மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, அஞ்சு குரியன், ஷாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
மிர்ச்சி சிவா பேசியபோது பாடல்கள் மிகவும் புதுமையாக, அருமையாக இருந்தது, அதற்கு இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள் என்றும், இந்த பாடலுக்கு நான் நடனம் ஆடும்போது ஆயிரம் பேர் என்னை பார்த்தனர் என்றார். 26,000 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் மனோவை படப்பிப்பு நாட்கள் முழுவதும் அவரை பாட சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன் என கூறிய அவர், எனக்காக எனக்கு பிடித்த செண்பகமே பாடலை இப்போது பாட கேட்டு கொள்கிறேன் என்று நடிகர் சிவா சொல்ல, உடனே மேடையில் செண்பகமே பாடலை பாடினார் பாடகர் மனோ.
தொடர்ந்து செய்தியர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவா, “சூப்பர் ஸ்டார் பிரச்சனை தமிழ்நாடு, இந்தியா, இந்த உலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது கேலக்ஸிகளை கடந்து Black Hole (பிளாக் ஹோல் ) கிட்டே போய்ட்டோம். நமக்கு போட்டியே கிடையாது” என்று அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “பட்டத்திற்கு நம்ம ஆசைப்படுவது கிடையாது. அவர்களே கொடுப்பது. பிரபு தேவாவை கூட கேட்பதில்லை, இன்றும் எங்கு சென்றாலும் இரண்டு ஸ்டெப் என்னை தான் போட சொல்கிறார்கள். என்றைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அகில உலக சூப்பர் ஸ்டார் நம்மதான்.
ஹீரோயினையே பார்க்காமல் பண்ணிய படம் இதுதான். படத்தில் மேகா ஆகாஷை பார்க்கவே இல்லை. தினசரி பட ஷூட்டிங் போது கேட்பேன். அவர் போர்ஷன் வேறு, என் போர்ஷன் வேறு, அதனால் கடைசி வரை அவரை பார்க்கவே இல்லை. இயக்குனர் ராம் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். தற்போது ராமின் படத்தில் நடிகையின் போர்ஷன் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பட ஷூட்டிங்கில் இணைய உள்ளேன். ராம் இயக்கத்தில் படம் வெளிவரும் போது அகில உலக சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என நானே சொல்லி விடுவேன். கிரிக்கெட் மேல் அதிகம் காதல் உள்ளது. CCL ஆட்டத்தில் அதனால் தான் கலந்து கொண்டேன்.
இவர் சினிமா கலைஞர், கிரிக்கெட் வீரர் இல்லை என்பது கிரிக்கெட் பந்துக்கு தெரியாது. பந்தில் அடி வாங்கியுள்ளேன். ‘தமிழ்ப்படம் 3’ இயக்க அனைத்து இயக்குனர்களிடம் பேச வேண்டும். ‘அவதார்’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் வேறு வந்துள்ளது. ரோஹித் சர்மாவுடன் அவரைப் போல் என்னை ஒப்பிட்டு மீம் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. என்னைப் போல் அவரால் டான்ஸ் ஆட முடியாது” என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம் என பாடி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சிங்காரவேலன்’ படத்திற்கு பிறகு இளையராஜா தன்னை அழைத்து ‘நடிக்க போனால், உனக்காக பாடல் காத்திருக்காது’ எனக் கூறியதாகவும், அதனால் அதற்கு பிறகு அதன் பக்கமே செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளேன் அனைவருக்கும் நன்றி என்றார்.
“சிவாவிற்கு Positive எனர்ஜி அதிகம் அதை அனைவருக்கும் கொடுப்பார் அவருக்கும் நன்றி. மேலும் கொரோனாவிற்கு பிறகு அநேக கச்சேரிகள் இருந்தது, அதற்கு நான் போக வேண்டும் என கேட்டுக்கொண்டபோது எனக்காக படைப்பிப்பு நாட்களை மாற்றி அமைத்து கொடுத்தனர்” என்றார். மேலும் இந்த நிகழ்வில் மறைந்த நடிகர் மயில்சாமிக்காக மௌன அஞ்சலி செலுத்தினர் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படக்குழுவினர்.