நடிகைக்கு பாலியல் வன்கொடுமை: பிரபல நடிகர் மகன் மீது வழக்கு!
பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. சுமார் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ’யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் மகன் மஹா அக்ஷ்ய். நடிகரான இவர், இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துவரும் நடிகை ஒருவருடன் நெருங்கி பழகி வந்தார். இந்நிலையில் அவர் மீது அந்த நடிகை, பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், திருமணம் செய்வதாகக் கூறி மஹா அக்ஷய் தன்னை கடந்த நான்கு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கர்ப்பம் ஆனதை அடுத்து மாத்திரைகள் கொடுத்து அதை கலைக்க வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். இதை அறிந்த மஹா அக்ஷயின் தாய் யோகிதா பாலி தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ஏக்தா கவுபா, நடிகர் மஹா அக்ஷய், அவர் தாய் யோகிதா பாலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.