Good Night | மணிகண்டன் நடிப்பில் வந்திருக்கும் 'குட் நைட்' இந்த ஆண்டின் ' ஃபீல் குட்'
Good Night (3.5 / 5)
குறட்டையால் அவதிப்படும் இளைஞனும், அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுமே `குட் நைட்’
மோகன் (மணிகண்டன்), ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர். தூக்கத்தில் அவர் விடும் குறட்டையால் பலரது கேலிக்கும் உள்ளாகிறார். ஜாலியான குடும்பம், நல்ல வேலை என எல்லாம் இருந்தாலும் இந்தக் குறட்டை பிரச்சனை மட்டும் தீர்ந்தபாடில்லை. இந்த சூழலில் அனு (மீத்தா) அவரது வாழ்க்கைக்குள் எதேர்ச்சையாக வருகிறார். சில சந்திப்புகளில் இருவருக்கும் காதல் வர, அது திருமணத்தில் முடிகிறது. ஆனால் அதன் பின் குறட்டையால் நடக்கும் சிக்கல்கள் பூதாகரமாகி மோகன் வாழ்க்கையை குழைத்து போடுகிறது. எப்படியாவது இந்த பிரச்னையை சரி செய்ய மோகன் எடுக்கும் முயற்சிகள் என்ன? அவை கை கொடுத்தனவா? என்பதே மீதிக்கதை.
இந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்த விதமும், இரண்டு கதாபாத்திரங்களையும் அதன் சூழலையும் விவரித்த விதத்திலேயே நம்மை உள்ளே ஈர்த்துக் கொள்கிறது. மோகன் - அனு இருவரின் உலகத்தையும் நமக்கு சொல்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். மோகன் வீடெங்கும் மனிதர்கள் நிறைந்திருப்பார்கள். அனுவுக்கு தனிமை மட்டுமே வசதி. மோகனின் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், சண்டையும், சத்தமும் நிறைந்திருக்கும். அனுவுக்கு ரயில் ஓடும் சத்தம் கூட ஆகாது. மோகனின் பல எதிர்ப்புகளை மீறி தனது வீட்டில் ஒரு காதல் திருமணத்தை நடத்திவிடுவார். அனு இன்னொரு மனிதரிடம் பேசுவது கூட அரிது. மோகன் வீட்டில் ஒரே ஒரு வேளை பிரியாணி சமையலுக்கு இடையே பெரிய சோகம் கூட மறைந்து போகும். அனு பன்பட்டர் ஜாம் ஆடர் செய்யக் கூட தயங்குவார். இப்படி இந்த இருவரின் உலகமும் வெவ்வேறானது என்பதை முற்றிலுமாக அறிமுகம் செய்து அதை மிக இயல்பாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்த இருவரின் உலகமும் ஒரு சந்தர்பத்தில் இணைகிறது. அதன் பின் என்னென்ன நடக்கிறது என்ற சுவாரஸ்யமான இடத்திற்கு செல்கிறது.
இதன் பிறகு நம்மை ஈர்ப்பது ஒவ்வொரு கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு. அவமானப்படுவது, அழுவது, குடும்பத்தை கலகலப்பாக்குவது, ப்ரப்போஸ் செய்வது என அனைத்திலும் அசத்துகிறார் மணிகண்டன். குறிப்பாக விரக்தியின் உச்சத்தில் மனைவியிடம் கோபமாக கத்தும் காட்சி மிக சிறப்பு. மீத்தா படம் முழுக்க சப்டிலான நடிப்பைக் கொடுத்தாலும் உணர்ச்சிகளைக் கடத்த தவறவில்லை. கணவரை சமாதானப்படுத்த முயல்வதும், வாழ்க்கை பழையபடி மாறாதா என ஏங்குவதுமாக நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர ரேச்சல் ரெபேக்கா, உமா, பாலாஜி சக்திவேல், கௌசல்யா என அனைவரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் நம்மை அதிகமாக கவர்வது ரமேஷ் திலக். எல்லா காட்சிகளிலும் மிக இயல்பாக வருகிறார். மணிகண்டன் சொதப்பும் போது அதை சமாளிப்பது, அழும் போது ஆறுதல் சொல்லித் தேற்றுவது, ஒரு கட்டத்தில் உடைந்து அழுவது என நிறைவாக மனதில் நிற்கிறார்.
இன்னொன்று புதிதாக இணைந்த காதல் தம்பதி, காதல் திருமணத்தில் சில வருடங்கள் கடந்த தம்பதி, திருமணம் முடிந்து முதிர்ந்த பருவத்திலும் காதலோடு இருக்கும் தம்பதி என படத்தில் வரும் மூன்று வெவ்வேறு கட்ட காதல்களைக் காட்டியிருப்பதும் கூடுதல் அழகு.
இதன் பிறகு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர். அவரது பின்னணி இசை படத்தின் உணர்ச்சியை பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்துகிறது. படத்தில் வாழ்வின் சின்ன சின்ன தருணங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறது ஜெயத்தின் ஒளிப்பதிவு. படத்தொகுப்பாளர் பரத் மற்றும் கலை இயக்குநர் ஸ்ரீகாந்த் இருவரின் உழைப்பும் பாராட்ட வேண்டியது.
இவ்வளவு பாசிட்டிவ் இருக்கும் படத்தின் குறைகள் என்ன என்றால், இரண்டாம் பாதியில் கதையின் மையத்திலிருந்து படம் விலகுவது தான். முதல் பாதியில் மோகன், அவனுக்கு இருக்கும் சிக்கல், அதனால் அவனது வாழ்க்கையும், அவனை சார்ந்தவர்களும் என்ன பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது போல துவங்குகிறது. ஆனால் படம் வேறு சில விஷயங்களையும் சொல்ல நினைக்கிறது. அது படைப்பாளியின் விருப்பம் தான் என்றாலும், அது கதையின் மையப்புள்ளியில் இருந்து விலகுவது தான் சிக்கல். திடீரென, கர்ப்பம் பற்றிய டாப்பிக் பேசத் துவங்குகிறது, திடீரென ஒரு பெண்ணுடைய காதலில் வரும் பிரச்சனையைப் பற்றி பேசுகிறது. இவை எல்லாம் எடுக்கப்பட்டிருக்கும் விதமும், அது சொல்ல விரும்பும் விஷயமும் தெளிவாக இருக்கிறதுதான். ஆனால் இதற்கும் படத்தின் மைய பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் துண்டாக இருக்கிறது.
இயக்குநர் விநாயக் காட்சிகளை மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். உதாரணமாக பல நூறு சினிமாக்களில் பார்த்துப் பழகிய ஏர்போர்ட் க்ளைமாக்ஸ் இதிலும் உண்டு. ஆனால் அதை எமோஷனலாகவும் - காமெடியாகவும் காட்சிப்படுத்தி சுவாரஸ்யமாக்குகிறார். அந்த ஸ்மார்ட்னெஸ் இரண்டாம் பாதி முழுவதும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும், ஒட்டு மொத்த படமாக ஒரு ஃபீல் குட் படமாக நிறைவைத் தருகிறது இந்த `குட் நைட்’,