Alien: Romulus Review | அட என்ன நல்லா இருக்கு..!
Alien: Romulus(3 / 5)
தப்பிக்க வழி தேடி ஆள் இல்லா விண்கலத்தில் சிக்கிக்கொள்ளும் இளசுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே ALIEN ROMULUS திரைப்படத்தின் ஒன்லைன்.
மனிதர்களின் அரவணைப்பில்லாமல் இல்லாமல் தனித்திருக்கும் ரெயினின் ஒரே பிணைப்பு செயற்கை மனிதரான ஆண்டி தான். தாங்கள் வசிக்கும் சுரங்க கிரகத்தில் வெளியேற துடிக்கும் ரெயினுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த கிரகத்திலிருந்து Yvaga கிரகத்திற்கு செல்ல மனிதர்களுக்கு cryostasis சேம்பர்கள் தேவைப்படும். சுரங்க கிரகத்தில் இருந்து தப்பித்து Yvaga கிரகம் செல்ல காத்திருக்கும் நட்புக்களுடன் கூட்டணி சேர்கிறாள் ரெயின். ஆள் இல்லா விண்கலத்தில் இருக்கும் கதவுகளைத் திறக்க ஆண்டியின் உதவி தேவைப்படும் என்பதால், ஆண்டியையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். குழுவிலிருக்கும் பெண்கள் தாங்கள் பயணம் செய்த ஸ்பேஸ் ஷிப்பில் தங்கிவிட, ஆண்டியுடன் ஆண்கள் cryostasis சேம்பர்களைத் தேடி அலைகிறார்கள். சந்திரமுகி பங்களாவில் சந்திரமுகியை எழுப்பிவிடுவது தான் 400 ஆண்டுகால டெம்ப்ளேட் ஆயிற்றே. அப்படி போனதில் சிலர் ஏலியனை எழுப்பிவிட அது தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறது. அடுத்து ஸ்பேஸ் ஷிப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு என்ன ஆகிறது என்பதன் மீதிக்கதை.
ஏலியன் படங்கள் அதன் வீரியத்தை இழந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏலியனின் முதல் மூன்று பாகங்கள் உலக அளவில் பேசுபொருளான அளவுக்கு அடுத்தடுத்த பாகங்கள் ஆகவில்லை. அதிலும் Prometheus, Alien: Covenant எல்லாம் நம் பொறுமையை சோதித்த படங்கள். ' ரிட்லி ஸ்காட் ஐயா உங்களுக்கு இரக்கம் இல்லையா' என ரசிகர்களை கதற வைத்த படங்கள். ஏலியன் படங்கள், அதன் ப்ரீக்குவல் என வந்த படங்கள் எல்லாம் ரசிகர்களை ஒருவழி செய்துவிட்ட சூழலில், ஏலியன் தொடருக்கு ஸ்பின் ஆஃபாக இந்தப் பாகத்தை எழுதி இயக்கியிருக்கிறார் Fede Álvarez. முந்தைய பாகங்களில் வாங்கிய அடியினாலோ என்னவோ, இந்தப் பாகம் சிறப்பாகவே வந்திருக்கிறது. அதிலும் ஏலியன் குட்டிகள் அத்தனையை ஒரே இடத்தில் காட்டும் காட்சியெல்லாம் வேற ரகம் தான்.
AIக்கு என சில சிறப்பம்சங்கள் உண்டு. ஒரு விபத்தில் 3 பேரை தியாகம் செய்தால், 12 பேரைக் காப்பாற்ற முடியும் என்றால், AI அந்த ரிஸ்க்கை சுலபமாக எடுத்துவிடும். ஆனால், மனிதர்களால் அப்படி முடியாது. 15 பேரையும் காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள். இது இரண்டு விதமான முடிவுகளைக் கொடுக்கும்.ஒன்று 15 பேரும் காப்பாற்றப்படுவார்கள். அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவார்கள். இதில் எந்தப் பாதையில் ரிஸ்க் குறைவு என்றால் , நிச்சயம் AI தேர்வு செய்த பாதை தான். ஆனால், வாய்ப்பே இல்லை என தெரிந்தும் போராடும் குணம் தானே மனிதனை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் கதைக்கருவும் அதுதான்.
ஆண்டியின் பிரதான நோக்கம் என்பது ரெயினைக் காப்பாற்றுவதுதான். எந்திரன் திரைப்படத்தில் சிப் மாற்று அறுவை சிகிச்சை நடப்பது போல, ஆண்டிக்கு மாட்யூல் மாற்றப்படுகிறது. அதன் பிரதான நோக்கத்தை சிலர் மாற்றிவிடுகிறார்கள். ஆனாலும், ரெயின் அப்படியே தான் இருக்கிறாள். ஏலியன் சாகசங்களை எல்லாவற்றையும் மீறி, இந்தப் படத்தில் ஈர்த்தது ரெயினுக்கு AIயாக வரும் ஆண்டி கதாபாத்திரத்திற்கான இந்த கெமிஸ்ட்ரி தான். ரெயினாக வரும் கைலி ஸ்பெய்னியும், ஆண்டியாக வரும் டேவிட் ஜான்சனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முந்தைய பாகங்களைவிட இதில் ஏலியன் கொஞ்சம் சக்தி வாய்ந்ததாகவே இருக்கிறது. சூசைட் ஸ்குவாட் 2வில் வரும் ஸ்டார்ஃபிஷ் போல் சில சேட்டைகள் செய்தாலும், தன் முழு ரூபம் எடுக்கும் போது அல்லுவிட வைத்துவிடுகிறது. கிராவிட்டி விளையாட்டு, ஆசிட் டெஸ்ட் என சில விஷயங்கள் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு உதவுகின்றன. ஆரம்பக்கட்ட ஏலியன் கொஞ்சம் டெரராக இருந்தாலும் , இறுதிக்கட்டத்தில் வரும் ஏலியன் கல்கி பட கமல்ஹாசனை நினைவுபடுத்திவிடுகிறது.
ஏலியன் பட விரும்பிகள் தாராளமாக இந்த ஏலியன் ரோமுலஸைத் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.