ஏழை திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவதாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளதைப் போன்று, மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், மெகா ஸ்டாருமான நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, நேற்று சிரஞ்சீவியின் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘காட்ஃபாதர்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் நயன்தாரா, பூரி ஜெகந்நாத், பிஜூ மேனன், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாளப் படமான ‘லூசிஃபர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நலிந்த அதாவது தெலுங்கு திரைப்பட ஏழை தொழிலாளர்களுக்காக சித்ராபுரி காலனியில், தனது மறைந்த தந்தை கொனிடேலா வெங்கட் ராவ் பெயரில் அவரின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிரஞ்சீவி அறிவித்தார். அடுத்தவருட தனது பிறந்தநாள் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் வகையில் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சிரஞ்சீவியின் இந்த முடிவை அடுத்து, அவருக்கு உதவுவதற்காக தெலுங்கு திரைப்பட கிரிக்கெட் சங்கம் 20 லட்சம் ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. மேலும் மருத்துவமனை கட்டுவதற்காக, இசை நிகழ்ச்சிமூலம் பணம் திரட்டி தருவதாக இசையமைப்பாளர் தமன், நடிகர் சிரஞ்சீவிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். இதற்கு நடிகர் சிரஞ்சீவியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் “நான் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது தெலுங்கு திரையுலகம் வாயிலாகத்தான். தற்போது தெலுங்கு திரையுலகிற்கு திரும்ப கொடுக்க வேண்டிய நேரம் இது. கோடிக்கணக்கில் செலவு செய்தாவது நிச்சயம் மருத்துவமனை கட்டுவேன்” என்று சிரஞ்சீவி உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிரஞ்சீவியின் முடிவை பாராட்டிள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவாதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.