விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி ‘மேதகு 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கதை, திரைக்கதை, வசனம் அமைத்து மேதகு படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் கிட்டு. கடந்த ஜூன் 25 ஆம் தேதி BS Value ஓடிடி தளத்தில் ‘மேதகு’ திரைப்படம் வெளியானது. ரூ. 60 லட்சம் பட்ஜெட்டிலேயே சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்ற கவனத்தையும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மேதகு 2’ ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ‘மேதகு’ படத்தை கிட்டு இயக்கியிருந்தார். ஆனால், இரண்டாம் பாகமான ‘மேதகு 2’ படத்தை இரா.கோ யோகேந்திரன் இயக்கியிருக்கிறார். மேதகு திரைக்களம் தயாரித்திருக்கிறது.
ட்ரைலரில் “இந்தக் கண்களால்தான் தமிழீழத்தைப் பார்க்கப் போறியா” என்று கேட்டுக்கொண்டே சிங்களவர் ஒருவர் தமிழரின் கண்களை குத்துவதும் அதன் ரத்தக்கரை, அருகே இருக்கும் புத்தர் சிலை மீது படுவதும் தமிழர்கள் பட்ட துயர சாட்சியத்தின் வலியை உணர்த்துகின்றன. ‘மேதகு’ பாகம் ஒன்று பிரபாகரனின் இளம் வாழ்க்கையை விவரித்தது.
‘மேதகு 2’ பிரபாகரன் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியால் வெகுண்டெழுந்து எப்படி இளைஞர்களைக் கொண்டு ராணுவத்தை கட்டமைக்கிறார்... தலைவராக உருவாகிறார் என்பதையெல்லாம் வலியுடன் பார்ப்பவர்களுக்கு கடத்துகிறது. ட்ரைலரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் குட்டி மணி பிரபாகரனாக நடித்திருந்த நிலையில், இந்தப் பாகத்தில் மற்றொருவர் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார்.