நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தி இப்படியெல்லாம் கூடவா ரசிகரை ஏமாத்துவாங்க?- பரபரப்பு சம்பவம்

நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தி இப்படியெல்லாம் கூடவா ரசிகரை ஏமாத்துவாங்க?- பரபரப்பு சம்பவம்

நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தி இப்படியெல்லாம் கூடவா ரசிகரை ஏமாத்துவாங்க?- பரபரப்பு சம்பவம்
Published on

ரசிகர் மன்றம் மூலமாக அஜித்குமார் பெயரில் வீடு கட்டி தருவதாகக் கூறி, ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மோசடி செய்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாளையூத்தை சேர்ந்த சிவா என்பவர், அஜித் ரசிகர் மன்ற மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று அவரை நம்ப வைத்ததுடன், நடிகர் அஜித் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருகிறார் என ஆசை வார்த்தை கூறி தனது கணவரை ஏமாற்றி விட்டதாக ராஜேஸ்வரி புகார் கொடுத்துள்ளார்.

வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும் பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கனவுக்கு வந்துவிடும் என்றுக் கூறி, சிவா என்பவர் ஐயப்பனை ஏமாற்றி உள்ளதாக ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரை உறுதிபட நம்ப வைப்பதற்கும், அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும், நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து, ஐயப்பனிடம் பேசி அவர் பணி புரியும் இடத்திற்கு சென்று இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்து, ஏமாந்துள்ளதாகவும் தனது புகார் மனுவில் ராஜேஸ்வரி குறிப்பிட்டிருக்கிறார். தாங்கள் ஏமாந்ததை அறிந்து சிவாவிடம் கேட்டதற்கு, ‘இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம்’ என கொலை மிரட்டல் விடுவதாகவும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அஜித்தின் ரசிகரான ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்டு ரசிகர் ஒருவரிடம் அஜித் ரசிகர் மன்றம் பெயரில் மற்றொருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com