Vetri
Vetribumper

Bumper | பம்பர் திரை விமர்சனம் | பம்பர் அடிக்கிறதா இந்த லாட்டரி படம்..?

ஒரு சிறிய கதைதான், அதை சொல்ல பல கிலோமீட்டர் பயணிக்கும் கதையும் திரைக்கதையும் பெரிய சோர்வைக் கொடுக்கிறது.
Published on
பம்பர்(1.5 / 5)

பணம் சம்பாதிக்கும் பேராசையில் இருக்கும் ஒரு இளைஞனது வாழ்க்கை, ஒருவரது வருகையால் எப்படி மாறுகிறது என்பதே `பம்பர்’ படத்தின் கதை.

தூத்துக்குடியில் வசிக்கும் புலிப்பாண்டி (வெற்றி) சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்கையை ஓட்டுகிறார். பணம் இல்லாததால் தன்னை யாரும் மதிப்பதில்லை என நம்பும் அவர் எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்கும் வெறியில் இருக்கிறார். பெரிய சம்பவம் ஒன்றை செய்து பெரிதாக செட்டில் ஆகிவிட வேண்டும் எனக் காத்திருப்பவருக்கு, ஒருவரைக் கொலை செய்யும் வேலை தேடி வருகிறது. அதில் ஏற்படும் சிக்கலால், தலைமறைவாக சபரிமலை செல்ல வேண்டியதாகிறது. அங்கு லாட்டசி சீட்டு விற்கும் இஸ்மாயிலை (ஹரீஷ் பெரேடி) சந்திக்கிறார் புலிப்பாண்டி. அவரிடமிருந்து பம்பர் லாட்டரி ஒன்றையும் வாங்குகிறார். அந்த லாட்டரி சீட்டுக்கு பத்து கோடி பரிசுத் தொகையை அறிவிக்கிறது கேரள அரசு. இதன் பின் என்ன ஆகிறது இந்த பத்து கோடியால் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் முதன்மையான நோக்கமாக சில விஷயங்களை சொல்ல முடியும். பேராசை கூடாது, நம்மை சுற்றியுள்ளவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும், பிறர் பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்படக் கூடாது, எவ்வளவு வறுமையில் இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். இவை எல்லாம் தான் பம்பர் படம் சொல்லும் நன்னெறிகள். இந்தக் கருத்துகள் கூடவே சில காட்சிகள் மட்டும் படத்தில் பாராட்டும்படி உள்ளன. ஆனால், படத்தின் பிரச்சனை நல்ல எழுத்தும், நடிப்பும் இல்லாததுதான்.

vetri
vetriBumper

படத்தின் பிரதான கருவே, புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை ஒரு நபரின் வருகையால் எப்படி மாறுகிறது என்பதுதான். ஆனால் அதை நோக்கி பயணிக்காததால், பாதி படத்திற்கும் மேல் ஏதோ லாட்டரிச் சீட்டு விளம்பரம் பார்ப்பது போன்ற உணர்வு தான் எழுகிறது. மேலும் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை மையக்கருவை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது. புலிப்பாண்டிக்கு பணத்தேவை எவ்வளவு இருக்கிறது எனக் காட்டுகிறார்கள், அவரது காதல் வாழ்க்கை எப்படி எனக் காட்டுகிறார்கள், அவனது அம்மா எவ்வளவு சிரமம்படுகிறார் எனக் காட்டுகிறார்கள். ஆனால் சரியான எழுத்தும் நடிப்பும் இல்லாததால் அது பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஹரீஷ் பெரேடி மிகவும் வெள்ளந்தியான, நேர்மையான மனிதராக நடிக்க முயல்கிறார். ஆனால் அதில் செயற்கைத் தனம் மட்டுமே தெரிகிறது. வெற்றி நடிப்பைப் பார்க்கும் போது ஒரு நல்ல பர்ஃபாமன்ஸ் கொடுக்க அவர் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருப்பது புரிகிறது. கதாநாயகனின் அம்மாவாக வரும் ஆதிரை, காவலதிகாரியாக வரும் கவிதா பாரதி, ஹீரோவின் நண்பர்கள் முடிந்த அளவு நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் சில கதாபாத்திரங்கள் இயல்புத் தமிழில் பேசுகிறார்கள், ஆனால் அதனை டப்பிங்கில் தூத்துக்குடி ஸ்லாங்கில் மாற்றியிருப்பதால் சுத்தமாக சிங்க்கே இல்லை. படத்தின் பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என எதுவும் மிகச் சிறப்பு என சொல்லும்படி இல்லை.

ஒரு சிறிய கதைதான், அதை சொல்ல பல கிலோமீட்டர் பயணிக்கும் கதையும் திரைக்கதையும் பெரிய சோர்வைக் கொடுக்கிறது. மேலும் இந்தப் படத்தின் கதை 2014ல் வெளியான `லால் பகதூர் சாஸ்த்ரி’ மலையாளப் படத்தையும் நினைவுபடுத்துகிறது. இன்னும் கவனமாக கதை திரைக்கதை எழுதி, நல்ல நடிப்பும் இருந்திருந்தால் ஒரு நல்ல த்ரில் கலந்த ஃபீல் குட் படமாக மாறியிருக்கும். ஆனால் இது பெரிய மிஸ்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com