'நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி நடிப்பில் வரும் 20-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்தவாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்திருந்தது. குறிப்பாக, சாதி குறித்த வசனங்கள் பொது சமூகத்தினரின் மனசாட்சியை உலுக்கும் விதமாக நெஞ்சை சுடும்படி காட்சிகளுடன் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
”முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு. அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது, இப்படத்திற்கு யாரை இயக்குநராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. ’கனா’ படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்டபோது, அருண் ஒத்துகொண்டார். நான் ’நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, ’பார்த்து பண்ணுங்க’ என்றார்.
ஆனால், படம் எடுக்கும்போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்ப்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். படம் சமூகநீதி பேசும். இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசியிருந்தார் உதயநிதி.
இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சிறப்புக் காட்சியைப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். இதில், முதல்வர் மு.க ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், உதயநிதி, அருண்ராஜா காமராஜ், போனி கபூர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.