600 தியேட்டர்களில் ரிலீஸ்... மோகன்லால் படத்துக்கான சிறப்பு அனுமதியால் சர்ச்சை!

600 தியேட்டர்களில் ரிலீஸ்... மோகன்லால் படத்துக்கான சிறப்பு அனுமதியால் சர்ச்சை!
600 தியேட்டர்களில் ரிலீஸ்... மோகன்லால் படத்துக்கான சிறப்பு அனுமதியால் சர்ச்சை!
Published on

கொரோனா பரவல், பொதுமுடக்கம் காரணமாக 17 மாதங்களாக மலையாள திரையுலகம் முடங்கி இருக்கும் நிலையில், முன்னணி நடிகர் மோகன்லாலின் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மலையாள சினிமாவின் 'மோஸ்ட் வாண்டட்' கூட்டணியான மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான பெரிய பட்ஜெட் படம் 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'ஆஷிர்வாத்' சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

பிரபு, அர்ஜுன் என ஒரு நடிகர் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. 2019ம் ஆண்டே தயாராகிவிட்டாலும், அடுத்தடுத்த கொரோனா பேரலையால் சிக்கி படம் வெளியிட முடியாமல் இருந்து வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் படம் தொடர்பாக கேரளாவின் ஐக்கிய அமைப்பு மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் ஆகஸ்ட் 12 முதல் கேரளாவில் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரத்யேகமாக மூன்று வாரங்கள் 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட துறையைச் சேர்ந்த தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் அடங்கிய கேரளாவின் ஐக்கிய அமைப்பு (FEUOK) மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மலையாள திரைப்படத் துறையை புதுப்பிக்க ஒருமித்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த மூன்று வார காலத்துக்கு வேறு எந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்றும், கொரோனா தொற்று நிலைமை தணிந்தவுடன் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வர ஒரு பெரிய படம் தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

எவ்வாறாயினும், நிலைமை இன்னும் சாதகமாக இல்லை என்று அவர்கள் கருதுவதால், வர்த்தக நிறுவனங்கள் உடனடியாக தியேட்டர்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காது என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக பேசியுள்ள FEUOK-இன் தலைவர் கே.விஜயகுமார், ``கொரோனா தாக்கம் குறையாததால் பல மாவட்டங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்களை முழுமையாக திறக்க முடியாது. வரும் வாரங்களில் நிலைமை குறையும் என்று நம்புகிறோம். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டால் தியேட்டர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தப் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது மற்ற படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விவரித்துள்ள கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித், ``இந்த திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிவிட்டதால் பிரத்தியேக திரையிடலுக்கு தகுதியானது. திரைப்படத்தின் தணிக்கை 2019-ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. முதல் லாக்டவுன் வந்தபோது மார்ச் 2020-இல் வெளியீட்டுக்கு தயாராக இருந்தது" என்றுள்ளார். மே மாதத்தில் கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பின்னர் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் மட்டுமின்றி, பஹத் பாசில் - மகேஷ் நாராயணன் கூட்டணியின் 'மாலிக்', நிவின் பாலி-ராஜீவ் ரவி இணைந்துள்ள 'துறைமுகம்', பிருத்விராஜின் 'குருதி', 'ஆடுஜீவிதம்', லிஜோ ஜோஸ் பல்லிசேரியின் 'சுருளி', துல்கர் சல்மானின் 'குரூப்' என டஜன் கணக்கில் படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், பெரிய பட்ஜெட் படம் என்ற அடிப்படையில் மட்டும் இந்தப் படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com