GOAT MOVIE REVIEW | விஜய் VS விஜய்... எப்படியிருக்கிறது GOAT..?
GOAT The greatest of All time(2.5 / 5)
2008ல் SATS ஏஜென்ட் காந்தி (விஜய்) & டீம் தீவிரவாத கும்பலிடமிருந்து ஆயுதங்களை கைபற்றும் மிஷனை மேற்கொள்கிறது. நாட்டுக்கு ஏஜென்ட், வீட்டுக்கு சைலன்ட் என ரெட்டை வேடம் போட்டு மனைவி அனு (சினேகா) மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார் காந்தி. ஒரு சம்பவத்திற்குப் பிறகு குடும்பத்தை விட்டுத் தனியே பல வருடங்கள் பிரிந்து வாழ்பவரைத் தேடி வருகிறது ஒரு அசைன்மென்ட். அந்த அசைன்மென்ட்டின் இடையே தொலைத்த உறவும், மறைந்த பகையும் திரும்ப காந்தியிடம் வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களே மீதிக்கதை.
வெங்கட்பிரபு தனக்கே உரிய சிக்னேச்சர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். சீரியஸ் காட்சிகளுக்கு இடையே வரும் காமெடி, ட்விஸ்ட்கள் போன்றவை நன்று. இந்தப் படத்தில் இன்னும் ஒருபடி மேலே போய் எக்கச்சக்க ரெஃபரன்ஸ்களை அள்ளித் தெளித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதை விஜயின் ஃபேர்வெல் படமாக உருவாக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. விஜயின் பட மேனரிசம், வசனங்கள் ஒருபுறம் என்றால், கார் நம்பர் ப்ளேட்டில் CM 2026 என எழுதுவதில் துவங்கி, இன்னும் பல வித ரெஃபரன்ஸ்கள் படத்தில் உண்டு. அவை கூடுதல் உற்சாகத்தை கொடுக்கிறது. திலீப் சுப்புராயணின் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது. மேலும் படத்தின் கடைசி 30 - 40 நிமிடங்கள் நடக்கும் சம்பவம் மொத்தமும் மிரட்டல் ரகம். நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் என்றால், கடைசி 40 நிமிடங்கள் உங்களுக்கும் இன்னும் அதீதமாக பிடிக்கும். கிட்டத்தட்ட தோனியை மட்டுமே நம்பி அந்த பாகத்தை இயக்கியிருக்கிறார். ஒரு நிமிடம் கூட சிதறாமல் நம் கவனத்தை கோரும் காட்சிகள் அவை. படம் முடிந்து வெளியேறும் போது, பரவாயில்லையே என்ற மனநிலையில் வருவதற்கு காரணமும் அந்த ப்ரீ க்ளைமாக்ஸ் முதல் - ப்ளூபர்ஸ் வரையிலான காட்சிகள்தான். மேலும் மகன் விஜய்க்கு செய்யப்பட்டிருக்கும் டீ - ஏஜிங் தரமாக செய்யப்பட்டிருக்கிறது. அதில் குறை ஏதும் இல்லை. இவை தவிர சில பல சர்ப்ரைஸும் படத்தில் காத்திருக்கின்றன.
படத்தின் டைட்டிலே சொல்லும், இது விஜயை கொண்டாடுவதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதை. அதற்கேற்ப, விஜயை வெவ்வேறு வயதில் திரையில் தோன்ற செய்திருக்கிறார்கள். மகன் விஜய், தந்தை விஜய் என இரு ரோலிலும் சிறப்பான பர்ஃபாமென்ஸ். மனைவியிடம் மாட்டிக் கொண்டு சமாளிப்பது, அதே மனைவியிடம் இருந்து, குற்ற உணர்ச்சியால் தள்ளியிருப்பது என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இளம் விஜயிடம் துள்ளலும் மிஸ்ஸாகவில்லை. விஜய்க்கு அடுத்தபடியாக கவனம் பெறுவது பிரஷாந்த், பிரபுதேவா. நண்பர்களாக ரகளை செய்வது, மிக நெருக்கடியான தருணத்தில் சண்டையிடுவது என அவர்களின் நெருக்கத்தை நாம் உணரும் படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சினேகாவுக்கு முக்கியத்துவம் குறைவு என்றாலும், நிறைவான நடிப்பையே கொடுக்கிறார். ஜெயராம், மீனாக்ஷி சௌத்ரி, மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் எனப் பல நட்சத்திரங்கள் வருகிறார்கள், செல்கிறார்கள்.
படத்தின் குறைகள் என்பது, படத்தின் ரைட்டிங்தான். முதல் பாதி கொஞ்சம் கொஞ்சம் ரசிக்கும் தருணங்களுடன் நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் மிகவும் தொய்வாக நகர்கின்றன. கேவி ஆனந்த் படங்களை நினைவுபடுத்தும் விதமாக இழப்புக்கு பின் வரும் பாடல் சுத்தமாக ஒட்டவில்லை. ஆனாலும், அதில் சர்ப்பரைஸ் என்ட்ரியாக வரும் நபர் அப்ளாஸ் அள்ளுகிறார். கதை ஒரு அடி கூட நகர்வேனா என்கிறது. இரண்டாம் பாதியில் எல்லா காட்சியையும் “ விடு க்ரவுண்டுல பாத்துக்கலாம்” மனநிலையில் எழுதியிருப்பது போலதான் இருக்கிறது. படத்தின் மையக்கதை, மிக வழக்கமான வில்லன் - ஹீரோ இடையிலான பழிக்குப் பழி கதைதான். ஆனால் அதை சொல்வதற்கு SATS, ரஷ்யா, தாய்லாந்து என எங்கெங்கோ கதை நகர்வது ஏற்கும்படி இல்லை. மேலும் வெளிநாட்டுக் காட்சிகள் மையக்கதையுடன் அத்தனை இணைந்ததாகவும் இல்லை. படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் ஏஐ மூலம் ஒரு நடிகரை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அதென்னவோ அவ்வளவு நேர்த்தியாக வரவில்லை. பதின்பருவ விஜயும் Deagingம் செட்டாகவில்லை. வில்லன் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்படவில்லை. சுமாராக எழுதப்பட்ட அந்த கதாபாத்திரத்தை மேலும் சுமாராக மாற்றியிருக்கிறார் மோகன். கூல் தோனிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கூலாக இருக்கிறார். " என்ன விஜய் , அப்பா சௌக்கியமா?" மோடிலேயே முழு படத்திலும் வந்து போகிறார். படத்தின் வன்முறைக் காட்சிகளுக்காக இது குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.
ஆடியோவாக வந்தபோதே யுவனின் பாடல்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாயின. விசில்போடு பாடலை இன்னும் டெம்போ ஏற்றிக் கொடுத்திருக்கிறார்கள். தியேட்டர் மெட்டீரியலாக அந்தப் பாடல் மாறியதற்கு இந்த புது டெம்போ கொஞ்சம் உதவியிருக்கிறது. யுவனின் THE BLAST ஆல்பத்திலிருந்து ' பூவே புதிரே' பாடலின் இசையை மட்டும் பயன்படுத்தி வேறொரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். 'மட்ட' பாடல் ரகளையான குத்து .
ஒரு கமர்ஷியல் மாஸ் படம் என்றாலே ஜனரஞ்சகமாக சில விஷயங்கள் இருக்கும் தான். ஆனால் அதில் ஏதாவது ஒன்றைப் புதிதாக கொடுப்பதில் தான் படம் எப்படி சென்று சேரும் என்பது இருக்கிறது. அப்படி இந்த GOAT டீ ஏஜிங் மூலம் வரும் விஜய் கதாப்பாத்திரத்தையும், சில ரெஃபரன்ஸ், கேமியோக்களை மட்டுமே தருகிறது. அந்த வகையில் படம் ஆஹா, ஓகோவும் இல்லை, மிக மோசமும் இல்லை. ஆவரேஜ் என்ற வகையிலேயே தேங்குகிறது. ரைட்டிங்கில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால், பெரிய அளவில் ஈர்த்திருக்கும்.