இந்த கொரோனா காலக்கட்டத்தில் உருவாகியிருக்கும் சிரமங்களை கருத்தில்கொண்டு மலையாள திரைப்பட நடிகர் சங்கம் (AMMA) கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு(KFPA) ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது.
KFPA கடந்த ஜூன் மாதத்தில் நடிகர்கள் மற்றும் திரைத்துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மலையாள திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட ஊழியர் சங்கத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கும் வருமானம் ஈட்டித்தர அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இதுபோன்ற கடினமான நேரங்களில் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நடிகர்களுக்கு, மலையாள நடிகர் சங்கம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ’’ஊரடங்கு என்பது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இன்னும் அமல்படுத்தப்படலாம். பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் திரைத்துறையில் நிறையப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தயாரிப்பாளர் சங்கம் AMMAவிடம் வைத்த வேண்டுகோளை ஆதரிக்கிறோம். இனிவரும் காலங்களிலும் எங்களுடைய உதவி எப்போதும் இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே படப்பிடிப்புத் தொடங்கிய திரைப்படங்களில் மட்டுமே AMMA தலையிடமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.