புது திரைப்படங்களுக்கு நிகராக எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜிஆர் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்.
மே 11 தேதி 1973 ஆம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அவருக்கும் அதிமுக-வுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம். கடந்த ஆண்டு இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியானது.
ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், லதா, மஞ்சுளா நடிப்பில் உருவான இப்படம் எம்ஜிஆர் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் மதுரையில் உள்ள சக்தி சிவம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
விடுமுறை நாளான இன்று எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திரையிடப்பட்டதால் அதனை எம்ஜிஆர் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் எம்ஜிஆரின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், தீபாராதனை காண்பித்தும் எம்ஜிஆர் வாழ்க என கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.
அதிமுகவின் எம்ஜிஆர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இன்றைய காலகட்டத்தில் விஜய், அஜித் திரைப்படங்களை அவர்கள் ரசிகர்கள் கொண்டாடுவது போல எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை கொண்டாடினர்.