Lal Salaam Review | மத நல்லிணக்கம் ஓக்கே... படமாக ஈர்க்கிறதா லால் சலாம்..?
Lal Salaam Review (2.5 / 5)
இரண்டு ஊர், இருவேறு மதம் அடங்கிய கிரிக்கெட் அணி , அவர்களுக்குள் நிகழும் பிரச்னைகள்... இவற்றின் தொகுப்பே லால் சலாம் திரைப்படத்தின் ஒன்லைன். கிரிக்கெட்டை பேசுபொருளாக வைத்து, அதனூடே இரண்டு ஊர்களுக்கு இடையே நிலவும் மத பிரச்னைகளை பேசுகிறது இந்த 'லால் சலாம்'.
தமிழ்நாட்டின் பல இடங்களைப் போலவே மூரார்பாத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையாய் வாழ்கிறார்கள். மூரார்பாத்தின் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால் , அங்கு மத ரீதியில் சதுரங்கம் ஆட ஒரு அரசியல் கட்சி தீர்மானிக்கின்றது. இந்தியாவில் நிகழ்ந்த ஒரு பெரும் விபத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் இருக்கும் இந்துக்கள் ஒரு அணியாகவும், இஸ்லாமியர்கள் ஒரு அணியாகவும் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அந்தப் போட்டியை கிட்டத்தட்ட இந்தியா- பாகிஸ்தான் போட்டியாகவே அந்த மக்கள் பாவிக்கிறார்கள். இப்படியானதொரு சூழலில், கட்சிகள் எதிர்பார்த்தது போலவே அங்கு மதக்கலவரம் வெடிக்கிறது. பெரும் பழியுடன் விஷ்ணு விஷால் சிறைக்குச் செல்ல நேர்கிறது. வெளியே வந்தும், துயரம் அவரைத் துரத்துகிறது. விஷ்ணு விஷாலுக்கு ரஜினி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதாக விரிகிறது 'லால் சலாம்'.
விஷ்ணு விஷாலுக்கு மீண்டுமொருமுறை கனமான வேடம். காதலில் கசிந்து உருகும்போதும் சரி, குற்ற உணர்ச்சியோடு சுழலும்போதும் சரி அவரின் அனுபவ நடிப்பு அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு காமெடி ஏதும் இல்லாத ஆத்மார்த்தமான ஒரு வேடம். ' மனசு சரியில்லைன்னா தான் கோயிலுக்கு வரணும். உடம்பு சரியில்லைன்னா ஆஸ்பத்திருக்குத்தான் போகணும்' என சொல்லும் அளவுக்கு பகுத்தறியும் திறன் கொண்ட பூசாரியாக செந்தில். விஷ்ணுவிஷாலின் தாயாராக ஜீவிதா. அவரை யார் இந்த அளவுக்கு ஓவர் ஆக்ட்டிங் செய்யச் சொன்னது என தெரியவில்லை. தம்பி ராமையாவே யதார்த்தமாகத்தான் நடிக்கிறாரோ என நம்பும் அளவுக்கு நடிப்பை வாரி இறைத்திருக்கிறார் ஜீவிதா. முடியல மேடம்..!. தன் அரசியல் வெற்றிக்காக பிரிவினையை எந்தக் கூச்சமுமின்றி இயல்பாக செய்யும் வேடம் விவேக் பிரசன்னாவிற்கு. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அட தான்யாவா இது என கண்களை விரித்துப் பார்ப்பதற்குள், அவரின் கதாபாத்திரம் முடிவடைந்துவிடுகிறது. இதற்கா சமூக வலைத்தளங்களில் அத்தனை அக்கப்போர்கள் என சொல்ல வைத்துவிட்டது அவரின் சின்ன கதாபாத்திரம்.
கேமியோ என்று சொன்னாலும் ரஜினி படம் முழுக்கவே வருகிறார். பாட்ஷா பாய் அளவுக்கு இல்லையென்றாலும், மத நல்லிணக்கத்தோடு , நியாயமாக வாழ முயலும் மொய்தீன் பாயாக ரஜினி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாம் நாயகனான விக்ராந்தை விடவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். தற்போதைய இந்தியாவில் நாள்தோறும் மைனாரிட்டிகளுக்கு நிறைய அழுத்தங்கள் தரப்படுவதாக செய்திகளில் படிக்கிறோம். அப்படியானதொரு சூழலில், திரையில் தோன்றும் பெரிய ஹீரோக்கள் மத நல்லிணக்கம் சார்ந்து பேசுவது நல்லதொரு அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதிலும் , ரஜினி மாதிரியான ஒரு சூப்பர் ஸ்டார் இப்படியானதொரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் போது, அது இன்னும் பரவலாக பலரைச் சென்றடையும். காலாவுக்குப் பிறகு ரஜினிக்கு நல்லதொரு கதாபாத்திரம்.
கதாபாத்திரங்களும், வசனங்களும், கதைக்கருவும் சிறப்பாக இருந்தும் படம் நம்மை சோதிக்கக் காரணம், அதன் இயக்கம். திரைக்கதை மாறி மாறி பயணிப்பதில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாததாலும், விக்ராந்திற்கு என்னவாகியிருக்கும் என்பதை எளிதாக யூகிக்கும்படி இருப்பதாலும் நமக்கு கதை மேல் ஒரு பிணைப்பு வராமல் போய்விடுகிறது. பல காட்சிகள் துண்டு துண்டாக இருக்கின்றன. கதையில் இருக்கும் அடர்த்தியை திரைக்குக் கடத்தத் தவறவிட்டார்கள். அதனாலேயே ரஜினியும், விஷ்ணு விஷாலும் ஓவர்டைம் பார்க்க வேண்டியதிருக்கிறது. ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
இக்கால சூழலில், அழுத்தமான ஒரு படைப்பை எந்தவித சமரசமுமின்றி தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். தன் முந்தைய படங்களைவிடவும் அடர்த்தியான அரசியல் கதைக்களம். வசனங்களும் பக்க பலமாக உதவியிருக்கின்றன. திரைக்கதையும், இயக்கமும் மட்டும் கைகூடியிருந்தால் இன்னும் சிறப்பான படைப்பாக வெளிவந்திருக்கும்.
மதவெறி பிடித்துத் திரியும் கும்பல் கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா இந்த லால் சலாம்.