லாருமே 100 பவுன் சங்கிலியை கழுத்தில் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். இந்தியாவில் அப்படி எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தி நடிகர்கள் முதல் எச் ஜே சூர்யா வரை எல்லோரையும் தங்கத்தால் ஜொலிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். கக்கூஸ் உட்பட தங்கம் தான். எல்லாவற்றுக்கும் தங்க முலாம் பூசுவதும், சுவற்றுக்கும் வயிற்றுக்கும் பெயிண்ட் அடிப்பது மட்டுமே பிரமாண்டம் அல்ல ஷங்கர். இவ்வளவு கற்பனை வறட்சியா ஷங்கர்.

இந்தியனில் ரஹ்மான் செய்திருந்த மேஜிக்கை அனிருத்தால் இதில் தொடமுடியவில்லை என்றாலும், 'காலேஜ்' பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்க இனிமையாகவே இருந்தன. அனிருத் கேரியரின் மிக மோசமான பின்னணி இசை என்றால் அது இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் போட்டதுதான். சில இடங்களில் ரஹ்மானின் பழைய பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இடங்கள் மட்டும் அருமை. இது டெக்னாலஜி யுகம். மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடிவேணு போன்றோரை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மனோபாலாவுக்கான வாய்ஸ் உட்பட. ஆனால், படத்தில் மெச்ச இதைத்தவிர எதுவும் இல்லை என்பதுதான் பெரும் சோகம். விதவிதமாய் கொல்லும் வெறியில் இருந்து ஷங்கர் விரைவில் வெளியேற வேண்டும். ' அந்நியன்' மாடல் அருவருப்புக் கொலைகளைக்கூட பொருத்துக்கொள்ளலாம். பேசிய கொன்றால் எப்படி ஷங்கர்.

முதல் பாகத்தில் கமல் வயது முதிர்ந்தவராக நடித்திருந்தார். இந்தப் பாகத்தில் கமலே கிட்டத்தட்ட அந்த வயதில் தான் இருக்கிறார். அப்படியே எடுத்திருக்கலாம். ஆனால், ஆசை யாரை விட்டது. 120 வயதான நபராக நடித்திருக்கிறார். பிராஸ்தெடிக் மேக்கப்பும் சரியாகக் கைகூடவில்லை. அதிலும் அந்த இறுதி சண்டைக் காட்சியும், வீல்ஸ் ரைடும் . எழுதவே கடினமாக இருக்கிறது. விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தைவிட மோசமான ஒரு பிராடக்ட் கமல். கமல் என்கிற பெர்பகசனிஸ்ட் வயதாக வயதாக தளர்ந்துகொண்டே இருக்கிறாரோ என யோசிக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமான ஒரு கதையில் , இன்னும் ஃபேஷன் டிரெஸ் போட்டியில் பங்குபெறும் குழந்தை போல் ஆர்வமாக பல கெட்டப்புகளை போட்டுக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் கமல்..?

படத்தின் ஒரே ஆறுதல் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர். என்ன அதைப் பார்க்க நீங்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

எந்திரனில் ரஜினி சிட்டி ரோபோவை டிஸ்மேண்டில் செய்ததைப் போல, ஷங்கர் தான் உருவாக்கிய ' இந்தியன்' கதாபாத்திரத்தை தானே கொன்றிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com