பல சிக்கல்களில் சிக்கித்தவித்த மெர்சல் தீபாவளிக்கு உறுதியாக வெளியாகுமா? என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
விஜய் படங்கள் என்றாலே சிக்கல் இருக்கும். கத்தியில் தொடங்கிய பிரச்னை இப்போ மெர்சல் வரை பல ரூபங்களில் வந்து வதைக்கிறது. ராஜேந்திரன் என்பவர் எங்களது படத் தலைப்பு சாயலில் உள்ளது என நீதிமன்றம் ஏறி முறையிட்டார். மெர்சலாகிட்டேன் தலைப்புக்காக அவர் மெர்சலை தடை செய்ய வேண்டும் என்றார். நீதிமன்றம் முதலில் விளம்பரம் செய்வதற்கு தடை விதித்தது. பிறகு வணிக குறியீடு வாங்கியுள்ளார்கள் என கூறி மெர்சல் தடையை நீக்கியது.
இது முடிந்து பிறகு சினிமா டிக்கெட் பிரச்னை தலைத்தூக்கியது. ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி என சர்ச்சை தொடர்ந்ததால் மெர்சல் வெளிவருவது உறுதியா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் இன்று கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்து அறிவித்துள்ளது. ஆகவே திரையரங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளன. இதன் மூலம் மெர்சல் தீபாவளிக்கு பல தடைகளை மீறி வெளி வருவது உறுதியாகி விட்டது என ரசிகர்கள் நம்பி இருந்தனர்.
தற்போது மெர்சல் டீசர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த டீசரில் மேஜிக்மேன் விஜய் புறாவை வரவழைப்பதன் மூலம் பறவை மீது துன்புறுத்தல் நடந்துள்ளதா? என கேள்வி எழுந்தது. அது கிராபிக்ஸ் புறா என நிரூபிக்கும் ஆதாரங்களை படக்குழு இன்னும் கொடுக்கவில்லை என்றும் படத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜநாகத்தை தவறாக நாகப்பாம்பு எனக் குறிப்பட்டிருப்பதாகவும் விலங்கு நல வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இன்று மெர்சல் திரைப்பட தணிக்கை சான்று குறித்து விலங்குகள் நல வாரியம் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்று பெறாத நிலையில் தணிக்கைச் சான்று எப்படி வழங்கினீர்கள்? என விலங்குகள் நல வாரியம் கேட்டுள்ளது. ஆகவே மெர்சல் சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளது. இதனால் தீபாவளிக்கு படம் வருமா? வராதா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.