தியேட்டரா, ஓடிடியா? - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு!

தியேட்டரா, ஓடிடியா? - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு!
தியேட்டரா, ஓடிடியா? - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு!
Published on

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் வருகிறார் விஜய் சேதுபதி. சிறுவயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 'மாஸ்டர்' படமும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தகவலால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் பரவி வருவதை அடுத்து ‘மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும்’ என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் வெளியிட்டை எந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதை அறிவோம். மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதே தற்போதைய சூழலில் சரியாக இருக்கும்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். பிரபலமான ஓடிடி தளங்களில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம்.தமிழ் திரைப்பட துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாஸ்டர் படம் எதில் வெளியீடு, எப்போது வெளியீடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயம் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என மாஸ்டர் படக்குழு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை தெரிவிக்கிறது. என்ன முடிவு என்பதை விரைவில் சொல்கிறோம் என்று கூறியுள்ளதால் தியேட்டரா? ஓடிடியா? என்ற குழப்பம் இந்த அறிக்கைக்கு பின்னும் தொடரும் என்றே தெரிகிறது. எனினும் அடுத்த சில வாரங்களில் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு அதன் மூலம் தங்களது இறுதி முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com