நடிகர் மோகன்லால் நடிப்பில் விரைவில் தொடங்கவுள்ள ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் படமான மகாபாரதத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
எம்.டி.வாசுதேவனின் விருது பெற்ற பிரபல நாவலான ரண்டாமூழம் என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு மகாபாரதம் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகாபாரதம் எனும் பெயரில் திரையிட விட மாட்டோம் என்று அறிவித்த கேரள இந்து ஐக்கிய வேதி அமைப்பினர் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி படக்குழுவினரை வலியுறுத்தினர். இதனால் மகாபாரதம் படத்தை தொடங்குவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தயாரிப்பாளர் பி.ஆர். ஷெட்டிக்கு தனது முழு ஆதரவை தருவதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "மகாபாரதம் படத்தினை காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். தேசத்தின் பெருமையை எடுத்துரைக்கும் படமாக இது உருவாகவுள்ளது" என குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து படக்குழுவினர் ஜூலை 7 ம் தேதி பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
இதையடுத்து, நேற்று தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரள இந்து ஐக்கிய வேதி அமைப்பினர் மகாபாரதம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு மிகவும் கவலை அளித்தது. ஆனால் தற்போது பிரதமரிடம் இருந்து பெற்ற கடிதம் புதுத் தெம்பை அளித்துள்ளது. படம் இந்தியா முழுவதும் ரண்டாமூழம் என்ற நாவலின் தலைப்பிலும், உலகம் முழுவதும், மகாபாரதம் என்ற தலைப்பிலும் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். இந்த நாவலின் கதை பீமனின் பார்வையிலிருந்து மகாபாரதக் கதையை கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக இந்த படம் தயாரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு படமும் 3 மணி நேரம் ஓடும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பெரிய நட்சத்திர நடிகர்களால் பிரமாண்டமாக இப்படம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த படத்திற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.