மேதகு: திரைப் பார்வை - சொல்லப்பட்டே ஆகவேண்டிய ஒரு முக்கியமான முயற்சி!

மேதகு: திரைப் பார்வை - சொல்லப்பட்டே ஆகவேண்டிய ஒரு முக்கியமான முயற்சி!
மேதகு: திரைப் பார்வை - சொல்லப்பட்டே ஆகவேண்டிய ஒரு முக்கியமான முயற்சி!
Published on

ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைமைக்காலம் தொடர்பான நிகழ்ச்சிகளை விவரிக்கும், ‘மேதகு’  படம் பற்றிய திரைப்பார்வை.

உலக திரைப்படங்களில் போர்களைப் பற்றியும், தீவிரவாதக் குழுக்களை பற்றியும், போராளிகளைப் பற்றியுமான படங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன. இதில் யார் தீவிரவாதக்குழு என்பதும், யார் போராளிகள் என்பதும் அந்தந்த திரைப்படங்கள் எடுக்கப்படும் நாடுகளுக்கு ஏற்றது போலவும், தனிப்பட்ட படைப்பாளியின் சிந்தனையை முன்னிறுத்தியும் இருக்கும். ஒரு மிகப்பெரும் மக்கள் எழுச்சி ஒன்று புரட்சியாக பார்க்கப்படுவதும், அரசியல் கலவரமாக பார்க்கப்படுவதுமான இருவேறு பார்வை எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. மேலும், இங்கே திரைப்படங்களில் காட்டப்படும் விஷயங்கள் மக்களின் மனதில் புகுந்து, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு குறிப்பிட்ட குழுவின் மீதுள்ள பார்வையையே மாற்றும் சக்தியையும் கொண்டுள்ளன. அந்த வகையில் நாஜிக்களின் அட்டகாசங்களாகட்டும், பிரெஞ்சு புரட்சியின் விளைவுகளாகட்டும், ரஷ்ய - அமெரிக்க பனிப்போர் ஆகட்டும் எல்லாவற்றையும் மக்கள் பார்க்கும் பார்வையை மாற்றிய சினிமாக்களும் இங்கே உண்டு.

மேற்சொன்ன யாவும் நாம் வரலாற்று புத்தகங்களில் படித்தோ அல்லது கேட்டோதான் அறிந்திருப்போம். ஆனால், நம் அண்டைநாட்டில் இருந்த, நம்மைப்போல் தமிழ் பேசுகிற விடுதலைப்புலிகள் பற்றியோ அல்லது அதன் தலைவராக இருந்து வழிநடத்திய பிரபாகரன் பற்றியோ இங்கே கவனிக்கத்தக்க ஆவணப்படம் கூட கிடையாது. ஆங்காங்கே சில காணொளித் துணுக்குகள் மட்டுமே கிடைக்கும். பிரபலங்கள் அதைப்பற்றி பேசிய காணொளிகளும் இதில் அடக்கம். ஈழப் பிரச்னையை மையப்படுத்தி சினிமா எடுப்பதில் இருக்கும் சிரமம் நீங்கள் அறிந்ததே. உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் அதற்கான முயற்சியில் எப்போதுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கூட இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது, அப்படி பெரும் முயற்சி ஒன்றில் வெளிவந்திருக்கும் படமே 'மேதகு'.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் பலரும் ஈழப்போர் பற்றிய விவரங்களையும், சிங்கள அரசின் செயல்பாடுகளையும் தொலைக்காட்சி மூலமாகவும், செய்தித்தாள்கள் மூலமாகவும், சில புத்தகங்கள் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள். எந்தப்புள்ளியில் பிரபாகரன் ஆயுதம் ஏந்தும் முடிவை எடுத்தார் என்கிற கேள்விக்கான பதிலாக, அதன் வேரைத்தேடி செல்லும் பயணமே இந்தப் படம். இதற்கு முன் யாரும் பதிவு செய்யாத ஒரு விஷயம் இது என்பதே இந்தப் படத்தின் முதல் சிறப்பம்சம். பல எதிர்கால படிப்புகளுக்கான அச்சாணியாக இந்தப் படைப்பு அமையும் என்பதும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்யும்.

மதுரையில் ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில் பிரபாகரனின் கதையை இரண்டு கலைஞர்கள் சொல்வது போல தொடங்குகிறது கதை. பிரபாகரனின் பிறப்பு, அவரது பால்யம் என தொடரும் இந்தக் காட்சிகளுக்கு இடையே, எப்படி அமைதியை மட்டுமே அறிவுறுத்திய, அன்பை மட்டுமே போதித்த புத்தரின் சீடர்கள் என்னும் போர்வையில் அரசியல் செய்யும் சிங்கள - புத்த பிக்குகள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அரசியல் செய்தார்கள் என்பதையும் விளக்குகிறது. பிரதமரான பண்டாரநாயகே ஆட்சியில் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டம் இயற்றியதை ஏற்றுக்கொள்ள இயலாமல், புத்த பிக்கு ஒருவரே பண்டாரநாயகேவை சுட்டுக் கொல்கிறார். அந்த நேரத்தில் தமிழர்களின் நலனுக்காக போராடிய ஈழத் தலைவர்களில் ஒருவரான செல்வாவைப் பற்றியும் கதை பேசுகிறது. தமிழருக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து சிங்களவர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட, அப்பாவித் தமிழர்கள் அடித்தே கொல்லப்பட்டனர் பல இடத்தில். உயிரோடு எரிக்கப்பட்ட மனிதர்களும் அதில் உண்டு.

இதையெல்லாம் கேள்வியுறும் சிறுவன் பிரபாகரன் தன் தந்தையிடம், "நாம ஏன் திருப்பி அடிக்கல?" என்கிற கேள்வியை வினவுகிறான். இந்தக் கேள்வியே விஸ்வரூபம் பெற்று அவன் இளமைக்காலம் முழுதும் துரத்துகிறது. ஒருகட்டத்தில் அவன் திருப்பி அடிப்பதே சரி என்பதை உணர்ந்து அதை செயல்படுத்துகிறான். தலைமறைவாகிறான். இந்த தலைமறைவு வாழ்க்கையின்போது உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடக்கிறது. அதில் கலவரமும் வெடிக்கிறது. கலவரத்தில் தமிழர்கள் பலர் கொல்லப்பட, அதற்கு பழிவாங்கும் விதமாகவும், தமிழனாய் இருந்தும் சிங்கள போலீசை ஏவிய ஆல்பர்ட் செல்லப்பா என்கிற மேயரை நடுரோட்டில் தன் நண்பர்களின் உதவியோடு சுட்டுக்கொல்கிறார் பிரபாகரன். இதுதான் பிரபாகரன் என்கிற இளைஞன், ஒரு மிகப்பெரும் போராளியாக, உலகமெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் தலைவராக மாறுவதற்கான விதையாக இருந்ததென்று கூறுகிறது படம்.

ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக நோக்கினால் 'மேதகு' திரைப்படம் ஒரு முழுமையற்ற படைப்பு என்பதே சரியாக இருக்கும். பல விஷயங்களை, அதுவும் இலங்கையின் ஆரம்பகால அரசியல் தொட்டு சில முக்கியமான விஷயங்களை சொல்லவேண்டிய கட்டாயம் இருந்ததால், பிரபாகரன் பற்றிய கதைக்கான இடம் திரைக்கதையில் மிகக்குறைவாகவே இருந்ததை நாம் கவனிக்கலாம். அதுமட்டுமின்றி, அவ்வாறாக சொல்லப்படும் ஈழப்போராட்ட கதைகளிலுமே கூட ஒரு முழுமை இல்லை என்பதே உண்மை.

குறிப்பாக, பிரபாகரனுக்கு முன்பாகவே ஈழத்தில் பல ஆயதம் தாங்கிய போராட்டங்கள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால், இந்த படத்தில் அவை எங்கும் பதிவாகவில்லை. மேம்போக்காகவே அணுகப்பட்டுள்ளது. இந்த மேம்போக்கு அணுகுமுறை ஆழமான ஒரு வரலாற்றை சொல்லும்போது ஆயாசம் தருவதை தவிர்க்கவும் இயலாது. அதுதான் நிகழ்ந்திருக்கிறது.

ஆயினும், படத்தில் பாராட்டப்பட வேண்டிய காட்சிகள் நிறையவே இருக்கிறது. குறிப்பாக, அந்த தெருக்கூத்து மூலம் கதை சொல்லுதல் மிக நன்றாக வந்திருக்கிறது. அந்த கூத்துக் கலைஞர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஈழக்கதையை சொல்லும் பாங்கும், அவர்களது முகபாவனைகளை மிகச்சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல் பிரபாகரனாக நடித்திருக்கும் இளைஞரும் மிக நல்ல தேர்வு. அவரது கண்கள் பேசுகின்றன. அவரது உடல்மொழியும் கூட ஒரு போராளிக்குரியதாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தப்படம் வணிக ரீதியான ஓர் அணுகுமுறையைக் கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். வழக்கமாக நம் ஊர்களில் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ஆவணப்படங்கள் போலவே அணுகப்படும். 'பாரதி' போன்ற ஒரு சில படங்களே அதில் விதிவிலக்கு. ஆனால் 'மேதகு' திரைப்படம் ஒரு மாஸ் ஹீரோ படம் போல எடுக்கப்பட்டிருக்கிறது. கேமரா கோணங்களும், பின்னணி இசையும் அவ்வாறே இருக்கிறது. ஒளிப்பதிவு குறிப்பிடும்படியாக இருந்தாலும் கூட பின்னணி இசை நம் காதுகளை சோதிக்கிறது. எல்லா இடங்களிலுமே இசை பின்னல் ஒலித்துக்கொண்டே இருப்பது நம்மை களைப்பாக்குகிறது. ஆனால், படத்தில் இடம்பெறும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, உலகத் தமிழராய்ச்சி மாநாடு அன்று ஒலிக்கும் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் பட்டாசாக இருந்தது. அந்தப் பாடலை தனியாகவே வெளியிடலாம். அந்தளவிற்கு சிறப்பாக இருந்தது.

வரலாற்று ரீதியாக சில பல சமரசங்களை இந்தப் படம் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ஆல்பர்ட் செல்லப்பா மரணித்தபோது அவருடன் அவரது மகளும் இருந்ததாக குறிப்புக கூறுகின்றன. ஆனால், படத்தில் அது இல்லை. அதேபோல் பகத்சிங்கையும், நேதாஜியையும் பிரபாகரன் கொண்டாடினார் என்பதால், அதற்கு ஆதரவாக சில வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக "வெள்ளைக்காரனுக்கு எதிரா படையைக்கட்டி சுபாஷ் சந்திர போஸ் போராடுனதுனாலதான் வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு ஓடுனான்.." என்று பிரபாகரன் பேசுவதாக வரும் வசனம் இந்திய வரலாறுக்கு சற்றே எதிரானது. காந்தியை முதன்மைப்படுத்தியே இங்கே சுதந்திர கோஷம் இருந்தது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மேலும், புத்த பிக்குகளை வில்லனாக காட்ட எண்ணி, அவர்களை காட்சிப்படுத்திய விதம் மசாலா படங்களை விட தரம் குறைவாக இருந்ததை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அந்தக் காட்சிகள் எல்லாம் சலிப்பையே தந்தன. இன்னும் நன்றாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சிகள் அவை. சிங்களவர்களின் வெறியாட்டங்களை கண்டு வெகுண்டெழுந்த, ஆயுதம் தூக்க தயாராக இருந்த சிலர் படத்தில் வந்தாலும் கூட அவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அந்த வரலாறுகளும் சற்று அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தால், இதுவரை ஈழப்போராட்டம் பற்றிய தெளிவில்லாமல் இருக்கும் ஆட்களும் கூட அதை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த படம் இருந்திருக்கும். அது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.

மதம், மொழி ஆகியவற்றின் மீதிருக்கும் வெறி நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும் ஒரு யுத்தமே ஈழப் போராட்டத்தின் விதை. "எப்பொழுதும் நீ எங்களுக்கு கீழேதான் இருக்கவேண்டும்" என்கிற அந்த ஆதிக்கம் உலகத்திற்கு பொதுவானது. சாதிரீதியாக இந்தியாவெங்கும், நிறரீதியாக உலகமெங்கும் அப்படி ஒடுக்கப்படுபவர்கள் வரலாற்றை நாம் அறிந்தே இருக்கிறோம். அவை புத்தகங்களாக, திரைப்படங்களாக, தொலைகாட்சி தொடர்களாக எல்லா வடிவத்திலும் மக்களிடம் சென்று சேர்ந்துகொண்டே இருக்கின்றன. அவ்வகையில் 'மேதகு' ஒரு முக்கியமான முயற்சி.

ஒரு பெரும் கனவு நனவான நிகழ்ச்சி. ஒரு சினிமா என்கிற நோக்கில் படத்தில் பல குறைகள் இருந்தாலும் கூட, இந்த வரலாறு சொல்லப்பட்டே ஆகவேண்டிய ஒன்று. அதற்கான விதை இது. இந்த விதை இன்னும் பல பாகங்களாக எடுக்கப்பட்டு, விருட்சமாக மாறவேண்டும் என்பதே 'மேதகு' படம் சொல்லும் சேதியும் கூட. ஏனெனில் கதைகளைத்தான் மறைக்க முடியும்; மறுக்க முடியும்; வரலாறுகளை அல்ல.

'மேதகு' படம் இப்போது 'ப்ளாக் ஷீப்'பின் BS Value என்னும் ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com